Thu. Mar 28th, 2024

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இருள்நீக்கி கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் அறுவடை செய்ய அறுவடைக்கு தயாராக உள்ளது.பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும் 17% க்கு மேல் ஈரப்பதத்தை காரணங்காட்டி கொள்முதல் நிறுத்தப்படுகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதால் வீதிகளில் கொட்டி வைத்து மழையில் அழிவதை பார்த்து விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.

எனது நிலங்களில் சென்ற வாரமே அறுவடைக்கு தயாராக இருந்த போதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடையை செய்ய முடியாமல் தற்போது பெய்து வரும் மழையால் அனைத்து கதிர்களும் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து மனம் பதபதைக்கிறது.நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால் தான் அறுவடையே துவங்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்னுக்குப்பின் முரணான தகவலை சொல்லி கொள்முதலை தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் வாய்க்கால்,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் அமைந்திருப்பதால் எங்களால் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடியவில்லை என்றும், ஏற்கனவே திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தையும் மழை பெய்வதையும் காரணங்காட்டி கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறார்கள் இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து வருகிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிட்டு 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.அவ்வாறு பெற முடியாவிட்டால் கடந்த கால நடைமுறைகளைப் பின்பற்றி தமிழக அரசு ஈரப்பதத்திற்கு தானே பொறுப்பேற்று பின் அனுமதி பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதத்தை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும். இதற்கு மத்திய அரசை காரணம் காட்டுவது பொருப்பற்ற செயலாகும். இதனால் விவசாயம் அழிவுக்கு வழிவகுக்கும்.

குறுவை
காப்பீடும் செய்ய முடியவில்லை விளைந்த கதிர்களை அறுவடை செய்யவும் முடியவில்லை, கொள்முதல் மறுப்பதால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கிறார்கள்.

எனவே சென்ற ஆண்டு இதே நாளில் எத்தனை கொள்முதல் நிலையங்கள் காவிரி டெல்டால் திறக்கப்பட்டது, எத்தனை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்கிற புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டு தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் வெளிமாநிலங்களில் நெல் வருவதை தடுக்கின்ற பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை உணரவேண்டும். அதனை காரணம் காட்டி விவசாயிகள் தலையில் பழியை சுமத்த நினைப்பதையும் கைவிடவேண்டும்.

கொள்முதல் தடையின்றி நடைபெற தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து நெல்லையும் நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதற்கு தேவையான அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர்கள் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுவை உடனடியாக காவிரி டெல்டாவிற்கு அனுப்பிவைத்து விவசாயிகள், கொள்முதல் அலுவலர்கள் கொண்ட கலந்துரையாடல் கூட்டங்ளை நேரில் நடத்தி பாதிப்பை உணர்ந்து தேவை யானால் ஒரு போர்க்களத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைக்கு இணையான வகையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தமிழக முதலமைச்சர் நேரடி பார்வையில் துவங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையேல் விவசாயிகள் அழிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர வேண்டுகிறேன்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.