முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் மற்றும் அனைத்து துறை அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி, ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புயல், கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், உடனடியாக கள ஆய்வுப் பணியை தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேரில் சென்று, தண்ணீர் இருப்பு, ஏரி கரையின் பாதுகாப்பு, தண்ணீர் வெளியேற்றும் மதகு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் ஏரியின் நீர் மட்டம், முழு கொள்ளளவை எட்டும் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் வழங்கினார்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.