Thu. Apr 10th, 2025

    

கூடா நட்பு..கேடாய் முடியும் என்பதற்கு தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ முன்னூதாரணங்களைச் சொல்லலாம். இந்த வசனத்தை மனம் நொந்துப் போய், சொன்னவர் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி. இன்றையச் செய்தி நாளைய வரலாறு என்பதுபோல, இன்றைக்கு அ.தி.மு.க.வோடு நட்பாக இருக்கும் பா.ஜ.க.வே, அ.தி.மு.க.வை அழித்தொழிக்கும் வேலையில் கச்சிதமாக ஈடுபட்டு வருகிறது என்கிறார் டெல்லி அரசியலைக் கரைத்து குடிததுள்ள மூத்த அரசியல்வாதி ஒருவர்.  

தமிழகத்தைப் போலவே, மேற்கு வங்க மாநிலத்திலும் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு, பா.ஜ.க. அரசை நிறுவ, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை உள்ளடக்கிய மூவர் கூட்டணி, ஓராண்டுக்கு ஆண்டுக்கு முன்பே ரகசியத் திட்டம் தீட்டி, திரிணாமுல் காங்கிரஸை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருககிறது. பா.ஜ.க வீசும் வலையில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து விழுவதை தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

இப்படி மேற்கு வங்கத்தை குறி வைத்து ஆடு புலி ஆட்டத்தை தொடங்கி விட்ட பா.ஜ.க. மேலிடம், தமிழகத்தை இதுவரை கண்டுகொள்ளாதது ஏன் என்ற சந்தேகம், தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.அந்த சந்தேகம் நமக்கும் எழவே, டெல்லி அரசியல்வாதியை தொடர்பு கொண்டு பேசினோம். கலகலவெனவே சிரித்தவர், மூவர் கூட்டணியின் மாஸ்டர் பிளானை விவரித்தார்.

முதல்வர் ஜெயலலிதா மறைந்த அன்று மாலையே (டிசம்பர், 5,2016)  ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராகக,  கடும் நெருக்கடியைக் கொடுத்தது பா.ஜ.க. மேலிடம். அதன் காரணமாகதான் வேண்டா வெறுப்பாக அவரை முதலமைச்சராக பதவியேற்க, சசிகலா அன்ட் கோ சம்மதித்தது. ஜெயலலிதா மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பும், அவரின் மரணச் செய்தி வெளியிட்ட பிறகும் அப்பல்லோவில் இடைப்பட்ட நேரத்தில் நடந்த ஆலோசனைகள், இன்றைய முதல்வர் இ.பி.எஸ்., முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அன்றைக்கு அ.தி.மு.க.வையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சசிகலாவுக்கு முழுமையாக தெரியும்.

திரைமறைவில் நடந்த சதி ஆலோசனைகளைப் பற்றி மேலும் சில மூத்த அமைச்சர்களுக்கும் தெரியும். இவர்களில் ஒருவரையாவது சந்தித்து உண்மையை பேசச் சொல்லி கேட்டுப் பாருங்கள். ஒருவர் கூட மனசாட்சியோடு பேச மாட்டார்கள். அதைவிட கொடுமை என்னவென்றால்,இவர்களை எல்லாம் ஆளாக்க, தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவமானகரமானதாக ஆக்கிக் கொண்டு உயிரிழந்த ஜெயலலிதா மீது இவர்களுக்கு துளியளவாவது விசுவாசம் இருந்தால், நன்றியுணர்வு இருந்தால், ஒரே ஒருவராவது ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த நேரத்தில் பா.ஜ.க.மேலிடம் செய்த கட்டப்பஞ்சாயத்தை வாய் திறந்து சொல்லட்டும் பார்க்கலாம். அத்தனை பேருமே சுயநலவாதிகள். மக்கள் பணத்தில், தங்களின் பல தலைமுறைகள் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக, ஈவு இரக்கமற்ற எந்த காரியத்தையும் செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை மோடி, அமித்ஷா கூட்டணி நன்றாக புரிந்து வைத்திருக்கிறது. தமிழக அரசியலைக் குழப்பி மீன் பிடிக்க, டெல்லி பா.ஜ.க.வுக்கு ஒரு மாதமே போதும். 30 நாட்கள் கூட அவர்களுக்கு அதிகபட்சம் என்பதால்தான் மோடி, அமித்ஷா கூட்டணி அமைதியாக இருக்கிறது.

அ.தி.மு.க.வில் கலகம் ஏற்படுத்தி குளிர்காய்வதென்பது, பா.ஜ.க.வுக்கு கைவந்த கலை. ரெம்பவே சிரமப்பட தேவையிருக்காது. அதற்கு ஒரு உதாரணமாக, தமிழர்களின் குணம் பற்றி, பல தளங்களில் வேடிக்கையாகப் பேசப்படும் ஒரு குட்டிக் கதையை சொல்கிறேன். நாலைந்து நண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டால், கடுமையாக போராடியும், ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து மேலே வர முயற்சிக்காது. அதற்கு மாறாக, ஒரு நண்டு மேலே ஏறும்போது, மற்றொரு நண்டு, அதன் காலை பிடித்து இழுத்து உள்ளேயே தள்ளிவிடும். இப்படி ஒரு நண்டு தப்பிக்க இன்னொரு நண்டு விடாமல், மொத்த நண்டுகளும் ஒட்டுமொத்தமாக செத்துப் போகும். அதுபோலதான், தன்னோடு இருக்கும் ஒருவர் முன்னேறிவிடக் கூடாது என்று மற்றொருவர் குழிப்பறிப்பு வேலையில் ஈடுபட்டு, தங்களை தாங்களே அழித்துக் கொள்வார்கள். தமிழர்களை அழிக்க, வேறு கிரகத்தில் இருந்து யாரும் வர தேவையில்லை என்ற வரலாற்று உண்மையை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.  

ஆளும்கட்சியில் உள்ளவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதற்கு ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே சொல்கிறேன். அவர்களின் சுயரூபம் உங்களுக்குப் புரிந்துவிடும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைத்து அவரது அரசியல் வாழ்க்கையே குறுகிய காலத்தில் சிதைத்து, செல்லாக் காசாக்கியது, பா.ஜ.க..அவர்களுக்கு கிடைத்த முதல் நண்டு, ஓ.பன்னீர்செல்வம்தான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில், முதல்வர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தபோது, ஓ.பி.எஸ்.ஸை தூண்டிவிட்டது பா.ஜ.க.தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை ஆடிட்டர் குருமூர்த்தியே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். தர்மயுத்த கதாநாயகனாக மாறிய ஓ.பி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க.வில் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் நல்ல பெயர் கிடைத்தது. தனது தலைமையை நம்பி மக்கள் அணி திரள்வதை உணர்ந்திருந்தபோதும், ஒரு தலைவராக உருவாக கிடைத்த பொன்னான வாய்ப்பை உதறிதள்ளிவிட்டு, எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி, பா.ஜ.க.வின் சொல்பேச்சுக் கேட்டு மீண்டும் இ.பி.எஸ்.ஸோடு கைகோர்த்தார். அன்றோடு முடிந்தது அவரது அரசியல் எதிர்காலம். அவருக்கு துணையாக நின்றவர்கள் எல்லோரும், ஓ.பி.எஸ்.ஸின் உண்மை குணத்தை அறிந்து இ.பி.எஸ்.பக்கம் சாய்ந்து, அவரது விசுவாசிகளாக மாறிப்போனார்கள். இன்றைக்கு தனிமரமாக நிற்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸோடு இணைந்து செயல்படுவதைப் போல போலி நாடகத்தை நடத்திக் கொண்டே, சசிகலா பக்கம் சாய்ந்தால், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்களா? என்று இலவு காத்த கிளி போல காத்துக்கிடக்கிறார் ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ.பி.எஸ்.ஸின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

ஏற்கெனவே, ஓ.பி.எஸ். உச்சம் தொட வேண்டும் என்பதற்கு குற்றுயிராக்கப்பட்டவர்தான் சசிகலா. மத்திய பா.ஜ.க அரசு தனக்கு ஆதரவாக இருக்கிறது என்ற தைரியத்தில சசிகலா மற்றும் இ.பி.எஸ் கூட்டத்திற்கு எதிராக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ஓ.பி.எஸ்., இப்போது சரணாகதி அடைந்தாலும், அவர் கதையை முடிக்கதான் பார்ப்பார் சசிகலா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரியணையில் ஏறவேண்டிய நேரத்தில், சூழ்ச்சி செய்து படுபாதாளத்தில் தள்ளியவர் ஓ.பி.எஸ்.தான் என்பதை ஒருகாலும் மறக்க மாட்டார் சசிகலா. அவருக்கு இப்போது கிடைத்திருப்பதே மறுவாழ்வுதான். சிறையில் கற்ற நான்காண்டு பாடத்தை, அவ்வளவு எளிதாக மறந்து யாருக்கும் பாவமன்னிப்பு கொடுப்பதற்கு சசிகலா ஒன்றும் தெய்வப்பிறவி அல்ல.

மூன்றாவது நண்டு கதைதான், டி.டி.வி.தினகரனுடையது. கூவத்தூர் நாடகம் முடிவுக்கு வந்தப் பிறகு, டி.டிவி.தினகரனை கொஞ்சம் ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்தது, பா.ஜ.க.தலைமை. அன்றைக்கு சசிகலாவுக்கு நேர்ந்த கதையை கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்காமல், ஆட்சி அதிகாரம் தனக்கு கீழே இருக்கிறது என்பதால், ஜெயலலிதாவை மிஞ்சிய சில,பல வேலைகளை செய்தார் தினகரன். அவரை வளரவிட்டால், மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும் என யோசித்த பா.ஜ.க.மேலிடம், திகார் சிறையில் அடைக்கும் வகையில், அழகாக ஒரு வலையைப் பிண்ணி, அவரது ஆட்டத்தை முடித்தது. பா.ஜ.க.வின் அடிமையாகிவிட்டாரே என்ற சந்தேகம் பரவலாக எழுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஓராண்டாக அவர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதே வெளியுலக்கு தெரியாத வகையில், மர்ம குகையில் அவர் இருந்தார். இவ்வாறாக, இரண்டாவது நண்டுவின் கதையையும் சத்தமில்லாமல் முடித்துவிட்டது பா.ஜ.க.மேலிடம்.

4 வது நண்டு எடப்பாடிதான். நான்காண்டுகள் மத்திய அரசின் சொல் பேச்சைக் கேட்டு ஆட்சி நடத்தி, நிம்மதியாக தேர்தலை எதிர்கொண்ட நேரத்தில், ஏற்கெனவே அடிபட்ட நண்டை வைத்து, இ.பி.எஸ்.ஸுக்கு வித்தை காட்ட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு. கூடவே இருந்துகொண்டு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓ.பி.எஸ்.ஸையே சமாளிப்பதற்கே தாவு தீர்த்துவிடுகிறது. இப்படிபட்ட நேரத்திலும், சசிகலாவும் சீற்றத்துடன் தனக்கு எதிராக அரசியல் செய்வதை, பா.ஜ.க. மேலிடம் தூண்டி விடுகிறதா அல்லது வேடிக்கைப் பார்க்கிறதா என்று புரியாமல் நெருப்பு மேல் விழுந்த புளு போல துடித்துக் கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்தநேரத்தில், சசிகலாவின் விடுதலையின் போது நடந்த நிகழ்வுகளை கொஞ்சம் அசைபோடுங்கள்.  பா.ஜ.க அரங்கேற்றும் நாடகங்கள் எவ்வளவு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கே எளிதாக புரியும். பெங்களூர் சிறையில் இருந்து இதோ இன்று விடுதலையாகி வருகிறார் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு முழுவதும் பேச வைத்தவர்கள் பா.ஜ.க.வினரை தவிர, வேறு யாருக்கு அந்த பெருமையை தட்டிக் கொண்டு போக முடியாது. சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சென்னை உய்ர்நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலே, அதிகாரப்பூர்வ செய்தியானது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி அவர் சென்னை வந்திருந்தால், சசிகலா மீது எப்படிபட்ட இமேஜ் தமிழகத்தில் இருந்திருக்கும். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர், அவர் சொத்து குவிக்கவே, சசிகலாதான் காரணம் என பலவாறாகத்தானே மக்கள் பேசியிருப்பார்கள். அப்படிபட்ட அவப்பெயர் அவருக்கு கிடைக்காமல், அவர் மீது பரிதாப உணர்வு திரும்ப கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என சகலத்தையும் செய்தது பா.ஜ.க.தான் என்பது, எல்லோருக்கும் அதிர்ச்சியான தகவலாகதான் இருக்கும்.

67 வயதான சசிகலாவுக்கு, விடுதலையாகும் நாளுக்கு சில நாளுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்படுகிறதாம். நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதுபற்றிய தகவல், தமிழகத்தில் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்திய சில மணிநேரங்களிலே குணமாகிவிட்டதாக கூறி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தமிழக அரசியலில் உருவான கொதி நிலையை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு செல்ல, அவரின் உடல்நிலை, கவலையளிக்கும் விதமாக இருப்பதாக அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு கொரோனோ பாதிப்பும் அவருக்கு இருக்கிறது என்று கூறி சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த இடைபட்ட நாட்களில், டெல்லி பா.ஜ.க. நினைத்த மாதிரியே, சசிகலாவுக்கு எதிரான அவப்பெயர் நீங்கி, அவர் மீது பரிதாப உணர்ச்சி அதிகமானதை அறிந்து ஒரு வாரத்திற்குள்ளாக,  கொரோனோ தொற்று பாதிப்பில் இருந்து சசிகலா குணமாகிவிட்டார் என்று அறிவித்து அவர் விடுவிக்கப்படுகிறார்.

சசிகலா, விடுதலையாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூரில் நடந்த அத்தனை நிகழ்வுகளுமே டெல்லி பா.ஜ.க. நடத்திய டிராமாதான். இதெல்லாம் சசிகலாவுக்கு தெரிந்தே நடந்ததா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இப்போதைக்கு பா.ஜ.க. கையில் கிடைத்துள்ள தலையாட்டி பொம்மைதான் சசிகலா.

பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இந்த நிமிடம் வரை, தமிழக அரசியல் அவரைச் சுற்றியேதான் சுழன்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது, சென்னை வரும் போது சசிகலாவை ஓ.பி.எஸ். வரவேற்பாரா, செல்லூர் ராஜு பூங்கொத்து கொடுப்பாரா, உதயகுமார் காலில் விழுவாரா இப்படிதானே தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் சசிகலாவின் புராணங்களையே பாடிக் கொண்டிருந்தன. அதைவிட கொடுமையாக, அ.தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரங்கள், குறிப்பாக  எதிரணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட மற்ற கட்சித்தலைவர்களின் கூக்குரல் மீது ஊடக வெளிச்சமே விழவில்லையே. அனைத்து நிகழ்வுகளும் இரட்டடிப்பு செய்யப்பட்டது போலதானே இருக்கிறது.

அதுவும், பெங்களூரில் இருந்து சசிகலா புறப்பட்ட பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று, வேறு எநதவொரு செய்தி மீதும் மக்களின் கவனம் சென்றுவிடாமல் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக பார்த்துக் கொண்டனவே. அன்றைய தினம் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரம், மதுரையில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழியின் தேர்தல் பரப்புரை என எதுவுமே மக்களிடம் சென்றடையவில்லையே…

இதே மாதிரியான நிலைதான் இன்னும் பல நாள்களுக்கு தமிழகத்தில் நிலவும். சசிகலாவை வைத்து, டெல்லி பா.ஜ.க ஆடும் ஆட்டம் இதுதான் என்பது அரசியலை ஊன்றிப் பாப்பவர்களுக்கு புரியும். பீகாரில் ஆடிய ஆட்டத்தை மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆடாது. அதுபோல, மேற்கு வங்கத்தில் ஆடிய ஆட்டம் மாதிரியே தமிழகத்தில் அரங்கேற்றாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டை ஆடுவதுதான் மோடி, அமித்ஷா அன் கோவின் அரசியல் வியூகம்.

பா.ஜ.க. கையில் இப்போதைக்கு இரண்டு நண்டுகள் இருக்கிறது. சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும் முட்டி மோதிக் கொள்வார்கள். இதில், ஒருவர் வீழ்ந்துப் போவார். எஞ்சிய ஒருவரை பா.ஜ.க தனது கைப்பிடிக்குள் இறுக்கி வைத்துக் கொண்டு,அ.தி.மு.க. எனும் அந்த பாத்திரத்தில், பா.ஜ.க. எனும் நண்டுகளை போட்டு, வரும் காலங்களில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதும். ஊழல் ஒழிப்போ, வறுமை ஒழிப்போ பா.ஜ.க.வுக்கு முக்கியம் இல்லை. எங்கு நோக்கினும் காவி நிறமாக காட்சியளிக்க வேண்டும்.  அதற்கான காலம் தமிழகத்தில் தற்போது கணிந்துவிட்டதாகவே டெல்லியில் உள்ள பா.ஜ.க. மூதத தலைவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் சொல்வதை கதையாக எடுத்துக் கொண்டாலும் சரி, உண்மை என்று நம்பினாலும் சரி..அடுத்தடுத்த நாட்கள், தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்டம்தான் அதகளமாக இருக்கப்போகிறது.  

தி.மு.க.வுக்கும் ஒரு பிளானை பா.ஜ.க. வைத்திருக்கிறது. தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன், அதைப் பற்றியும் பேசுகிறேன் என்று கூறிவிட்டு விடை பெற்றார் அந்த மூதத அரசியல்வாதி.

யப்பா….இப்பவே கண்ணைக் கட்டுதே…..

அந்த ஆண்டவன்தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.