அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவு மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.
இந்த மூன்று இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக.வுக்கு 2 இடங்களும் அதிமுக.வுக்கு ஒரு இடமும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே முகமது ஜான் மரணமடைந்ததால், அந்த இடத்திற்கு தனியாகவும், 2 பேர் பதவி விலகியதால், அந்த இடங்களுக்கு தனியாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது. அதன் சட்டப்பிரிவு நிர்வாகிகள், தலைமை தேர்தல் ஆணையரை டெல்லியில் நேரில் சந்தித்து மனுவும் அளித்தனர்.
இதனிடையே, அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள ஒரு இடத்தை பாஜக மேலிடம் கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், தற்போதைய மத்திய அமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன் அந்த இடததிற்கு போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், அண்மையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் டெல்லி சென்றிருந்த போது இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், அதிமுக.வுக்கு ஆப்பு வைக்கும் வகையிலும் திமுக.வின் கோரிக்கைக்கு உடன்படும் வகையிலும் தேர்தல் ஆணையம், ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அதிமுக.வுக்கு கிடைக்க இருந்த ஒரு இடமும் அம்பேல் ஆகிவிட்டது. மத்திய பாஜக அரசு, அதிமுக.வுக்கு சாதகமாக செயல்படும் என்ற விமர்சனமும் இதன் மூலம் தவிடுபொடியாகியுள்ளது. அதிமுக.வின் இரட்டையர்களின் செல்வாக்கு, டெல்லியில் இனிவரும் காலங்களில் எடுபடாது என்பதற்கு ராஜ்ய சபா தேர்தலே மிகச் சிறந்த உதாரணமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.