Fri. Nov 22nd, 2024

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்றதமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது..

இது தொடர்பாக மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

            கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி., / எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி எஸ். உத்தமராஜ் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

            பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். கண்ணகியினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று  ஊருக்கு கொண்டு வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளிலும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணியளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்து விட்டனர்.

            இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களை பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி மடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதியினரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து கொளுத்திய கொடுமை அரங்கேற்றப்பட்டது.

            இவ்வளவையும் செய்ததோடு காவல்துறையினரின் உதவியை பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்து கொன்றதாகவும், கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் பொய் வழக்கு பதிவு செய்து எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

            இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்திடவும்,பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேசனுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

            தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்தலால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகியினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்கு போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்கு பதிவு செய்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

            இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடைபெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்த விடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர். சாட்சிகளை கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கு முயற்சித்தனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிரழ் சாட்சியாகவும் மாறினார்கள். திரு செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியை அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாசலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாசலம் காவல்துறை வழக்கை முடித்து விட்டது.

            பல தடைகளை கடந்து இன்று (24.09.2021) கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 11 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று  ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகேசனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் அபராதம் விதித்ததோடு ஏற்கனவே காவல்துறையினரால் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

            சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆணவப்படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ. சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

            தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப்படுகொலை தடுப்புக்கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம். உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதியரசர் வி.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமெனவும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..