Sun. May 5th, 2024

மது ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி சசிபெருமாள் மறைந்து, இன்று 6வது நினைவேந்தல் நிகழ்ச்சி மதுஒழிப்பு ஆர்வலர்களால் அனுசரிக்கப்பட்டது.

பல்லாயிரம் குடும்பத் தலைவர்கள் மதுப்பழக்கத்தால் நடைபிணமாக வாழ்வதை கண்டு சகிக்க முடியாமல் தீவிர போராட்டத்தில் இறங்கினார் அவர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் வருமானம் வருவதாக ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு இருக்கும் என்பது அறிவியல் விதி. அந்த விதிப்படி பார்த்தால் பல லட்சம் இளைஞர்களின் உயிர் மதுவால் எமன் வாய்க்குள் போய் விட்டது. பல்லாயிரம் இளம் பெண்கள் விதவைகள் ஆகியுள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளால் ஏழைப் பெண்கள் எவ்வளவு துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பதற்கு சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள பல்லக்கு மாநகர் குடியிருப்பு ஒரு சிறந்த சான்று.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒவ்வொரு துறைக்கும் சிறந்த அதிகாரிகளை நியமித்து நல்லாட்சி நடத்தி வருவதாக பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறார்.

டாஸ்மாக் மதுக்கடைகளின் விளைவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் ஆய்வு நடத்தி அறிக்கையை பெற்றால் இதனுடைய தீங்கை அவர் உணர்ந்து கொள்ள முடியும்.

டாஸ்மாக் மதுக்கடைகளின் கொடுமைகளை எதிர்த்து தனியாளாக களத்தில் நின்று சாதித்தவர் தியாகி சசிபெருமாள். பல நூறு மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடைபெற அவர் காரணமாக இருந்தார்.

நெல்லை ஜெபமணி ஜனதா கட்சித் தலைவர் மோகன்ராஜ் இல்லத்தில் சசிபெருமாள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தமிழக மது ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. அந்தப் போராட்டத்தில் அவர் உயிர் இழந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் நல்லக்கண்ணு வைகோ போன்ற தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி கேட்டுக் கொண்டனர். அந்தத் தலைவர்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பு கொடுத்தார்.

2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவது தான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை முழுமையாக மூடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
இந்த அறிவிப்புகள் சசிபெருமாளின் உண்மையான உறுதியான மதுஒழிப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

2016 தேர்தலில் அதிமுக முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றியது.

வீதிகளில் நின்று போராடிய சசி பெருமாள் டாஸ்மாக் முதலாளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். தமிழ்நாட்டில் எந்த மூலையில் போராட்டம் நடத்தினாலும் மக்கள் அவரை அழைத்து தலைமை தாங்க வைத்தனர். அவருடைய தலைமையில் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றன. குறிப்பாக பெண்கள் தாலியறுத்த டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.

மனித வளம் குறித்து மத்திய அரசும் மாநில அரசும் வாய்கிழிய பேசுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மதுக்கடைகளில் மட்டும் பகல் வேளைகளில் தினமும் சுமார் 5 லட்சம் பேர் குடிக்கிறார்கள். இவர்களுடைய மனிதவள சீரழிவு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் சிறிதும் கவலை பட்டதாக தெரியவில்லை.

பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் முன்னோடியாக உள்ள தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு,இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தவறான பாதையை காட்டியுள்ளது.

இனியாவது தமிழக அரசு தன் தவறை திருத்திக் கொள்ளவேண்டும். மது மூலம் ஒரு ரூபாய் வருவாய் வந்தால் இன்னொரு புறம் மூன்று ரூபாய் செலவாகிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மதுக்கடைகளை படிப்படியாக மூடி,
கள்ளச்சாராயத்தை தடுக்கும் மூல நோக்குடன், குடும்பங்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போகாத வகையில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

சசிபெருமாளோடு மது ஒழிப்பு போராட்டம் முடிந்து போய்விடாது.
மது முற்றாக ஒழிக்கப்படும் வரை அதற்கெதிரான போராட்டங்களும் நடைபெற்று கொண்டே இருக்கும். தியாகி சசிபெருமாளின் உயிர் தியாகம் வீண் போகாது.
‌.

விஜயராகவன்
மூத்த பத்திரிகையாளர்.