சட்டப்பேரவை இன்று கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது உறுப்பினரின் கேள்விக்குப் பதில் அளித்த தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
செம்மொழி தமிழாய்வுத் நிறுவனம் தொடர்ந்து தமிழகத்திலேயே செயல்படும். பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வுத் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என்று பதிலளித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டும் என சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த உணவு அமைச்சர் சக்கரபாணி, ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் உள்ளிட்டவை என்னாச்சு? 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று சொன்னீர்கள் நிறைவேறி விட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தார்.