Thu. Nov 21st, 2024

மண்குதிரையாக காட்சியளிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நம்பி இனி கட்சியை நடத்துவதோ, ஆட்சியை நடத்தவோ முடியாது என்பதை அதிமுகவினரே உணர்ந்து விட்டனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தள்ளார்.

மக்கள் பணத்தில் ஊதாரி விளம்பரங்கள்; மாநிலத்தின் பிரச்சினைகளில் கழிசடை நாடகங்கள் என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் உறுதி பூண்டுவிட்டனர் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

சிவகங்கை அருகே கே.வைரவன்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் தேர்தல் பிரசார நிகழ்வில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கீழடி அகழாய்வு மூலம் தமிழர்கள் பெருமை அடையக் கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. அதிமுக அரசு தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும். கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அதிமுக ஆட்சி நிறுத்திவிடும். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். எதுவும் செய்யாததுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை. மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்கால கனவு இல்லை .

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.