Thu. Nov 21st, 2024

அதிமுக ஆட்சி முடியபோதும் கடைசி நேரத்தில் கஜானாவை காலிசெய்யும் வேலை நடைபெற்று வருகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கமிஷனுக்காக புதிய புதிய டெண்டர் விடப்படும் வேலை நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

நிர்வாக அலங்கோலத்தால் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக உள்ளது என்றும் தொழில் முடக்கம்-வேலையிழப்பு என மாநிலமே திணறி கொண்டிருக்கிறது. இந்தநேரத்தலும், கடைசி நேர டெண்டர்களில் கமிஷன் அடிப்பதற்காக கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் நிர்வாகம் சரி செய்யப்படும்;குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக காலையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாய கடன்களை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தடைவாங்கிய முதலமைச்சர் பழனிசாமி இப்போது தேர்தலுக்காக ரத்து செய்வதாக அறிவிக்கும் நம்பிக்கை துரோகத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியின் கடைசி நேரம் வரை முதலமைச்சர் நாடகமாடி வருகிறார். 

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி இன்னும் 3 மாதத்தில் முடியப் போகிறது. இந்த நிலையில் கடனை ரத்து செய்வதாக பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள் படும் வேதனை இப்போதுதான் அவருக்கு தெரிந்ததா?. இந்த பச்சைத் துரோக நாடகங்களை அறியாதவர்களல்ல தமிழ்நாட்டு மக்கள். கடந்த 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் சிறு, குறு, பெரிய விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற நகைக்கடன், பயிர்க்கடன், டிராக்டர் கடன், கிணறு வெட்டுவதற்கான வாங்கிய கடன் உள்ளிட்ட 7 ஆயிரம் கோடி அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்தார் கருணாநிதி.

ஆனால் இப்போது முதல்வர் அறிவித்திருப்பது வெறும் பயிர்க்கடன் மட்டுமே. இதுவும் சிறு, குறு விவசாயிகளுக்கான கடனாக உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நிர்வாகத்தில் அதிமுகவினர் உள்ளதால் அவர்களது உறவினர்கள் பெயரில் பயிர்க்கடன் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சாகுபடிக்காக நகைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்துள்ளனர்.
அந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அதிமுகவினருக்கு மட்டுமே பயன் தரும். உண்மையான சிறு, குறு, பெரிய விவசாயிகளுக்கு பயன் தராது.
கிசான் திட்டத்தில் போலி விவசாயிகள் ஊடுறுவியதால் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. குடிமராமத்து பணிகளில் அதிமுகவினர் பலர் போலி விவசாய சங்கங்கள் மூலம் டெண்டர் எடுத்து பணிகள் செய்தனர். இதனால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து பணிகள் மூலம் கோடிக்கணக்கில் அதிமுகவினர் சுருட்டியதாக விவசாயிகள், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

தொகுதி பிரச்சினைகளை பேசாமல் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்றுவிட்டதாக ஒரு அமைச்சர் எங்களை கேலி பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நாங்கள் இதுவரை பேசிய தொகுதி பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டீர்களா?. ஆளுங்கட்சியினர் தொகுதி பிரச்சினைகளைக் கூட தீர்க்கவில்லை.
அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் தொகுதியிலும் மக்கள் குறைகளை தீர்க்கவில்லை. தமிழகம் குறைகள் சூழ்ந்த மாநிலமாக உள்ளது. மக்கள் கவலைகளை போக்காத ஆட்சியாக மட்டுமில்லாமல் புதிய புதிய கவலைகளை உருவாக்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.