Fri. Nov 22nd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உரிய வருமானத்தை விட 73 சதவீதம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அதுதொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று வாதாடினார்.

மேலும், அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது அவருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்டபோது, வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகதான் சொத்து சேர்த்ததாக தெரிவித்து வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக 73 சதவீதம் அளவுக்கு கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது

அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி நிர்மல்குமார் , வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். .

வழக்கின் பின்னணி….

அதிமுக ஆட்சியின் போதே கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய அப்போதைய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் லட்சுமி ஐபிஎஸ்.ஸும், அவருக்குப் பிறகு அதே பதவிக்கு வந்த கண்ணம்மாள் ஐபிஎஸ்.ஸும் வருமானத்திற்கு அதிகமாக கே.டி.ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்திருப்பதை கண்டறிந்தனர். ஆனால், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக செயல்படாத இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகளையும் அடுத்தடுத்து மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு ஆர்.பொன்னி ஐபிஎஸ் அதிகாரியை நியமித்தார். அவாதான் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக 10 சதவீதத்திற்கு குறைவாகதான் சொத்து சேர்த்துள்ளதாக கூறி, வழக்கை முடித்து வைக்க முயன்றார்.
ஆனால், அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கு விசாரணையாக முறையாக மீண்டும் துவங்கியது. கீழே சென்ற சக்கரம் மீண்டும் மேலே வரும் என்பதைப் போல, எந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக இருந்ததோ, அதே துறையில் உயரதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை மாற்றப்பட்ட பிறகு, கே.டி.ராஜேந்திர பாலாஜி 73 சதவீதத்திற்கு சொத்து சேர்த்திருக்கிறார். விசாரணை மீண்டும் நடைபெறுகிறது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

கேவியட் மனு தாக்கல்

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்புக்கு தடை விதிக்க கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஒருவேளை மனு தாக்கல் செய்தால், அதன் மீதான விசாரணையின் போது தங்கள் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.