Mon. Apr 29th, 2024

திமுக ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடம் கடந்த மே 2 ஆம் தேதி முதலாகவே, ஒளி வெள்ளத்திலும், மக்களின் நினைவு வெள்ளத்திலும் மிதக்கத் தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் அடிக்கடி நினைவிடத்திற்குச் சென்று தந்தையை விட மறைந்த திமுக தலைவருக்குரிய மரியாதையை அதிகமாக வழங்கும் வகையிலேயே மரியாதை செலுத்தி வருகிறார். அவரின் பாதையில் அனைத்துத் அமைச்சர்களும் கலைஞரின் நினைவிடத்திற்கு அடிக்கடி சென்று மரியாதையும், நன்றியையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததையொட்டி, நாள்தோறும் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்யும் அமைச்சர்களும், கலைஞர் நினைவிடத்திற்குச் செல்வதால் கடந்த பல மாதங்களாக அங்கு ஒளிவெள்ளமும், ஊடக வெளிச்சமும் அதிகமாக மேக மூட்டமாய் எப்போதும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் ஒளிவெள்ளம் பாய்கிற போது அதன் எதிர்பக்கம் இருள் சூழும் என்ற இயற்கையின் விதிக்கு ஏற்ப, மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான செல்வி ஜெயலலிதாவின் நினைவிடம், ஆள் அரவமற்ற ஆழ்ந்த அமைதிக்குக் சென்றுவிட்டது.

கடந்த பலமாதங்களாக எந்த பரபரப்பும் இன்றி நீண்ட நெடிய நாட்களாக இருந்த மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்றைக்கு உலகம் முழுவதும் நினைவுகூரும் வகையில் செய்து விட்டார் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான தலைவியில், செல்வி ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று, அவரைப் போன்றே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அவரது படத்தயாரிப்பினரை கண்ணீர் சிந்த வைத்தவர் கங்கனா. வரும் 10 ஆம் தேதி மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையிட தயாராகி வரும் நிலையில், அந்த திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரியமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த 2 வாரம் கழித்து தலைவி திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரியைமளார்கள், தியேட்டர்களில் படம் வெளியான 4 மாததங்களுக்குப் பிறகுதான் ஓடிடி.தளத்தில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இந்த விவகாரத்தினால், தலைவி திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களின் தயக்கத்தை அறிந்த கங்கனா ரனாவத், துயரத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை நேற்று பதிவு செய்திருந்தார். அதில், துயரமான நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலால் மனவேதனையில் இருக்கும் கங்கனா ரனாவத், தனது மனஉளைச்சலுக்கு தீர்வு காணும் வகையில், வெளிப்படுத்த முடியாத உணர்ச்சியோடு இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள செல்வி ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய கங்கனா, தலைவி திரைப்படம் எந்த சிக்கலும் இன்றி வெளியாவதற்கு அம்மாவின் ஆன்மாவிடம் முறையிட்டிருக்கிறார் என்கிறார்கள் புகைப்படக்கலைஞர்கள்.

செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலத்திய கங்கனா ரனாவத், அப்படியே திரும்பி விடாமல், மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி நினைவிடங்களிலும் உருக்கமாக மரியாதை செலுத்தி மனிதநேயத்தையும், பொது வாழ்க்கைக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தும் மிகுதியானத கண்ணியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் கங்கனா ரனாவத்.

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளிடம் காணப்படாத பண்பையும், மனிதநேயத்தையும் கங்கனா ரனாவத்திடம் பார்க்க முடிந்ததாக கூறுகிறார் தற்செயலாக அங்கு செல்ல நேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர்….

..