வட மாவட்டங்களை உள்ளடக்கி 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க பிரிந்து தனித்துப் போட்டியிடுவதால், அந்தக் கூட்டணிக்குள் பெரிய அளவில் குழப்பம் இல்லை. அதிமுக.வுடன் தேசிய கட்சியான பாஜக மட்டுமே உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, ஆளும்கட்சிக்கு எதிரான பிரசாரம் போன்றவற்றில் பலவீனமான குரலில் கூவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் கௌரவமான இடங்களை கூட பெற முடியாமல் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றன.
கூட்டணியில் பங்கீடு என்ற அம்சத்தை மாவட்டச் செயலாளர்களிடம் திமுக தலைமை ஒப்படைத்துவிட்டதால், மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளை செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் மட்டுமின்றி, புதிதாக பொறுப்புக்கு வந்த திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட மரியாதைக்குக்கூட இடங்களை ஒதுக்கீடு செய்யாமல் உதாசீனப்படுத்திவிட்டார்கள் என்பது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் புலம்பலாக உள்ளது.
மாவட்ட அளவில் நடைபெற்ற பஞ்சாயத்துகளை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தத்தம் கட்சித் தலைமைக்கு குமறலோடு எடுத்து கூறியும் ஒரு புண்ணியமும் இல்லை. அதிலும், மதிமுக மாவட்டச் செயலாளர்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது.
மொத்தமுள்ள 9 மாவட்டங்களில் வட மாவட்டங்களை உள்ளடக்கி 7 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள், மதிமுக மாவட்ட நிர்வாகிகளை ரத்த கண்ணீர் வடிக்க வைத்துள்ளனர்.
ஊராட்சித் தலைவருக்கான பதவி, கட்சி சார்ப்பற்றது என்பதால், அதை பற்றி பெரிதாக கவலைப்படாத மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துக்கான தேர்தல்களில் வார்டு உறுப்பினருக்கான இடங்களில் கூட, பல ஊர்களில் ஒன்றிரண்டு இடங்களைக் கூட திமுக ஒதுக்கவில்லை என குமறுகிறார்கள். குறிப்பாக, திமுக கூட்டணிக் கட்சிகளில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது மதிமுக.தான்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தனித்துப்போட்டியிட்டால் கூட மதிமுக.வுக்கு மரியாதைக்குரிய இடங்களில் வெற்றிப் பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆனால் கூட்டணி தர்மத்திற்காகவும், தலைமையின் கட்டளைக்காகவும் திமுக.வின் புறக்கணிப்பை வெளியில் கூட சொல்ல முடியாமல் குமறிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இப்படி, திமுக கூட்டணிக்குள் பங்கீடு சுமுகமாக இல்லாததாலும், திமுக.விற்குள்ளேயே உட்கட்சி அரசியலால் வாய்ப்பு மறுக்கப்பட்ட செல்வாக்குமிக்க நிர்வாகிகளும், தங்கள் குமறல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாததால் விரக்தியில் இருந்து வருகின்றனர்.
கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு + உட்கட்சி குமறல்கள் போன்றவற்றால், உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக.வின் பிரசாரம் சுணங்கி போய் இருக்கிறது. இப்படிபட்ட நேரத்தில் அதிமுக.வின் களப்பணியும், பிரசாரமும் 9 மாவட்டங்களிலும் சூடு பறக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுக.வின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, வட மாவட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும், நெல்லை, தென்காசியில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களும் சட்டமன்ற இடைத்தேர்தல் போலவே பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஆளும்கட்சியான திமுக, உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை மேலோட்டமாகவே மேற்கொண்டு வருகிறது. களத்தில் எதிரியே இல்லாததைப் போலதான், உள்ளாட்சித் தேர்தலை அதிமுக எதிர்கொண்டிருக்கிறது என்கிறார்கள், அக்கட்சியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள்.
அதிமுக.வின் தேர்தல் பிரசாரத்தை மேலும் சூடாக்க, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், முழு வேகத்தில் பிரசாரத்தில் குதித்து விட்டார்.
கொடநாடு கொலை பழியால் தனது இமேஜ் முழுமையாக டேமேஜ் ஆகி, அதிமுக தொண்டர்களிடமும் செல்வாக்கு சரியத் தொடங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை கையில் எடுத்து, சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த ஆவேசம் காட்ட துவங்கி விட்டார்.
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஊரக பகுதிளிலும், நகரப் பகுதிகளிலும் அடிப்படை கட்டமைப்புகளை முழுமையாக நிறைவேற்றாமல் கோட்டை விட்டுவிட்ட போதும், அதைப் பற்றி மக்கள் எதிர்கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக திமுக அரசின் வாக்குறுதிகளை கையில் எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஓ.பி.எஸ்., ஒதுங்கியிருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி, அதிமுக.வை முழுமையாக தனது தலைமையின் கீழ் கொண்டு வரவும் துடிக்கிறார்.
குழாயடி சண்டைக்கு இணையாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களை வாடகைக்கு பிடித்ததைப் போல, திமுக ஆட்சியில் அதிமுக.வைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று பொங்கும் திமுக முன்னணி நிர்வாகிகள், இப்படிபட்ட நேரத்தில் கூட திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது என்கிறார்கள்.
கொரோனோ உச்சத்தில் இருந்தபோது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வருவதை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மூத்த அமைச்சர்களையும் களத்தில் இறக்க வேண்டும் என்றும், மாநில திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, மாநில திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோரை 9 மாவட்டங்களில் முதற்கட்டமாக தேர்தல் பிரசாரத்தை உடனடியாக துவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான திமுக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திமுக தலைமை, ஆளும்கட்சி பலத்தை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து, தேர்தல் களத்தில் இறக்க வேண்டும் என்றும் ஆட்சிப் பணியில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி வரும் நாட்களிலாவது 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார்கள் தேர்தலை எதிர்கொண்டுள்ள திமுக முன்னணி பிரமுகர்கள்.
மேலும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், அவர்களின் கடந்த கால ஊழல் மற்றும் உல்லாச விளையாட்டுகளை எல்லாம் மக்கள் மன்றத்தில் சுடச்சுட வைத்து உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக.வை மக்கள் புறக்கணிக்கும் வகையில் விரிவான தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.