Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

இதுபோன்ற செய்திக்கட்டுரைகளை எழுதவே கூடாது என்றுதான் பிடிவாதம் காட்டி வருகிறேன்..ஆனால், கிடைக்கிற தகவல்கள், கை விரல்களை துடிக்க வைத்து, எத்தனை கட்டுப்பாடுகள் போட்டுக் கொண்டாலும்கூட செய்தியை டைப் செய்துவதற்கு கட்டுப்பாடுகளை தகர்த்துக் கொண்டு வேகமெடுத்துவிடுகின்றன, விரல்கள்….தவிர்க்கமுடியாத தவிப்பு இது…

1985 காலகட்டத்தில் வாலிப பருவத்தில் இருந்தவர்களுக்கு,

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாயே என் நெஞ்சில்………

. என்ற பாடல், இதயத்திற்குள் தீப்பொறிகளை கிளப்பிவிடும்…முடிந்தால் உதடுகளை அசைத்து உச்சரித்துப் பாருங்கள்.. முடியவில்லையென்றால், யூ டியூப்பில் ஒருமுறை பாடலை கேட்டுக் கொள்ளுங்கள்…

https://youtu.be/2C78pEVf9oY

அதே காலகட்டத்தில் வெளியான முதல் மரியாதைப் படத்தில் மெல்லிய காதல் உணர்வுகளை தூண்டி விடும்


ராசாவே வருத்தமா…ஆகாயம் சுருங்குமா…ஏங்காதே…அதை உலகம் தாங்காதே…அடுக்குமா..சூரியன் கருக்குமா…

பாடலை முணுமுணுத்துப் பாருங்கள்..இல்லையெனில் இதோ உங்களுக்காக யூ டியூப்பில் அந்தப் பாடல்…

ஆட்டோகிராப் படத்தில் வரும்

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா….மயிலிறகில் வாசம் வந்துச்சா….

பாடல் காட்சிகளையும் பின்னோக்கி பார்த்துக் கொள்ளுங்கள்…

இதையெல்லாம் கடந்து அண்மைகாலத்தில் பள்ளி பருவம் முதல் முதுமை வரை கடந்து வரும் காதலா, ஆத்மார்த்தமான நட்பா.. இனம் புரியாத அளவுக்கு மனப்போராட்டத்தை வெளிப்படுத்திய 96 திரைப்படத்தில் ஒலிக்குமே….

பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சாதா…

ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்
ப்ரத்யேகத் தேடல்
தீயில் தீராத காற்றில்
புள் பூண்டில் புழுவில் உளதில் இலதில்..

முழுசாய், அனுபவித்து கேட்டு, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

இவ்வளவு பில்டப் கொடுப்பதற்கு காரணம், 4 திரைப்படங்களிலும் பின்னி பிணைந்திருக்கும் இருபாலருக்கு இடையேயான மாபெரும் உணர்வுப் போராட்டத்தை உருவாக்கிய இனம் புரியாத உணர்ச்சிகளின் கொந்தளிப்புகள், கடந்த வாரத்தில் ஒருநாள் தலைமைச் செயலகத்தில், மூத்த அமைச்சரின் அறையின் அலுவல் நாள் ஒன்றில் அரங்கேறியதை உங்கள் கண் முன் நிறுத்தப் போகிறேன். அப்போது பின்னணியில் இந்த பாடல்களின் வரிகள் ஒலித்தால், உங்களுக்குள்ளும் ஒருவிதமான காந்த அலைகள் பரவி எழும் என்ற நப்பாசைதான்…

ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக வெளிநடப்பு செய்ததால், ஊடக உலகில் பரபரப்பு அதிகமானது.

இரண்டாம் நாள் வேளாண் துறையின் நிதிநிலை அறிக்கை.. புயல் இல்லாமல் அமைதியாக முடிந்தது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்
ஆகஸ்ட் 16 மற்றும் 17 காரசாரமான விவாதம்.
ஆகஸ்ட் 18 அதிமுக வெளிநடப்பு
ஆகஸ்ட் 19 ஆளுநரிடம் முறையீடு..

இப்படி கடந்த 13 ஆம் தேதியில் இருந்து நேற்றைய தினம் வரை (ஆகஸ்ட் 19) வரை ஆளும்கட்சியான திமுக.வும், எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பரபரப்பாகவே இயங்கினார்கள்.
இப்படி கட்சி பேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்காக குறிப்புகள் தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மூத்த அமைச்சர் ஒருவர், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படித்த மாணவி ஒருவரை எதிர்பாராத நேரத்தில் சந்தித்தபோது, பேச்சு மூச்சின்றி பல நிமிடங்கள் மெய் மறந்து நின்ற கோலத்தைதான், தலைமைச் செயலக பட்சி ஒன்று நம் காதில் போட்டது.

இப்படியொரு சந்திப்பு உண்மையில் நடந்திருக்குமோ என்று சந்தேகம், 100க்கு 200 சதவிகிதம் எனக்கு தோன்றியது. ஆனால், சந்திப்பு நிகழ்வு உண்மையென நம்புவதற்கான ஆதாரங்களை காட்டியபோது வேறு வழியில்லை. பட்சி விவரித்த அந்த காட்சியை அப்படியே இங்கு பார்வைக்கும், பரவசத்திற்கும் வைக்கிறேன்…

மூத்த அமைச்சர் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை. ஏற்கெனவே அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கடந்த முறை அவர் அமைச்சராக இருந்த போதும், அவருடன் படித்த மாணவி, சென்னையில்தான் இருந்திருக்கிறார். இருவருக்கும் ஒரே வயதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் அமைச்சராக இருந்த போதும், அந்த பெண்மணிக்கு அமைச்சரை சந்தித்து அளவளாவ வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது.

ஆனால், அப்போது அமைச்சரை நேரில் சந்திக்க அவருக்கு வழி தெரியவில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் அவருக்கு கிடைத்த நண்பர் ஒருவர், தலைமைச் செயலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர். அவரிடம், மூத்த அமைச்சருக்கும் தனக்கும் இடையே பள்ளி காலத்தில் நிலவிய நட்பை விவரித்திருக்கிறார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பிராமண பெண்ணைப் போல மிக, மிக அழகாக, சுண்டினால் இளம்ரத்தம் தெரியும் அளவுக்கு வெண்மை நிறத்தில் இருந்ததாகவும், தன்னை விட்டு ஒருபோதும் அமைச்சர் விலகி போக மாட்டார் என்றும் அந்த பெண்மணியே மிகுந்த பூரிப்போடு சொல்லியிருக்கிறார். அதனால், தன் பெயரைச் சொன்னால் போதும் அமைச்சர் உருகிவிடுவார் என்றும் கூறவே, நண்பருக்கு ஒரு நிமிடம் சந்தேகம் வந்து, உங்களுக்குள் காதல் இருந்ததா? என்று கேட்டிருக்கிறார்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஒருநிமிடம் கூட தாமதிக்காமல் பதில் சொன்ன அந்த பெண்மணி, சிறுவர், சிறுமியாக இருந்த அந்த காலத்தில் இருவர் மனதிலும் எந்தவிதமான சிந்தனையும் தோன்றியதாக நினைவு இல்லை என்றும் ஆனால், ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த பாசத்தை பொழிந்திருக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். அவரின் முகபாவனைகளைப் பார்த்த அந்த நண்பருக்கு, 96 திரைப்படத்தின் கதாநாயகி திரிஷா கண்ணில் தோன்றி மறைந்திருக்கிறார்.

தான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் பெண்மணி, அமைச்சர் மீதான நேசத்தில், பள்ளிப்பருவத்தில் நடந்தவற்றை மலரும் நினைவுகளாக சொல்ல, அமைச்சரின் கைபேசி எண்ணை வாங்கி கொடுத்திருக்கிறார். எந்த நேரத்தில் அழைப்பது என்று தெரியாமல், காலை, மாலை என அழைத்திருக்கிறார் பெண்மணி. சட்டப்பேரவையில் மூத்த அமைச்சர் பிஸியாக இருந்ததால், இரண்டு நாட்களும் (ஆக 13 மற்றும் 14) கைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அதைவிட முக்கியமாக புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்ததால், அவரது உதவியாளர்களும் அதை பெரியதாக பொருட்படுத்தவில்லை.

திங்கள்கிழமை சுதந்திர தினம் என்பதால், பெண்மணியும் மீண்டும் அழைக்கவில்லை. ஆகஸ்ட் 16 ஆம் தேதி நண்பகலில் அழைப்பு வந்திருக்கிறது. மதிய உணவுக்காக தனது பங்களாவுக்கு காரில் திரும்பும் போது மீண்டும் அழைத்திருக்கிறார் அந்த பெண்மணி. அழைப்பை ஏற்ற அமைச்சர், பெயர் சொல்லாமல் பேசிய பெண்மணியின் குரலைக் கேட்டபோதும் இணைப்பை துண்டித்திருக்கிறார். மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. வேண்டா வெறுப்பாக அழைப்பை ஏற்றவர், வழக்கமாக பேசும் அதட்டலான குரலில் யாரும்மா நீ என்று கேட்க, மறுமுனையில் பெயரைச் சொன்னவுடன் அமைச்சருக்கு பேச்சே எழவில்லையாம். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, அமைச்சரை இயல்பு நிலைக்குக கொண்டு வர, பெண்மணி தொடர்ந்து பேசி, தன்னுடைய இருப்பிடத்தை தெரிவித்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக சந்திக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் இருப்பதையும் சொல்லி, நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சருடான பேச்சு விவரத்தை, பெண்மணி, தனது நண்பரிடம் சொன்னதை அப்படியே மேலே பதிவு செய்து இருக்கிறோம். அன்றிரவு அமைச்சர் அழைத்திருக்கிறார். ஆனால், அலுவல் காரணமாக பெண்மணியால் போனை எடுக்க முடியவில்லை. மறுநாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மதிய உணவு நேரத்தில் தனது பங்களாவுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது பெண்மணியிடம் இருந்து மீண்டும் அழைப்பு. அமைச்சரும் தனது ஆவலை கட்டுப்படுத்த முடியாமல், தலைமைச் செயலகத்திற்கு நேரில் வா சந்திப்போம் என்று சொல்ல, உங்களைப் பார்க்கதான் தலைமைச் செயலகத்திற்கு வந்து காத்திருக்கிறேன் என்று சொல்ல, அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி. தனது வீட்டிற்கு செல்லாமல் காரை திருப்பிக் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வந்திருக்கிறார்.

அமைச்சரை தொலைக்காட்சிகளில் பெண்மணி பார்த்திருப்பதால், அமைச்சரின் உருவம், நடை, பேச்சு ஸ்டைல் எல்லாம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், மூத்த அமைச்சருக்கு, 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பள்ளி தோழி எப்படியிருப்பார்.. அப்போதே பிராமணப் பெண்ணைப் போல அழகாக இருந்தாரே, இப்போது எப்படியிருப்பார் என்ற எண்ணம், அவரது மனதில் ஓடியதோ எண்ணவோ.. ஒருவித தவிப்புடனேயே தனது அறைக்கு திரும்பியிருக்கிறார் அமைச்சர்.

அவரின் அறை வாசலில்தான் பெண்மணி நின்றிருந்திருக்கிறார். ஆனால், அமைச்சருக்கு தெரியவில்லை. தனது அறைக்குச் சென்றவுடன் உதவியாளரிடம் தன்னை சந்திக்க யாரவது வந்தால் உடனே உள்ளே அனுப்பு என்று சொல்ல, ரொம்ப நேரமாக ஒரு பெண் உங்களை பார்ப்பதற்காக வாசலில் காத்திருக்கிறார் என்று சொல்ல, உடனே உள்ளே அனுப்பு என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில்கூட அமராமல் நின்றவாறே காத்திருந்திருக்கிறார்.

கண்ணை உறுத்தாத பட்டுப்புடைவையில், கழுத்தில் அழகான வேலைபாடு உடைய நெக்கலஸ் அணிந்து, 40, 50 வயதில் கே.ஆர்.விஜயா எப்படியான வசீகரத்தில் இருந்தாரோ அதே தோற்றப்ப பொலிவுடன், அமைச்சர் அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, அமைச்சரின் கண் இமைகள் நிலைகுத்தி நின்றிருக்கிறது சில நிமிடங்கள். அவர்கள் இருவரை தவிர, பெண்மணியுடன் இருவர் (அதில் ஒருவர் அவருடைய நண்பர்) என மொத்தம் 4 பேர் நின்ற போதும், அமைச்சரும், பெண்மணியும் மிகுந்த உற்சாகத்துடன் கொஞ்சம் சத்தமாகவே நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வயசானாலும், அழகும் ஸ்டைலும் மாறல என்ற கணக்காக, பெண்மணியின் பள்ளிப்பருவ தோற்றத்தை ஒப்பிட்டு அமைச்சர் புகழ்ந்து பேசியிருக்கிறார். என்னதான் பள்ளி காலத்து நண்பர் என்றாலும் கூட அமைச்சர் என்ற பதவிக்கு மரியாதை தரும் வகையில், அமைச்சருக்கு பொன்னாடை ஒன்றை போர்த்தியிருக்கிறார் பெண்மணி. அப்போது போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது.

தான் பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்புடையவராக அறிமுகமாகி, தனது நல்லது கெட்டதற்கு எல்லாம் உதவக்கூடிய மனம் படைத்தவராக மாறி நண்பராக உயர்ந்த மூன்றாவது நபரான அந்த நண்பரை அறிமுகப்படுத்தி, இவர்தான் உங்கள் கைபேசி எண்ணை பெற்று கொடுத்தார். இன்றைய சந்திப்புக்காக தலைமைச் செயலகத்திற்குள் அழைத்து வந்தவரும் இவர்தான் என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை, மறக்க முடியாத உணர்வுகளை ஒரு மணிநேரத்திற்கு மேலாக இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நிமிடங்களில் இருவருமே பள்ளிக்காலத்திற்கு சென்றதால், ஒருவருக்கு ஒருவர் பெயரைச் சொல்லிக் கொண்டு வார்த்தைகளில் மரியாதையை காட்டாமல், மனதிற்குள் மதிப்பு கொடுத்து கொண்டு பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

நேரம் கரைந்து போனதே இருவருக்கும் தெரியவில்லை. விடை கொடுக்க மனமில்லாமல் தனது தோழியை வழியனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர். அப்போது, பொன்னாடை போடும் போது இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தோம். அதனால், முகம் தெளிவாக பதிவாகியிருக்காது. அதனால், தன் அருகில் வா என்று பெண்மணியை அழைத்து நிறுத்தி மீண்டும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அமைச்சர். அங்கு எடுக்கப்பட்ட அனைத்து போட்டோக்களும் நண்பரின் செல்போன் ஒன்றில் மட்டுமே பதிவாகியிருக்கிறதாம்.

இப்படியாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய பள்ளி கால தோழியை பார்த்து மனம் நெகிழ்ந்துப் போன மூத்த அமைச்சர், தொடர்பிலே இரும்மா என்று பாசத்தோடு விடை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது , இருவரின் உடல்மொழியை வைத்து பார்த்தபோது, இருவருக்கும் இடையேயான உறவு, காதலா, ஆத்மார்த்தமான நட்பா என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார், இந்த சந்திப்பு நடந்தபோது எதேச்சையாக அமைச்சர் அறைக்கு செல்ல நேரிட்டபோது பார்க்க நேர்ந்ததாக கூறும் நமது பட்சி.

பெண்கள் விஷயத்தில் மூத்த அமைச்சர் விளையாட்டுப் பிள்ளையில்லை. அவரது இல்லத்திலும் மதுரை மீனாட்சிஅம்மனின் ராஜாங்கம் இல்லை. தன்னை தேடி உதவி கேட்டு வரும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்ததாக அமைச்சருக்கு எதிரான விமர்சனமும் இதுவரை எதுவும் இல்லை.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பள்ளிக் காலத்திலும், கல்லூரி காலத்திலும் நெருக்கமாக பழகும் அல்லது ஆத்மார்த்தமாக உணரும், எதிர்பாலினத்தினர் மீது ஏற்படும் ஈர்ப்பு என்பது மரணம் காலம் வரை நீடிக்கும். அப்படிபட்ட ஒரு உணர்வின் தாக்கத்தில்தான் மூத்த அமைச்சரும் ஆட்பட்டிருக்க வேண்டும். அமைச்சர் என்பதற்காகவே, தனிப்பட்ட முறையில் ஒரு பெண்மணியோடு மனம்விட்டு பேசுவதை, தனிப்பட்ட சந்திப்பை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார் அந்த பட்சி. பட்சியின் கட்சிதான் நானும்….

பவர் பாண்டி படத்தில் வரும் வெண்பனி மலரே…உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே… பெண்மணியுடனான சந்திப்பின் போது மாண்புமிகு அமைச்சர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடிகர் ராஜ்கிரண் போல மாறியிருக்கலாம்..

ஆனால், பெண்மணிக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை என்னால் இந்தநிமிடம் வரை உறுதி செய்து கொள்ள முடியவில்லை…..