மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் அறிவிப்பை வரவேற்று அதிமுக எதிர்க்கட்சி த் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது அதிமுக.விற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் பேசியது;
கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். என் தந்தை கலைஞரின் தீவிரமான பக்தர். கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது.
கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்..
50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி; பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர் என்று ஓபிஎஸ் கூறினார்..
அதிமுகவினர் கோபம்….
சட்டப்பேரவையில் இன்று கலைஞர் மு.கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை வரவேற்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு பேசின. அவர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வமும் மிகுந்த பூரிப்புடன் பேசினார்கள்.
அவரின் வாழ்த்துரை, மற்ற அதிமுக சட்டமனற் உறுப்பினர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்த நாளில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க மிகவும் மெனக்கெடுகிறார் ஓ.பி.எஸ் என்ற குற்றச்சாட்டு அதிமுக தொண்டர்களிடம் இருந்து அதிகமாக எழுந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மனக்குமறல்களை மேலும் அதிகமாக்கும் வகையில்தான், சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கு எதிராக மிதவாதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
நேற்றைய தினம், சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி பேசும் போதும், கடந்த கால சட்டப்பேரவை நினைவுகளை கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல், அமைச்சர் துரைமுருகனை வானளவுக்கு புகழ்ந்து தள்ளினார். 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறையில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கடுமையாக தாக்கப்பட்டார். தலைவிரி கோலமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட செல்வி ஜெயலலிதா, அந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது தனது சேலையை இழுத்து திமுக அமைச்சர் துரைமுருகன் அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அப்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரதானமாக இந்தக் குற்றச்சாட்டையும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் ஊர், ஊராக பிரசாரம் செய்தனர். தன் இறுதி மூச்சு வரை திமுக.வையும், அதன் முன்னணி தலைவர்களில் ஒருவரான துரைமுருகனை கடுமையாக எதிர்த்து வந்தவர் செல்வி ஜெயலலிதா என்று நினைவு கூரும் மூத்த ஊடகவியாளர்கள், செல்வி ஜெயலலிதாவுக்கு அவமானத்தை தேடி தந்த அமைச்சர் துரைமுருகனை வாயார புகழ்வதற்கு எப்படிதான் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனசு வந்ததோ என்று கோபத்துடன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிபட்ட சூழலில், மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைந்ததை, சட்டப்பேரவையில் அவரின் புகைப்படம் திறந்து வைத்த நிகழ்வையும் திமுக முன்னணி தலைவர்கள் எவ்வளவு தரக்குறைவாக விமர்சனம் செய்தார்கள். அதைப்பற்றியெல்லாம் துளியும் வருத்தம் கொள்ளாமல், அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வமே, கலைஞர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதை வரவேற்று பேசலாமா என்று கொதிப்புடன் கேள்வி கேட்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளின் போது சட்டப்பேரவையில் பங்கேற்காமல், சாதாரண அதிமுக சட்டமன்ற உறுப்பினரை பங்கேற்று பேச அனுமதிக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் இடம் பெறும் வகையில் ஓ.பி.எஸ். ஸே புகழ் மாலை சூட்டக் கூடாது என்கிறார்கள். முந்தைய சட்டப்பேரவை நிகழ்வுகள் எல்லாம் வரலாற்று குறிப்புகளாக அப்படியே இருக்கும்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் செல்வி ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட தரக்குறைவான விமர்சனங்கள் எல்லாம் வரலாற்று குறிப்புகளாக இன்றைக்கும் இருக்கிறது. இப்படிபட்ட நிலையில், பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு, தன்மீது திமுக எந்தவொரு வழக்கையும் போட்டுவிடக் கூடாது என்ற பதைபதைப்பில், திமுக அரசை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார் என்று குமறுகிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.