Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியான நாளில் இருந்து, தமிழகத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலையை நியமித்து இருப்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளம் வயது நிர்வாகிதான் நியமிக்கப்படுவார் என்று அடித்துக் கூறுகிறார்கள், சென்னையில் உள்ள மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள். அதற்குகேற்ப, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி எம்.பி. பெயரும் பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான நாட்களில் ஊடக வெளிச்சத்தை தவிர்த்து மறைமுக அரசியலிலேயே பெரும்பாலான நேரங்களை செலவிட்டு வரும் கார்த்தி சிதம்பரம், கடந்த பல மாதங்களாக தொகுதியில் சுற்றுப்பயணம், செய்தியாளர்கள் சந்திப்பு என நாள்தவறாமல் செய்திகளில் அடிபடும் அளவுக்கு கச்சிதமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால், தனிப்பட்ட முறையில் கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகளை ரசிக்காத காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, கார்த்தி சிதம்பரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்வதற்கு துளியளவு கூட ஆர்வம் காட்டவில்லை என்று டெல்லியில் உள்ள தமிழக காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவரைத் தவிர்த்து, கிருஷ்ணகிரி எம்.பி.யான மருத்துவர் செல்லகுமார் பெயரும் பலமாக அடிபடுகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவராக 2000 ஆம் ஆண்டில் பதவி வகித்த போது தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பெருமளவிலான இளைஞர்களை காங்கிரஸில் சேர்வதற்கு முனைப்பான களப்பணியாற்றியவர் என்பதை டெல்லி காங்கிரஸ் மேலிடம் அறிந்து வைத்திருந்தாலும் கூட, இன்றைய தேதியில் அவரின் உடல் நிலை, ஆக்கப்பூர்வமான, ஆவேசமான காங்கிரஸ் தலைவராக செயல்படும் அளவிற்கு ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுந்திருக்கிறது. அதனால், அவரின் பெயரும் கூட தேர்வுப் பட்டியலில் சிகப்பு மை கோடிட்ட இடத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் மூவ்களை நன்கு அறிந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்.

இப்படி டெல்லி காங்கிரஸ் தலைமை வித்தியாசமாக சிந்தித்துக் கொண்டிருக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிடடியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் புதல்வர் விஷ்ணுபிரசாத் எம்.பி., தமிழகத்தில் உள்ள 5 பெரும்பான்மையான சமுதாயத்தில் ஒன்றாக உள்ள வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக குரல் கொடுத்து வருகிறார். அவரின் குரல் டெல்லி காங்கிரஸ் மேலிடத்தையும் தட்டியெழுப்பி இருப்பதால், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த, அதுவும் இளைஞரான விஷ்ணு பிரசாத் எம்.பி.யே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண் தலைவர்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படும் என்று ஏதாவது நிரந்தர பட்டயம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா? ஏன் காங்கிரஸ் கட்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் தலைவர்கள் ஒருவர் கூட காங்கிரஸ் மேலிடத்தின் கண்களில் படவில்லையா என்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸில் உள்ள நிர்வாகிகள் உரக்க குரல் கொடுக்கிறார்கள். அவர்களின் முழக்கம் ராகுல்காந்தி காதில் விழுந்ததோ என்னவோ, அண்மையில் நடைபெற்ற மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆவேச ராணியாக மாறி மக்களவையில் அதகளம் பண்ணிய கரூர் எம்.பி. ஜோதிமணியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்து, தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் புதிய சகாப்தம் படைக்க தீர்க்கமாக இருக்கிறார் ராகுல்காந்தி என்றும் அடித்துக் கூறுகிறார்கள் மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர்.

கார்த்தி, செல்வகுமார், விஷ்ணு பிரசாத் ஆகிய மூன்று எம். பி. க்களை விட ஜோதிமணி எம். பி தான் இன்றைய தேதியில் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் அதிக நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.. அந்த அம்சமும் அவரை தலைவராக நியமிக்க கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்கிறார்கள்..

இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்திபவனில் பலதரப்பட்ட குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, முன்னாள் எம்.பி.யான பி.விஸ்வநாதன், டெல்லியே முகாமிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு, அங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை நாள்தோறும் சந்தித்து காய் நகர்த்தி வருகிறார்.

தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக சில கோடிகளை கூட செலவழிக்க தயாராகவும் இருக்கிறார் பி.விஸ்வநாதன் என்று கண் சிமிட்டுகிறார்கள் அவரது விசுவாசிகள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் ஒரு சொத்து தொடர்பாக நடைபெற்ற பஞ்சாயத்தில், கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பெரும்தொகை பி.விஸ்வநாதனுக்கு கை மாறியது என்றும் வாழ்நாளில் இதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக பார்த்திராத பெருந்தொகை கைக்கு வந்ததையடுத்து, தலைவர் பதவியை எப்படியாவது அடைந்தே தீருவேன் என்ற சபதத்தோடு டெல்லியிலேயே கடந்த பல நாட்களாக முகாமிட்டிருக்கிறார் பி.விஸ்வநாதன் என்கிறார்கள் அவரது விசுவாசமிக்க ஆதரவாளர்கள்.


தமிழ்நாடு காங்கிரஸில் பெரும்பான்மையான நிர்வாகிகளிடம் ஆதரவு இல்லாத போதும், டெல்லி தலைவர்களின் மனதை கரைத்து தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக பி.விஸ்வநாதன் செய்து வரும் சித்துவேலைகளை அறிந்த தமிழக காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள், 2012 ஆம் ஆண்டு அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த போது, தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவர் முன்வைத்த விமர்சனங்களை எல்லாம் ஒன்றாக சேகரித்து, இளம் தலைவர் ராகுல்காந்திக்கு புகாராக அனுப்பி வைத்து வி.விஸ்வநாதனின் முயற்சிகளுக்கு கொள்ளி வைத்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களும் நானும் என்ற பெயரில், பேருந்து பயணம், மிதிவண்டி பயணம், மாட்டுவண்டி பயணம், புகைவண்டி பயணம், ஆட்டோ பயணம், நடை பயணம் என பவ வகையான பயணத்தை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டேன். அதை காப்பியடித்துதான் 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி நமக்கு நாமே என்ற பெயரில் மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பயணமானார் என்று 2015 ஆம் ஆண்டில் பி.விஸ்வநாதன் கிண்டலடித்தார்.

இப்படி, திமுக தலைவரையும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பி.விஸ்வநாதன் கிண்டலடித்ததை திமுக முன்னணி தலைவர்களும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக முன்னோடிகளும் மறந்துவிடவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சிந்தனைப் போக்கை கொண்ட பி.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால், இன்றைய நிலையில் தமிழக காங்கிரஸுக்கு பின்னடைவுதான் ஏற்படும் என்பதை அழுத்தம் திருத்தமாக டெல்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு புகாராக அனுப்பி வைத்துவிட்டோம். அதனால், டெல்லியிலேயே தங்கி எத்தனை கோடி செலவழித்தாலும் பி.விஸ்வநாதன் ஒருநாளும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுவிட முடியாது என்று உள்அரசியலை புட்டுபுட்டு வைத்தார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

தமிழக காங்கிரஸின் மானம், டெல்லியிலும் இப்போது கப்பலேறிக் கொண்டிருக்கிறது.