ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லையென்றால், அந்தந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அமல்படுத்தவுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாக மாறப் போகிறது.
பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களுக்கு தேவையான பணத்தை, அந்தந்த வங்கிகளில் எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம்.க்களை தேடி அலைந்து அவசரத்திற்கு பணம் எடுக்கலாம் என்றால், அது அவ்வளவு எளிதான செயலாக இருக்காது. அதுவும் மாதத்தின் முதல்வாரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் இருப்பு என்பது சுத்தமாகவே இருக்காது.
ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சிரமத்திற்கு அளவே இல்லை. இவ்வளவு சிரமங்களை சகித்துக் கொண்டு ஏ.டி.எம். இயந்திரத்திற்கு சென்றால், அங்கு பணம் இருப்பு இல்லை என்ற தகவலே பெரும்பான்மையான நேரங்களில் தெரிய வரும். இப்படி வாடிக்கையாளர்களின் அன்றாட சிரமத்தை போக்க ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் (வெள்ளை லேபிள் ஏ.டி.எம்.) பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்தவகையில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் (வெள்ளை லேபிள் ஏ.டி.எம்.) பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.