Sat. Nov 23rd, 2024

தாலிபான்களை எதிர்க்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் 20 ஆண்டு காலம் ஆப்கானில் லட்சக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் என்ன யூ டியூப் சேனல்களுக்காக சாம்பார், ரசம் வைப்பது எப்படி? என்று நடித்துக் கொண்டிருந்தார்களா ? என்று யாரும் கேட்டு விடாதீர்கள்…

ஆப்கான் விவகாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:

அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், ஆப்கானில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை.

அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாகவும்,எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் எனவும் பைடன் கூறியுள்ளார்.

ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது, போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இவ்வாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆப்கானியர்களுக்கு மின்னணு விசா:

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கனில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் இந்திய தூதர்:

ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..