Sat. Nov 23rd, 2024

கொட நாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிப்பதுதான் திமுக அரசுக்கு முக்கியமா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

அவருக்கு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சுடச்சுட பதிலளித்துள்ளார்.

அதன் விவரம் இதோ: கொடநாடு விவகாரம் பற்றி முரண்பாடாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார். கொடநாடு விவகாரம் பற்றி முதலில் சட்டப்பேரவையில் பேசியது அதிமுகவினர் தான். அப்போது கூட பேரவைத் தலைவர் கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொண்டார். கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை நிகழ்வில் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்களே சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கொடநாட்டில் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. இந்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது பழிவாங்கும் வகையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதனிடையே கொடு நாடு கொலை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர் பேசியதாவது:

ஜெயக்குமார் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். கொடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் பயப்படுகிறார்கள்? சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயார்.

சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள்? ஜாமினில் வெளியே வந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன்? கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிப்பதற்கு அதிமுக ஏன் பயப்படுகிறது.சந்தேகங்களுக்கு பதில் அளிக்காமல் கோடநாடு விவகாரம் கண்டு அதிமுக அஞ்சுவது ஏன்? என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.