Sun. Nov 24th, 2024

தாரை இளமதிசிறப்புச் செய்தியாளர்,,,

முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை தன்னிறைவுப் பெற்று, அதன் உச்சகட்டமான சேவையாகதான் மக்களைத் தேடி மருத்துவம் என்றும் சேவையை மக்களுக்கு வழங்குவதாக இருக்கும் என்பதும், தங்குதடையின்றி சேவையை வழங்க முடியும் என்பதும்தான் இன்றைய கள யதார்த்தம்.

விமர்சனங்களை, ஆலோசனைகளை மிகவும் விரும்புகிறவராக, பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடியவையாக இருந்தால், அதனை முறையாக, முழுமையாக செயல்படுத்தும் தீரமிக்கவராகவே இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை, தமிழக அரசின் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனிப்பவர்கள் பெருமிதமாகவே கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தவிர்த்து, அவரது தலைமையிலான தமிழக அரசின் கீழ் பணியாற்றுகிற ஒவ்வொருவரையும் விமர்ச்சிக்கிற உரிமை, தவறுகளைக் சுட்டிக்காட்டுகிற கடமை, பொதுஜனங்களுக்கே இருக்கிறது என்கிற போது, ஊடகவியலாளர்கள் எந்நேரமும் நெற்றிக்கண்ணை திறந்து கொண்டே இருக்க வேண்டிய காலகட்டமிது.

அந்த அடிப்படையில், சுகாதாரத்துறையில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து, இன்றைய தினகரன் நாளிதழில் சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

2018 முதல் அதிமுக ஆட்சிக்காலத்தில், தரமற்ற மருந்து வாங்கி முறைகேடு என்ற தலைப்பில் சிறப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் நிர்வாக நடவடிக்கை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ள அந்த செய்தியில், அந்த முறைகேட்டிற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்கள் யார் என்பதை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் ஆளும்கட்சிக்கு ஆதரவான நாளிதழலாக அடையாளப்படுத்தப்படும் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் செய்தித்தாள் என்ற பெருமையும் தினகரன் நாளிதழுக்கு உண்டு.
அந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் இருந்தவர் விஜயபாஸ்கர். மருந்துகளை கொள்முதல் செய்கிற அதிகாரம் கொண்ட தமிழ்நாடு மருந்துவ சேவைகள் கழகத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் உமாநாத் ஐஏஎஸ். பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்துகளை கொள்முதல் செய்கிற அதிகாரம் படைத்த ஒரு நிறுவனத்தின் தலைவராக இருப்பவரின் கவனத்திற்கு வராமல், மருந்துகள் கொள்முதல் செய்ய முடியாது என்பது சுகாதாரத்துறையில் கீழ்நிலை ஊழியர்களுக்குகூட தெரிந்த உண்மை.

தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்தது மட்டுமல்லாமல், அதில் முறைகேடும் நடைபெற்று இருக்கிறது என்றால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறவர்கள் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருக்க முடியும்? அரசு மருத்துவமனைகளில் விநியோக்கப்பட்ட தரமற்ற மருந்துகளை வாங்கி, தங்களுக்கு உள்ள நோய்கள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் மக்கள் உட்கொண்டிருப்பார்களே ? அவர்களின் கதியென்ன? எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்? அதிமுக ஆட்சியில் பகல் கொள்ளைக்காரன் போலவே இருந்த அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரை விட்டுத் தள்ளுங்கள். நேர்மையான அதிகாரி என ஆடையை அணிந்து பரிசுத்தமானவராக போற்றப்படும் டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் அமைச்சர்களின் செயலாளர்களில் ஒருவராக அமர்ந்து இருக்கிறார் என்றால், இவரின் நிர்வாகத்தின் கீழ் வரும் பல்வேறு துறைகளில் நேர்மை எந்தளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.

டாக்டர் உமாநாத் ஐஏஎஸ், நல்லரசுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு தேவையான மருத்துவப் பொருட்களை கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறோம்.

பொதுவாகவே, அரசு மருத்துவமனைகளுக்கு அன்றாடம் செல்கிறவர்கள் அனுபவிக்கிற சிரமங்கள் ஆயிரமாயிரம். அரசு மருத்துவமனைகளில் இருதய நோய், நீரழிவு உள்ளிட்ட உயிரை விரைவாக கொல்லும் நோய்களுக்கு தருகிற மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள் என்றுதான் தனியாக கிளினிங் வைத்து சிகிச்சை அளிக்கும் புகழ்பெற்ற மருத்துவர்கள் அறிவுரையாக கூறுகிறார்கள். அந்தளவுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள்தான் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனது சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். நீண்ட நாள் நோயாளியான ஒருவர், அவரது வீடு அருகே இருக்கும் மருந்து விற்பனை கடையில் ரெகுலர் கஸ்டமராக இருப்பார். லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இருப்பார். ஆனால், அவர் மீது பரிதாபபட்டு எம்.ஆர்.பி என்று சொல்லப்படும் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து ஐந்து பைசா கூட குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், இன்றைக்கு தமிழகம் முழுவதும் கடைகளை விரித்து இருக்கிற ஆந்திராவைச் சேர்ந்த மெட்பிளஸ், ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் 20 சதவிகிதம் தள்ளுபடி தருகிறார்கள். 150 ரூபாய்க்கு மேல் வாங்கினால் பத்து சதவிகிதம் தள்ளுபடி தருகிறார்கள்.
தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக மருந்து விற்பனை செய்து வரும் மெடிக்கல் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் செய்ய துணியாக சலுகையை, ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது. இதைவிட சிறப்பாக, வடபழனி காவல் நிலையம் எதிரில் உள்ள ஃபோரம் மாலில் அண்மைகாலத்தில் ஆரோக்யா மெடிக்கல்ஸ் (கீழ்தளம்) என்று புதிய சில்லறை மருந்து விற்பனை கடை திறக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் என்று சர்வசாதாரணமாக கிண்டலடிக்கிறோமே, அவர்களால் துவங்கப்பட்டுள்ள மருந்து விற்பனை நிலையம், அது. அங்கு உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு (புற்றுநோய் உள்ளிட்டவை) 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறார்கள்.
இப்படி ஆந்திரம், கேரளாவைச் சேர்ந்த இரண்டு அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மருந்து விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனையிலேயே 20 மற்றும் 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறார்கள் என்றால், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் அரசு மருத்துவமனைகளை உள்ளடக்கி நிர்வாகம் செய்து வரும் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு எவ்வளவு குறைந்த விலைக்கு மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வார்கள்? எவ்வளவு தரமான மருந்துகளை வழங்க வேண்டும்? அரசு மருத்துவமனைகளில், சுகாதாரத்துறையில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய நூற்றுக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறையில் ஊறிப் போயிருக்கும் ஊழல்கள், நிர்வாக துஷ்பிரயோகம் போன்றவை கண்டு மனம் நொந்து, பணி ஓய்வுப் பெறும் முன்பாகவே, விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவர்கள் இன்றைக்கும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கானோரை பார்க்க முடியும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இயல்பிலேயே மிகவும் நல்லவர். கண்ணியமானவர். தன் மீதும், தான் நிர்வகிக்கும் ஒரு துறையின் மீதும் விமர்சனம் வந்தால், அதுவும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் எந்தளவுக்கு துடித்துப் போவார் என்பதை, அவர் மாநகராட்சி மேயராக இருந்த போது அனுபவ ரீதியாக அறிந்தவன் நான்.
திருவல்லிக்கேணி பகுதி திமுக செயலாளர் காமராஜ், அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியத்திற்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தவர், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே பஞ்சாயத்து வைத்து, காமராஜ் கொட்டத்தை அடக்கியவர். அதைவிட சிறப்பாக, வடசென்னையில் ஒரு துறையில் முறைகேடு என்று மூத்த பெண் ஊடகவியலாளர் சிறப்புக் கட்டுரை வெளியிட்டார். டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் செய்தி வெளியான தினமே, அந்த முறைகேட்டை தடுத்து நிறுத்தி துரிதமாக நடவடிக்கை எடுத்தவர் அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியன்.
மக்கள் நல்வாழ்வுத்துறையை கட்டி மேய்ப்பது என்பது மதம் பிடித்த கும்கி யானையை அடக்குவதை விட சிரமமானது. நிர்வாகத்தில் கெட்டிக்காரராக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையிலும் சாதிப்பாரா? வரும் காலங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
அமைச்சருக்கு அரசு தரப்பில் ஸ்பெஷல் பிஏ என்று சொல்லும் சிறப்பு தனி உதவியாளராக இருப்பவர், மாநகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர் என்றும் அவருக்கு சுகாதாரத்துறையில் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகிக்கிற அளவுக்கு அனுபவ அறிவு இருக்குமா என்று சந்தேகத்தை சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களே கிளப்புகிறார்கள். இந்த தகவலில், எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வம் காட்டவில்லை. சுகாதாரத்துறை அமைச்சருக்கு உதவியாளர்களாக இருப்பவர்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஆலோசனைகளை கூறுகிறார்கள், சுகாதாரத்துறையில் மாற்றத்தை விரும்பும் அரசு அலுவலர்கள்.
நிறைவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஊடக நண்பர் ஒருவரோடு வேளச்சேரியில் சில மணிநேரங்கள் செலவிட வேண்டியிருந்தது. என்னைப் போல அந்த நண்பருக்கும் ரத்த அழுத்த பாதிப்பு உண்டு. நாள்தோறும் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர். எனது அவசர அழைப்பை ஏற்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் வந்துவிட்டார். இரண்டு மணிநேரத்திற்கு மேலாக புல்லட் வாகனத்தில் சுற்றினோம். அவருக்கு உடனே மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டு விட்டது. பகல் 12 மணியளவில் வேளச்சேரி அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றோம் (அதன் பின்புறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வீடும், வேளச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் வீடும் உள்ளது) செவிலியர் மட்டுமே இருந்தார். மருத்துவர் இல்லை. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் காட்டினார். ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல், போராடி அந்த செவிலியரிடம் மருந்து பெற்றோம்.

இன்னொரு நிகழ்வு ஓய்வுப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் அவர். அதிதீவிர திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மிக நெருக்கமானவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் காலத்திலேயே செய்திகளை சேகரித்த அனுபவம் பெற்றவர். அவரது மனைவிக்கு இருதயப் பாதிப்பு. அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஆஸ்பிரின் 75 மில்லி கிராம் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துள்ளார்கள். அரசு மருத்துவமனையில் 75 மில்லி கிராம் மாத்திரை இருப்பு இல்லை. 150 மில்லி கிராம் மாத்திரைதான் இருப்பு இருந்துள்ளது. அதை கொடுத்து, அதில் பாதியை உடைத்து உட்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்கள். மிளகு அளவை விட வடிவத்தில் குறைவாகதான் 150 மில்லி கிராம் ஆஸ்பரின் மாத்திரை இருக்கும். அதை உடைக்கவே முடியாது. உயிர் போகும் அளவுக்கு இருதயத்தில் வலி ஏற்படும்போது ஆஸ்பரின் மாத்திரையை நாக்குக்கு கீழே வைத்தால், ஒன்றிரண்டு நிமிடங்களில் வலியும் குறைந்துவிடும். உயிரும் பிழைத்துக் கொள்ளலாம். பத்து மாத்திரை அடங்கிய ஒரு அட்டையின் விலையே 5 ரூபாய்தான்.

தினகரன் நாளிதழ் செய்தியில் குறைந்த பட்ச மாத்திரை இருப்பு 3 மாதம் காலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், கடந்த மூன்று மாதங்கள் என்றால் ஜூலை, ஜூன், மே ஆகிய மாதங்களுக்கு முனபு உயிர்க்காக்கும் மருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது, தமிழ்நாடு மருந்துவ சேவைகள் கழகத்தின் தலைவராக இருந்தவர் சாட்சாத் இதே டாக்டர் உமாநாத் ஐஏஎஸ்.தான். இன்றைக்கு இவரது ஆலோசனைகளைப் பெற்றுதான் சுகாதாரத்துறை செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சரும் செயல்படுகிறார்கள் என்ற தகவல், தலைமைச் செயலக அதிகாரிகள் வாயிலாக தெரிய வருகிறது..

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனோ எனும் உயிர்க்கொல்லி நோய் பொதுமக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிருமித் தொற்றை கண்டறிய வெளிநாட்டில் இருந்து பரிசோதனை கருவிகள் இறக்குமதி செய்த போது, அதிக விலை கொடுத்து கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர், முறைகேடு தொடர்பான கேள்வி எழுந்த போது, டாக்டர் உமாநாத் ஐஏஎஸ் பக்கம் கையை காட்டி அவரே பதில் சொல்வார் என்று கூறினார். அன்றைக்கு சிறப்பாக பதிலளித்த நிகழ்வை, தமிழ்நாடே கண்டது.
இப்படிபட்ட அரசு அதிகாரிகளின் தலைமையில், சுகாதாரத்துறை பல ஆண்டுகளாக சிக்கிக் கொண்டிருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் வரை நிறைய குளறுபடிகளால் விழிகள் பிதுங்கி தவிக்கின்றன. நோயை குணமாக்க அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் பல லட்சம் பேரில் கசப்பான அனுபவங்கள் இல்லாமல் வீடு திரும்புவோர் நூற்றுக்கணக்கானோர் என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும்.
சுகாதாரத்துறையின் ஈரலே கெட்டிருக்கிறது. அதனை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்தாமல், மக்களைத் தேடி மருத்துவம் என்று புதிய புதிய சிந்தனைகளை எல்லாம் முன்னோடி திட்டங்களாக அறிவித்தால், ஆட்சியை பறிகொடுக்கும் நேரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட வீதிகள் தோறும் மருத்துவ கிளினிங்குகள் என்ற கேலிக் கூத்தாக எதிர்காலத்தில் மாறிவிடும் ஆபத்து உள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சிந்தனையோடு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக, மிக விழிப்பாக இருக்க வேண்டிய காலமிது….