Mon. May 6th, 2024

கொரோனா தடுப்புபூசி போடும் பணியை தமிழக சுகாதாரத்துறை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடந்த பல நாட்களாக தடுப்பூசி 24 மணிநேரமும் போடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் அலை தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை முன்வைத்து மாநில சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கையை மேற்கொண்டு, இன்று 40 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, காலை முதலே பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் எல்லை நாயக்கன்பட்டி மற்றும் வல்லநாடு ஆகிய ஊர்களில் நடைபெற்று வரும் முகாம்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல, எஞ்சிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் “மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்” 909 மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனோ தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, சுகாதாரத்துறை அலுவலர்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனும், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். .

இன்று காலை 7 மணியளவில் துவங்கிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு தாமதம் இன்றி தடுப்பூசி செலுத்துவதற்காக தேவைக்கு ஏற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.