தமிழக சட்டமன்றத்தின் ஆயுள்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2 நாட்களாக சென்னையில் ஆலோசனை நடத்தியது.
தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் மற்றும் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், தமிழக தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளார்களுடன் ஆலோசனை நடத்தினர். 2வது நாளான இன்று வருமான வரித்துறை , ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர், செய்தியாளர்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சந்தித்தார். அபபோது அவர், கொரோனா காலத்தில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம்
பள்ளி, கல்லூரி தேர்வுகள், விழாக்களை கருத்தில்கொண்டு தமிழக தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்
வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்யப்படும்.
ஏப்ரல் 4வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்பது அதிமுகவின் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
80 வயதை கடந்தவர்களுக்கான தபால் வாக்கு முறையை சில கட்சிகள் வரவேற்றுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால்வாக்கு முறை பீகார் தேர்தலில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
தேர்தலின்போது பண விநியோகத்தில் ஈடுபட்டு வழக்கு பதியப்பட்டோர் விவரம் ஆணையத்திடம் உள்ளது.
தேர்தலில் பண பலத்தை தடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா என்பது, தேர்தல் தேதி அறிவிக்கும் நாளன்று தெரிய வரும்.
மே 24ஆம் தேதிக்குள் நிச்சயமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டு விடும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் சட்டமன்ற தேர்தலுடன் நடத்தப்படும்.
இவ்வாறு சுனில் அரோராகூறினார்