Sat. May 4th, 2024

சென்னை வருகைப் புரிந்த குடியரசுத் தலைவரை வரவேற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் திருவுருப்படத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்…

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லி சென்று நேரில் அழைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றதுடன், முப்படை அதிகாரிகள், தமிழக அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.

விமான நிலையத்தில் தமிழக அரசின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர், கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.

அங்குள்ள தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் திருவுருப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

விழாவிற்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமை வகிக்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, தலைமைச் செயலகம், கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் வளாகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.