Sat. Nov 23rd, 2024

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மகள் செல்வி – முரசொலி செல்வம் ஆகியோரின் பெயர்த்தி திருமண விழா சென்னையில் நடைபெற்றது. நேற்றிரவு மணமகன் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்து வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் குடும்ப விழாவில் மு.க.அழகிரியும் தனது குடும்பத்தினருடன் (மனைவி காந்தி, மகன் தயாநிதி) ஆகியோருடன் கலந்து கொண்டார்.

இந்த திருமண விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அண்ணார் மு.க.அழகிரி மீதான வருத்தத்தை மறந்து, மன்னித்து, சகோதரருடன் உறவை பலப்படுத்திக் கொள்வார். அதன் மூலம் கலைஞர் குடும்பத்தில் உள்ள மன கசப்புகள் எல்லாம் மறைந்து போகும் என செல்வி குடும்பத்தினர் உள்பட அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர்.

ஆனால், மு.க.அழகிரியுடனான சந்திப்பை தவிர்க்கும் வகையில், அவரது வருகைக்கு முன்பாகவே திருமண விழாவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுவிட்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்த செல்வி மேற்கொண்ட பாசப் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை.

பொதுவாக கலைஞர் மு.கருணாநிதி குடும்ப உறவுகளின் திருமண விழாக்கள், அவர் மறைவுக்கு முன்பு வரை அப்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமையில் தான் நடைபெற்றன. ஆனால், இருவரின் மறைவுக்குப் பிறகும் கலைஞர் குடும்ப திருமண நிகழ்வுகளில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.