கொட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மேலும் சீண்டும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்து இருப்பதுதான் தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ்.
வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அதிமுக.வை மேலும் மேலும் பலவீனப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறும் அரசியல் பார்வையாளர்கள், அப்படிபட்ட திமுக.வுக்கு வலு சேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்திருப்பதால், வரும் நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் சிக்கல்களை ஏற்படுத்துமா அல்லது அதிமுக.வுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்கள்.
இதன் பின்னணியை பார்ப்போம்…
கொட நாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்கும் வகையில், அந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயானிடம் திமுக அரசு மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தி புதிதாக வாக்குமூலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சயானின் வாக்குமூலம் முழுமையாக வெளியே வராத நிலையிலும் அந்த வாக்குமூலத்தில் தனது பெயர் சேர்க்கப்பட்டு தன்னையும் வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குதி,குதியென குதித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 17 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொய் வழக்கு போடாதே என்ற பதாகையை கைகளில் ஏந்தி திமுக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் முழக்கம் போட்டனர். அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக.வினர் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தருவதற்கு முன்பாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்து, அங்கேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு அரசியல் ரீதியாக ஆளும்கட்சியான திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விளையாட்டை அதிமுக விளையாடியது.
ஒருநாள் வெளிநடப்போடு மட்டுமே அந்த விவகாரத்தை விட்டுவிடாமல் மறுநாள், அதாவது 18 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னணி தலைவர்கள் கூட்டமாக சென்று பார்த்து, திமுக அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையையும் வழங்கினர்.
தனிநபரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை, ஒட்டுமொத்த அதிமுக மற்றும் திமுக அரசுக்கு இடையேயான மோதலாக மாற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் மீது கை வைத்தால் ஒட்டுமொத்த அதிமுக.வும் எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் முதற்கட்டமாக வெற்றிப் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.
கொட நாடு வழக்கு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டுவதாகதான் அதிமுக.வின் நடவடிக்கை இருக்கிறது என்று கிண்டலடித்திருந்தார். அன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் வெளிப்படுத்திய கருத்தின் அடிப்படையை வைத்துப் பார்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தி, கொட நாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகள் ஒருவரைக் கூட தப்ப விட்டுவிடாமல் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறோம் என்பதை அவர் வெளிப்படுத்திய கருத்துகள் மூலம் நிரூபணமாக்கியுள்ளது.
இப்படி, ஆளும்கட்சியான திமுக.வும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆளும்கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, திமுக அரசுக்கு ஆதரவாக களத்திற்கே வந்திருப்பதுதான், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்.
கொட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மறைந்திருக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூழலை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழாவின் போது சிதம்பரத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கொட நாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை அவர் சட்டத்தின் மூலம் வாதாடி தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். இதேபோலதான் திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்தன.
கொட நாடு கொலை வழக்கில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக.வுக்கு ஆதரவாக நிற்கிறது. திமுக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறது. பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக, ஆணித்தரமாக திமுக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்க தயக்கம் காட்டி வருகின்றன.
இப்படிபட்ட சூழலில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக அரசுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறார். வரும் திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 23 ) சட்டப்பேரவையில் கொட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். இப்படி அவர் அறிவிப்பதற்கு முன்பாக ஆளும்கட்சியான திமுக தலைமையுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறும் மூத்த ஊடகவியாளர்கள், ஆளும்கட்சியின் அனுமதியின்றி இப்படியொரு கவனஈர்ப்பு தீர்மானத்தை குறைந்த நாட்களில் விவாதத்திற்கு கொண்டு வர முடியாது என்று கூறும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் மேலும் சிக்கலை உருவாக்கும் வகையில்தான், கவனஈர்ப்பு தீர்மானதில் ஆளும்கட்சியின் கூட்டணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். அந்தநேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாக நின்ற திரைமறைவு போலீஸ் உயர் அதிகாரிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என பலருக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடும்.
அப்படிபட்டநேரத்தில் அதிமுக.வை ஆதரித்து பாஜக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தமாதிரியான வாதத்தை முன் வைப்பார்கள் என்பதையெல்லாம் பார்த்துதான், அதிமுக.வை காப்பாற்ற முயற்சி நடக்குமா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரும் முடிவெடுப்பார்களா என்பது வெளிச்சத்திற்கு வரும். மேலும், வெகு விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குற்ற வழக்கு தொடர்பான ஒரு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைப்பதற்காக அழுத்தமான வாதத்தை முன் வைப்பார்களா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆக மொத்தத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள்ளும், வெளி தளத்திலும் எடப்பாடி பழனிசாமியின் இமேஜை தூள் தூளாக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளும் கைகோர்த்து ஒற்றுமையாக இருக்கிறது என்பது கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஆதரவு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? என்பதை வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இன்றைய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கையே ஓங்கியிருக்கிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.