Sat. Nov 23rd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நிதி நிலை அறிக்கை தாக்கலையொட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் சர்ச்சையும், சவால்களையும் தாண்டி, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு திமுக அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு எதிராக பொதுமக்களிடம் அதிருப்தி பெருமளவில் எழாத நிலையில், வரும் ஐந்தாண்டு காலமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பொதுமக்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பதற்கான ஒளிக்கீற்றுகள்  அதிகளவில் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படிபட்ட நேரத்தில், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட மூத்த அமைச்சர்கள் மீதும் முதல்முறை அமைச்சராக பதவியேற்று இருக்கும் திமுக முன்னோடிகள் ஒன்றிரண்டு பேரின் செயல்பாடுகள் குறித்தும் மாநில உளவுத்துறை சேகரித்து வழங்கியுள்ள தகவல்களைப் பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியாகிவிட்டார் என்றும் அதன் எதிரொலிதான் கடந்த சனிக்கிழமையன்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையாக உதிர்த்த எச்சரிக்கை மணி என்றும் முதல்வர் அலுவலகத்தோடு நெருக்கமான தொடர்புடைய தலைமைச் செயலக உயரதிகாரிகள் தகவல்களை கிசுகிசுக்கிறார்கள்.  

அதன் பின்னணி குறித்து விசாரித்த போது, திமுக ஆட்சிக்கு அவப்பெயரை தேடித் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களுக்கும் சேர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேப்பிலையால் அடித்து வைத்தியம் பார்த்துள்ள தகவல்கள் கிடைத்தது. தான் நேரடியாக கண்டித்தால் மூத்த அமைச்சர்களின் மனசு வருத்தப்படும் என்பதால், முதல் அமைச்சர் அலுவலகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி மூலம் தனது எண்ணத்தை பட்டுவர்த்தனமாக தெரிவித்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று மனம் திறந்தார், முதல்வருக்கு மிக,மிக நெருக்கமான இளைஞரணி முன்னணி பிரமுகர் ஒருவர்.

நல்லரசு.வின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் அந்த முன்னணி நிர்வாகி தொடர்ந்து பேசினார்.

இரண்டாம் நிலையில் உள்ள மூத்த அமைச்சர்கள் சிலர், தங்கள் துறையில் சில ஒப்பந்தங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கி, கமிஷன் தொகையாக பல நூறு கோடி ரூபாயை பெறுவதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகிறார்கள் என்ற தகவல்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சூடாகி விட்டதாம். அதேபோல, புதிதாக அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் சென்னையில் உள்ள ஒரு அமைச்சரும், தென் மாவட்டத்தில் உள்ள மூன்று அமைச்சர்களும்,மேற்கு மண்டலத்தில் உள்ள இரண்டு  அமைச்சர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் குடும்பத்தினரின் தலையீட்டை முழுமையாக அனுமதித்து, அவர்களின் மூலம் நேர்மையற்ற முறையில் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஆதாயம் பார்க்க அனுமதித்திருப்பதும் அரசல் புரசலாக வெளியாகி, திமுக ஆட்சிக்கு அவப்பெயரை தேடி தரும் சூழலை உருவாக்கியுள்ளது.

இவற்றையெல்லாம் உளவுத்துறை அறிக்கை மூலம் அறிந்து அதிர்ச்சியாகியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசு நிகழ்வின் போதோ அல்லது தனிப்பட்ட சந்திப்புகளின் போதோ, மூத்த அமைச்சர்கள் முதல் ஜூனியர் அமைச்சர்கள் வரை அனைத்து அமைச்சர்களுக்கும் கடிவாளம் போடும் வகையில் முன்னெச்சரிக்கை செய்தும் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லாததால், அவசர கதியில் செயல்பட்டு வரும் அமைச்சர்களுக்கு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மூலம் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்ற கடுமையான மெசேஜை பாஸ் செய்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார் அந்த இளைஞரணி நிர்வாகி. முதல்வரின் எச்சரிக்கை மணியின் சாரம்சம் இதுதான்.  

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதுவும் தனது தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும் இன்றைய சூழலில் பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், ஆட்சியில் முறைகேடுகள் நடப்பதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். தனிபட்ட ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டோம் என்றால், மக்களின் நம்பிக்கையை வெகு விரைவாக இழந்து விடுவோம். கடந்த பத்தாண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால், முன்னணி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவருமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருப்பது, என்பது சாதாரண விஷயமில்லை. முந்தைய அதிமுக ஆட்சியை அகற்ற திமுக முன்னெடுத்த போராட்டங்கள், அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். அதற்காக, ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன், மக்கள் பணத்தில் குளிர்காய நினைப்பது ஜனநாயக பாதைக்கு உகந்தது இல்லை. கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி போல, அவசர அவசரமாக அடித்து ஆடி நினைத்ததை சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி இருக்கக் கூடாது. நின்று நிதானமாக ஆடி இலக்கை எட்டும் வகையிலான டெஸ்ட் மேட்ச் போல, இந்த ஐந்தாண்டு காலமும் திமுக ஆட்சி நல்ல பெயரை எடுக்க வேண்டும். 

ஐந்தாண்டு காலம்தான் ஆட்சி இருக்கும் என்ற நினைப்பிலும் செயல்படக் கூடாது. அடுத்த ஐந்தாண்டுக்கும் திமுக ஆட்சிதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், அவரவர் துறைகளில் பொறுப்புடன், எந்தவொரு முறைகேட்டிற்கும் ஆளாகாமல் அமைச்சராக இருப்பவர்களின் செயல்பாடுகள் மட்டுமல்ல, அவர்தம் குடும்பத்து வாரிசுகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 

தேசியக் கொடி கட்டிய கார், ஐஏஎஸ், ஐபிஎஸ்.களின் மரியாதை, மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களை வேலைவாங்குவது, கண்காணிப்பது, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த மாவட்ட கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி, ஐ.ஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, மாவட்டம் முழுவதும் உள்ள மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நேர்மையுடன்தான் செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போன்ற அதிர்ஷ்டம் எல்லாம் பிரபலமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கே எளிதில்  கிடைத்துவிடாது.

பொதுசேவையில், அரசியல் வாழ்ககையில் அமைச்சர் பதவி என்பது உச்சகட்ட அங்கீகாரம். அதனால், கலைஞர் ஆட்சியின் போது எப்படி செயல்பட்டீர்களோ அதைபற்றியெல்லாம் எனக்கு துளியும் கவலையில்லை. எனது தலைமையிலான ஆட்சியில்,  பொதுமக்களிடம், அந்தந்த மாவட்ட மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கும் வகையில் எந்தவொரு அமைச்சரும் செயல்பட்டு விடக் கூடாது.

தலைவர் நம்மிடம் சகஜமாகதானே பழகுகிறார். அதனால், நாம் எந்த எல்லையை வேண்டுமானாலும் தாண்டலாம் என்றால், அவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அரசாங்க விஷயங்களில் மன்னிப்பு என்பது எல்லாம் கிடையாது. அதேபோல சிபாரிசுக்கும் இடம் கிடையாது. இனிவரும் ஒவ்வொரு நாளும் அமைச்சர்களுக்கும், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் அக்னிப் பரீட்சை போன்ற காலம்தான். அதனால், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரை, மூத்த அமைச்சர்கள் முதல் இளைய அமைச்சர்கள் வரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். பாதை மாறினால், அவர்களுக்கு மரியாதையும், கௌரவமும் கொடுத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எனும் பதவியை சிறிதும் தயக்கமின்றி பிடுங்கி விடுவார்.

இப்படி முதல்வர் குரலாகவே, அனைத்து அமைச்சர்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உரிய முறையில் தகவலை தெரிவித்துவிட்டார். அமைச்சர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் பரிமாறப்பட்ட எச்சரிகை மணியைதான், பாரதியார் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

அமைச்சர்களின் செயல்பாடுகளை நானே (முதல்வர்) நேரடியாக கண்காணிப்பேன் என்று முதல்வர் கூறிய அக்னி வார்த்தைகளுக்குள் இவ்வளவு சங்கதிகள் அடங்கியிருக்கின்றன.

குறள் போல், இரண்டடி வார்த்தைகளுக்கு பின்னால், மூத்த ஐஏஎஸ் அதிகாரி, அனைத்து அமைச்சர்களுடன் பரிமாறிக் கொண்ட தகவல்களில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை முழுமையாக மறைந்து கிடக்கிறது என்றார் அந்த திமுக இளைஞரணி முன்னணி நிர்வாகி.

அவரின் வார்த்தையை ஆமோதிக்கும் வகையில்தான் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் கூற்றும் உள்ளது.

மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் சரி, ஜூனியர் அமைச்சர்களாக இருந்தாலும் சரி, நெருப்பாற்றில் நீந்துவது போன்றதாகதான் இருக்குமாம்….

எது எப்படியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைக் காப்பாற்றினால் சரிதான்….