Sun. Nov 24th, 2024

மக்கள் நீதிமய்யத்தின் முதல் பொதுக்குழு, அதன் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஒப்புதல் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களின் விவரம் இதோ..

ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக அயராது பாடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது உடலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் நிறைவு செய்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.கட்சியின் சின்னமான ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தைப் போராடி மீட்ட தலைவர் அவர்களுக்கும் அவரது வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்பட்டு சின்னத்தை மீட்ட நிர்வாகிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக தன் திறமை, தொழில், செல்வம், புகழ், அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கும் நம் தலைவர் திரு. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்பட வேண்டும் என அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை வேண்டும்

எட்டு வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனபன உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.