Sun. May 19th, 2024

கடலூர் திமுக எம்.பி. டிஆர்வி.ரமேஷின் அராஜகம், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி திமுக நிர்வாகிகள் கவலையுடன் பேசுகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம், தன் மீது கொலைப்பழி விழுந்தவுடனேயே மிகுந்த ஜனநாயக பொறுப்போடு தாமாக முன்வந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, போலீஸ் விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று குமறுகிறார்கள் கடலூர் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.

அவர்களின் குமறலுக்கான பின்னணி இதுதான்…

கடலூர் மாவட்டத்தில் திமுக முன்னோடிகள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் போது, பல நூறு கோடி ரூபாய்க்கு அதிபதியான முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் ரமேஷுக்கு எம்.பி. பதவி தூக்கி கொடுக்கப்பட்டது. அப்போதே உள்ளூர் திமுக நிர்வாகிகள், அவரின் தேர்வை ரசிக்கவில்லை. பண்ருட்டியைச் சேர்ந்த ரமேஷ், திமுக.வின் கட்சி நிகழ்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ ஒரு போதும் பங்கேற்றவர் இல்லை. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளராக ரமேஷ் அறிவிக்கப்பட்டார். அப்போதுகூட, நம்ம கட்சி வேட்பாளர் யார் என்றுதான் கடலூர் திமுக நிர்வாகிகள் தேடிக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு எதிரான அலை, ரமேஷை எளிதாக எம்.பி. ஆக்கிவிட்டது.

எம்.பி.யான பிறகும்கூட , சென்னையில் உள்ள இளம் திமுக தலைவர்களுடான நெருக்கத்தை சொல்லி கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு திமுக முன்னணி நிர்வாகிகளையும் மதிக்காமலேயே சுற்றி வந்திருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போதும் கூட, அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதவர் போல் ரமேஷ் நடந்து கொண்டதால், அவரை மரியாதைக்குக்கூட திமுக முன்னணி நிர்வாகிகள் ஒருவரும் சந்திப்பது கிடையாது.

தன்னுடைய முந்திரி தொழிலிலேயே முழு கவனத்தையும், முழு நேரத்தையும் செலுத்தி வந்த ரமேஷ் எம்.பி., கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவானபோது, திமுக நிர்வாகிகளே சந்தோஷமாகிவிட்டார்கள்.

அவருக்கு சொந்தமான காயத்ரி கேஷுவ்ஸ் முந்திரி ஆலை பணிக்கன்குப்பம் என்ற ஊராட்சியில் உள்ளது. அங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கடந்த 19 ஆம் தேதி இரவு முந்திரி திருடிவிட்டார் என்று கூறி ரமேஷும், ஆலை ஊழியர்களும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில், படுகாயமடைந்திருக்கிறார் கோவிந்தராஜ்.

ஒரு கண் பாதிக்கப்படும் வகையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் கோவிந்தராஜ்…

அப்போதும் கூட இரக்கப்படாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவதற்காக ஆளும்கட்சி என்ற அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் ரமேஷ் எம்.பி. அவரது அறிவுரையின் பேரில் காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு கோவிந்தராஜை அழைத்துச் சென்றுள்ளார்கள் எம்.பி.யிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் சிலர்.
ஆனால், அடிபட்ட காயத்தோடு வந்த கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். அதன் பிறகு கோவிந்தராஜ் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல், போலீஸில் நிலையத்தில் டிஆர்வி ரமேஷும் அவரது ஆலை தொழிலாளர்களும் தனது தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். இருப்பினும், சநதேக மரணம் என்ற அடிப்படையிலேயே காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 20,21,22 ஆகிய நாட்களில் கோவிந்தராஜ் மரணத்திற்கு திமுக எம்.பி. ரமேஷ்தான் காரணம். அவரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என கடலூரில் பாமக போர்க்கொடி தூக்கிவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை கேட்டு பாமக வழக்கறிஞர் அணி தலைவர் பாலு, மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், கோவிந்தராஜ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், எம்.பி. பதவியையும் ராஜினமா செய்யுமாறு ரமேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட திமுக.வினர் தகவல் தெரிவிக்கின்றனர்.


ஆனால், முதல்வரின் உத்தரவை மதிக்காத ரமேஷ், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கடலூர் நகர திமுக நிர்வாகிகள்.
கோவிந்தராஜின் மரணத்தால் கடலூர் திமுக.வே கதிகலங்கி போயிருக்கும் நிலையில், சிபிசிஐடி விசாரணையும் சூடு பிடித்துள்ளது.

சிபிசிஐடி இன்ஸ்பெர் தீபா ஆரம்ப கட்ட விசாரணையை துவக்கியிருந்த நிலையில், அவரையும் விட வேகமாக செயல்படும் வகையில், தீபாவுக்கு மேல் அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) அந்தஸ்திலான கோமதி என்ற சிபிசிஐடி அதிகாரியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ் மரணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் மின்னல் வேகத்தில் திரட்டிக் கொண்டிருக்கிறார் ஏடிஎஸ்பி கோமதி.


ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி மீது கொலைப்பழி சுமத்தப்பட்டிருக்கிறது என்றாலும் கூட நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டலின் உறுதியாக இருக்கிறார் என கடலூர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தன்னை சுற்றி விசாரணை வளையம் தரமாக, இறுக்கமாக பிண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் கூட ரமேஷ், துளியும் பதற்றம் இன்றி கடலூரிலேயே தங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.
எந்த போலீஸ் விசாரணையும் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று வீராப்புடனேயே பேசி வருகிறராம் டிஆர்வி ரமேஷ்.

ஆனால், 24 மணிநேரத்திற்குள்ளாக ரமேஷ் கைது செய்யப்படுவார் என்றும் அதற்கு முன்பாக அவர் எம்.பி. பதவியில் இருந்து விலகினால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் அவருக்கு நெருக்கமான ஒன்றிரண்டு திமுக நிர்வாகிகள் அறிவுரை கூறி வருகிறார்கள்.

திமுக எம்.பி கைது என்று செய்தி வருமா அல்லது முன்னாள் திமுக எம்.பி. டிஆர்வி ரமேஷ் கைது என்று செய்தி வருமா…

இந்த நேரத்தில் கடலூர் திமுக.வினரிடையே நடைபெறும் பட்டிமன்றத்தின் தலைப்பே இதுதான்…

கடலூர் மாவட்ட திமுக.வுக்கு வந்த சோதனை இது….

One thought on “கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் கைது எப்போது? அதிரடி காட்டும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி.. போலீஸ் விசாரணைக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என எம்.பி. வீராப்பு…”

Comments are closed.