Sat. Nov 23rd, 2024

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதைப் போலவே, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரான மத்திய இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, நேற்று முன்தினம் பன்வீர்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்ட விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மிஸ்ராவை திரும்ப செல்ல வேண்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் நிறைந்த சாலைப்பகுதியில் வேகமாக வந்த கார்கள், விவசாயிகள் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். அவர்கள் மீது மோதிய காரும் சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கார் மோதியதால் ஆத்திரத்தில் இருந்த விவசாயிகள், அந்த காரையும், அதில் பயணம் செய்த பாஜக நிர்வாகிகளையும் தாக்கினர். இருதரப்பு இடையே நடைபெற்ற மோதல் வன்முறையாக வெடித்தது. இதில், நேற்று முன்தினமே 8 பேர் பலியாகினர். படுகாயடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியானதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.

இதனிடையே, விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிட்ட சதி என்றும் மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன்தான் காரை ஓட்டி வந்ததாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டியதால், இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் புதல்வியும், பொதுச் செயலாளரும், உ.பி. மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று லக்கிம்பூர் வந்தார். அங்கிருந்து பன்வீர்பூர் கிராமத்திற்கு செல்ல முயன்ற அவரை உ.பி. காவல்துறையினர் கைது செய்து, சீதாபுர் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறை வைத்தனர்.

இதனிடையே, விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 11 பேர் மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

28 மணிநேரத்திற்கு மேல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா, விவசாயிகள் கூட்டமாக திரண்டு நின்று கொண்டிருந்த பகுதியில் கார் வேகமாக வந்து மோதும் வீடியோ காட்சியை வெளியிட்டு, உ.பி. பாஜக அரசு மீதும் போலீசார் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். கார் ஏற்றி விவசாயிகளை கொலை செய்தவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் என்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் பிரியங்கா காந்தி.

இதனிடையே மற்றொரு வீடியோவும் வெளியாகி உ.பி. பாஜக அரசின் இரட்டை வேடத்தை கிழிகிழியென கிழித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் மீது கார் மோதிய அந்த நிமிடத்தில் பின்னால் வந்த வாகனங்களில் இருந்து பாஜக நிர்வாகிகளும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்வராவின் மகனான ஆஷிஸ் மிஸ்ராவின் நண்பர்கள், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த வாகனங்களில் இருந்து வேகமாக இறங்கி ஓடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.