அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் திமுக.வுக்கு தாவுவதை தடுக்க போராடும் பா.வளர்மதி.. நெல்லைக்கு அடிக்கடி பறந்து மகளிர் அணி நிர்வாகிகளை தாஜா செய்யும் தந்திரம்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், அதிமுக கூடாரமே காலியாகிவிடுமோ என்று பரிதாபப்படும் அளவுக்கு அக்கட்சியில் இருந்து , முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மகளிர் அணி பிரபலங்கள், முக்கிய நிர்வாகிகள் என நாள்தோறும் திமுக.வில் ஐக்கியமாவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக கூடாரத்தை காலி செய்வதில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவு சலசலப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதுவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அதிமுக மகளிர் அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான விஜிலா சத்யானந்த் முதல் பிரபலமாக திமுக.வில் ஐக்கியமாக அவரைத் தொடர்ந்து தென்காசி முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் ஐக்கியமாகினர்.
இந்த வரிசையில் கடந்த வாரத்தில் சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., முத்துச்செல்வியும், அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வின் வீரமங்கையாக மாறிவிட்டார்.
நெல்லை மாவட்ட அதிமுக மகளிர் அணிக்கு என்னவாயிற்று? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மகளிர் அணி முக்கிய நிர்வாகியிடம் பேசினோம். நெல்லை மாவட்ட விவகாரத்தால் இரட்டை தலைமையே அரண்டு போயிருக்கிறது என்ற பீடிகையோடு பேசினார், அந்த பெண் நிர்வாகி.
திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பிரபலங்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடி பரிச்சயம் கொண்டவர்கள். அதனால், அதிமுக.வின் உண்மையான விசுவாசியாக, ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் களப் பணியாற்றுவதில் சளைக்காதவர்கள். அதுபோல, அதிமுக ஆட்சியின் போது இருந்த நால்வர் அணி, ஐவர் அணி என மூத்த அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றிய மகளிர் அணி நிர்வாகிகளில் முதன்மையானவர் விஜிலா சத்யானந்த்.
மேலும், அதிமுக தலைமைக் கழக மூத்த நிர்வாகிகளோடு நல்ல நட்பு வைத்திருந்த விஜிலா சத்யானந்த் முதல் நபராக திமுக.வில் இணைந்தது, நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்ட அதிமுக மகளிர் அணியில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. விஜிலா காட்டிய வழியில் நெல்லை மகளிரணி பிரபலங்கள் அடுத்தடுத்து, அதிமுக.வில் இருந்து விலகி ஆளும்கட்சியான திமுக.வில் ஐக்கியமானதையடுத்து, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட அதிமுக உட்கட்சிக்குள் சலசலப்பு அதிகமானது. குறிப்பாக மகளிர் அணியே ஆட்டம் கண்டது.
கொரோனோ ஊரடங்கு மற்றும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால், தனித்தனியாக திமுக.வில் ஐக்கியமான நெல்லை மகளிரணி பிரபலங்கள், நெல்லை மாவட்டத்தில் தங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க, அவரவர் பங்கிற்கு அதிமுக.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை திமுக.வுக்கு இழுக்கும் வேலையை ரகசியமாக தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் அதிமுக.வின் மகளிர் அணிச் செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த விஜிலா சத்யானந்த்க்கு மாநிலம் முழுவதும் மகளிர் அணி நிர்வாகிகளோடு நல்ல தொடர்பு இருக்கிறது.
எனவே, ஆள் பிடிக்கும் வேலையை அவர் கச்சிதமாக செய்து, எல்லா மாவட்டங்களிலும் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளை இழுத்து, திமுக.வுக்கு கூண்டோடு போகும் ஆபத்தும் இருக்கிறது என்று அச்சப்பட்டிருக்கிறது அதிமுக இரட்டை தலைமை. . விஜிலா பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளோடு பேசி வருவதும் அரசல் புரசலாக அதிமுக.வின் இரட்டை தலைமைக்கு தகவல் கிடைக்க, இருவரும் அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
விஜிலாவின் காய் நகர்த்தல்களை தடுத்து நிறுத்தி, அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளை, திமுக பக்கம் தாவாமல் தடுக்க, விஜிலா இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள, தற்போதைய அதிமுக மகளிர் அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தடாலடி அரசியலில் கைத்தேர்ந்தவருமான பா.வளர்மதியை களத்தில் இறக்கிவிட்டுள்ளது, இரட்டை தலைமை.
மாநிலம் முழுவதற்கும் அவர் செயலாளர் என்றாலும் கூட நெல்லை மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை முதல் பணியாக நினைத்து, அடிக்கடி நெல்லைக்கு விசிட் அடிக்கிறார். பா.வளர்மதியின் தலைமையில் இதுவரை இரண்டு மூன்று தடவை மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது.
மூன்றாவது முறையாக இன்றைக்கும் நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பேசும் போதெல்லாம், பா.வளர்மதி, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் தியாகங்கள், போராட்டங்கள் போன்றவற்றை உணர்ச்சியோடு சொல்லி, அதிமுக.வை யாராலும் அழிக்க முடியாது. அதிமுக.வின் மீது உண்மையான விசுவாசம் கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருபோதும் கட்சிக்கும், மறைந்த அம்மாவிற்கும் துரோகம் இழைக்க மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்திருந்தாலும் கூட, வலுவலான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. கட்சிப் பணியில் தீரமாக பணியாற்றுவதுடன் சோடை போகாமல் இருந்தால், அதிமுக.வுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் கூட்டத்திலும் பேசுகிறார். தனிப்பட்ட முறையில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் பேசும் போதும், அதிமுக.வுக்கு துரோகம் செய்துவிட்டு திமுக.வுக்கு சென்றவர்களுக்கு எதிர்காலமே இருக்காது என்று சாபமும் ஈடுகிறார்.
ஆனால், பா.வளர்மதியின் தந்திரமான பேச்சுகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் சக்தி, விஜிலா சந்தயானந் உள்ளிட்ட பெண் நிர்வாகிகளுக்கு உண்டு. அவர்களிடம் பொருளாதார வசதியும் அபரிதமாக இருக்கிறது. தென்காசியில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பதவி ஆசை காட்டியும் அம்மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளை திமுக.வுக்கு இழுக்கும் வேலை வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. தென்காசி முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி, சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., முத்துச்செல்வி ஆகியோரும் அவரவர் சக்திக்கு ஏற்ப, மகளிர் அணி நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள்..
சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் நெல்லை, தென்காசியை உள்ளடக்கிய தென் மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெருமளவில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளை ஆயிரக்கணக்கில் திமுக.வுக்கு இழுத்துச் செல்லும் வைபவமும் நடக்கவுள்ளது. விஜிலா உள்ளிட்ட பெண் பிரபலங்களுக்கு தேவையான ஆலோசனைகளை தூத்துக்குடி எம்.பி.யும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழியும் அடிக்கடி கூறி வருவதாக தகவல் கசிகிறது. ஆக மொத்தத்தில் இன்றைய நிலையில் அதிமுக மகளிர் அணிக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல முடியும். விஜிலா அன் கோ வேட்டையாடும் முயற்சிக்கு பா.வளர்மதியால் அணை போட்டு தடுத்து விட முடியுமா என்பது சந்தேகம்தான் என்று பெருமூச்சு, கீழ்மூச்சு வாங்க கூறி முடித்தார் நெல்லை அதிமுக மகளிர் அணி நிர்வாகி..
நெல்லை என்றாலே தொல்லை என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அடிக்கடி கூறுவார். அந்த வார்த்தை இன்றைக்கு அதிமுக.வுக்கு சரியாக பொருந்தும் போல…