Sat. May 4th, 2024

                                                                               

தவமாய் தவமிருந்து குழந்தை பெற்றாளாம் புண்ணியவதி ஒருவர். அவருக்குப் பிறந்த குழந்தை வாய் திறந்து உதிர்த்த முதல் வார்த்தையே நீ எப்ப சாவாய் என்றதாம். அந்த கதையாக, வி.கே.சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், தனிநபரின் கட்டுப்பாட்டிற்கோ, ஒரு குடும்ப ஆட்சிக்கோ மீண்டும் அதிமுக செல்லும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஒரே அடியாக போட்டு ஒட்டுமொத்த தமிழக அரசியலையே தெறிக்க விட்டுவிட்டார், ஓ.பி.எஸ்.

அவரின் பேட்டி, அதிமுக.வில் உள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே அளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை என்பதுதான் உண்மை என்று வேதனையோடு தெரிவிக்கிறார் ஓ.பி.எஸ்.ஸின் நிழலாக வலம் வரும் ஆதரவாளர்களில் ஒருவர். அவரின் மனசாட்சியை உலுக்கினோம். நீண்ட யோசனைக்குப் பிறகு மௌனத்தை உடைத்துக் கொண்டு பேசினார் அந்த ஆதரவாளர்.

 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது இருந்த கோபத்தில், வி.கே.சசிகலா ஆதரவு நிலையில்தான் இருந்து வந்தார். அதனால் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏற்பட்ட நேரடி பாதிப்பு, முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய போது ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக திரண்ட நிர்வாகிகள் அத்தனை பேரும், இ.பி.எஸ்.ஸின் வெறித்தனமான ஆதரவாளராக மாறிப் போனார்கள்.

நேரடி நன்மை என்னவென்றால், கொங்கு மண்டல அதிமுக.வின் ஆதிக்கத்தை எதிர்த்த தென் மற்றும் மத்திய மண்டல அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்தார்கள். முக்கியமாக,  அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக.வினர் ஓ.பி.எஸ்.ஸை முழுமனதோடு ஆதரிக்கத் தொடங்கினர்.

ஆனால், சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மேலிடம் வலியுறுத்திய போதும், வி.கே.சசிகலாவையும், டிடிவி  தினகரனையும் அதிமுக.வில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி மறுத்த போது, ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்போது அமைதியாகிவிட்டார் ஓ.பி.எஸ்.

இப்படி இரண்டும் கெட்டான் மனநிலையில் ஓ.பி.எஸ். இருந்ததால், அவரையே நம்பியிருந்த ஆதரவாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கூட கொடுக்காமல், தனது ஆதரவாளர்களுக்கு பெருமளவில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இன்றைய அதிமுக.வில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்களும் முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. ஆனால், வேறு வழியில்லாமல், ஆணவம் பிடித்தவர், சர்வாதிகாரிப் போல செயல்படுகிறார் என்று வெளிப்படையாகவே கருவிக் கொண்டு இ.பி.எஸ். பக்கமே நிற்கிறார்கள். அதற்கு காரணம், மண்குதிரையாக ஓ.பி.எஸ்., இருப்பதுதான் என்றவர் மௌனமானார்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரே தொடர்ந்தார்.

வி.கே.சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக ஓ.பி.எஸ்.இருக்கிறார் என்பதால், அவரது சமுதாய அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கினர். கட்சியிலும், ஆட்சியிலும் தன்னை அவமானப்படுத்திய எடப்பாடி பழனிசாமியை பழிவாங்குவதற்காக, வி.கே.சசிகலா ஆதரவு நிலையில் இருந்து ஓ.பி.எஸ். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டார் என்று நினைப்பில், அதிமுக.வுக்கு தலைமை ஏற்கும் தகுதி வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறது என்ற பிரசாரத்தை ஓ.பி.எஸ். ஆதரவுக் கூட்டம், கடந்த ஐந்து மாதமாக ஓங்கி ஒலிக்கக் தொடங்கியது.

வி.கே.சசிகலாவும் கூட ஓ.பி.எஸ்.ஸை தங்கள் பக்கம் இழுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் அரசியலில் ஆவேசம் காட்ட தொடங்கினார் என்ற பேச்சும் உண்டு. இப்படி வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக டெல்லி சென்று வந்த ஓ.பி.எஸ்., மறுநாளே வி.கே.சசிகலாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததுதான், அவரோடு ஒட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு எல்லாம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக எதிர்ப்பா, பாஜக எதிர்ப்பா என்பதுதான் இன்றைய தமிழக அரசியலில் முக்கியமான நிலையாக இருந்து கொண்டிருக்கிறது. பாஜக.வை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேச முடியாத நிலையில் இருக்கும் ஓ.பி.எஸ்., திமுக அரசுக்கு எதிராகவும் கடுமை காட்ட முடியாதவராக இருக்கிறார்.

இதேபோலதான், எடப்பாடி பழனிசாமியும். பாஜக.வை எதிர்த்தால் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, தன்னுடைய   ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்துவிடும் என்று பயப்படுகிறார்.அதேபோல பயம், திமுக.வுக்கு எதிராகவும் இ.பி.எஸ்.ஸுக்கு இருக்கிறதைப் பார்த்து, உண்மையான அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள். அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியபோது, சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்தார். ஆனால், அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு மாறாக திமுக அரசுக்கு பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார் இ.பி.எஸ்.

திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு அரசியலை இன்றைய நிலையில் எடுத்தால்தான் அதிமுக.வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அடிமட்ட தொண்டர்களிடம், பெரும்பான்மையான முன்னணி நிர்வாகிகளிடம் அந்த மனநிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தைரியமாக கூட பேசுகிறார்கள். ஆனால், இரட்டை தலைமையான இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டு பேரின் பலவீனங்களைத்தைதான் வி.கே.சசிகலா பயன்படுத்தி அரசியலில் மீண்டும் மறுவாழ்வு பெற்றிட துடிக்கிறார். ஆனால், அவர் மறைமுகமாக திமுக அரசின் ஆதரவை தேடுவதால்தான், முழுமையாக பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார் ஓ.பி.எஸ் என்பதுதான் துயரம் என்றவர் மீண்டும் மௌனமானார்.  

சில நிமிடங்களில் மீண்டும் பேசினார்.

அரசியல் மறுவாழ்விற்காக ஆடியோ, டிவி பேட்டிகளை கையில் எடுத்துள்ள வி.கே.சசிகலா, அதிமுக தொண்டர்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்க களத்திற்கு வந்துதான் ஆக வேண்டும். ஏற்கெனவே டிடிவி தினகரனால் கட்டியமைக்கப்பட்ட அமமுக எனும் கட்சி மூலம் தொண்டர்கள் ஒருங்கிணைவார்கள் என்பது ஒருபக்கம் என்றாலும் கூட, ஓ.பி.எஸ். ஆதரவு நிலையில் உள்ள நிர்வாகிகளும் மறுபக்கம் அணி திரள்வார்கள் என்ற சூழ்நிலைதான் இருந்தது. அதற்கான சரியான தருணமாக ஆகஸ்ட் மாதத்தைதான் தேர்வு செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், தன்னை பயன்படுத்தி வி.கே.சசிகலா அரசியல் ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்றுதான் ஓ.பி.எஸ்., அவருக்கு எதிராக கடுமையாக பேட்டி கொடுத்துவிட்டார். அதற்கு மேல், வி.கே.சசிகலா மீதான அழுத்தமான சந்தேகமும் ஓ.பி.எஸ்.ஸை முழுமையாக பாஜகவே சரணம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டது.

அது என்னவென்றால், வி.கே.சசிகலா வீதிக்கு வந்து அதிமுக தொண்டர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்றால், நிச்சயம் திமுக அரசின் தயவு தேவை. எடப்பாடி பழனிசாமி தூண்டிவிடும் எதிர்ப்பாளர்களை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு ரெம்ப முக்கியம். அதேபோல, அம்மா சமாதிக்கு போக, அதிமுக தலைமைக் கழகத்திற்கு செல்வதற்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வி.கே.சசிகலாவால் ஒன்றுமே செய்ய முடியாது.

இதனால், திமுக ஆட்சி மேலிடத்தின் தயவை வி.கே.சசிகலா நாடியதும், அவருக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் எதிர்தரப்பில் இருந்து சில சமிக்கைகள் வந்திருக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது என்று உறுதி கொடுத்திருந்தாலும் கூட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதில் தலையிட்டு ஒருசாராருக்கு ஆதரவாக திமுக அரசு நிற்காது என்றும் வி.கே.சசிகலா தரப்பிற்கு திமுக.வில் உள்ள அவரது சமுதாயத்தைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள் என்ற ரகசிய தகவல் ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு சாராருக்கு ஆதரவாக திமுக அரசு நிற்காது என்ற வார்த்தையே இ.பி.எஸ்.ஸுக்கும், தனக்கும் மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றுதான் பயந்து போய்விட்டார் ஓ.பி.எஸ். தன்னை பயன்படுத்தி இ.பி.எஸ்.ஸை காலி செய்ய வியூகம் வகுத்திருக்கும் வி.கே.சசிகலா, அவரை வீழ்த்திய பிறகு திமுக ஆதரவோடு தன்னையும் அரசியலில் இருந்தே அழித்துவிடுவார் வி.கே.சசிகலா என்றும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக எதிர்ப்பு நிலையை வி.கே.சசிகலாவும், டிடிவி தினகரனும் துணிந்தே எடுப்பார்கள்.அப்போது பாஜக.வும் தன்னை கைவிட்டுவிடும் என்று பயந்துபோனதால்தான் டெல்லி பாஜக மேலிடத்திடம் பூரண சரணாகதி அடைந்துவிட்டார் ஓ.பி.எஸ்.

இந்த பின்னணியெல்லாம் இ.பி.எஸ்.ஸுக்கு தெரியுமா, தெரியாதா எங்களுக்கு தெரியாது. ஆனால், இத்தனை காலம் வி.கே.சசிகலா ஆதரவு நிலையில் இருந்த ஓ.பி.எஸ்., எப்படி இ.பி.எஸ்.ஸுக்கு மற்றும் கொங்கு மண்டல அதிமுக முன்னணி நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் வி.கே.சசிகலாவுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கையில் எடுத்தார்?  அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்று தெரியாமல்தான் நாங்கள் திண்டாடி வருகிறோம்.

ஓ.பி.எஸ்.ஸையே நம்பிக் கொண்டிருந்த சிறியளவிலான ஆதரவுக்கூட்டம், இன்றைய தேதியில் நட்டாற்றில் விட்ட கதையாகதான் இருக்கிறது. இவரை நம்பியதற்குப் பதிலாக இ.பி.எஸ். பக்கம் சாய்ந்திருந்தால் கூட சிறியளவிலான பொருளாதார பலனையாவது சுவைத்து இருப்போம் என்று விரக்தியோடு பேசி விடை பெற்றார், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர விசுவாசி.

f