.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று டெல்லியில் இருந்து நாள்தோறும் வெளியாகும் தகவல், தமிழக காங்கிரஸாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படிபட்ட நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பார் தினேஷ் குண்டுராவ், அகில் இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிசெல்ல பிரசாத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். நீண்ட, நெடிய விவாதத்திற்குப் பிறகு 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முதல் தீர்மானமே கே.எஸ்.அழகிரியின் கட்சிப் பணியை பாராட்டிதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது தீர்மானம், முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம், தடுப்பூசி தட்டுப்பாடு, பெகாசஸ் போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த 10 தீர்மானங்களில் காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தை அம்பலப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற ஒரு தீர்மானமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர் ஒருவர், அடுத்த முறை கட்சி நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்குமோ, இல்லையோ என்ற நிலையில்தான் கே.எஸ்.அழகிரி, தனக்கும் பாராட்டு தெரிவிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்று கிண்டல் அடித்தார். அவரிடம் பேசினோம். பொரிந்து தள்ளினார் அவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தன்னிச்சையாக நடந்து கொள்கிறார். முன்னாள் தலைவர்கள் உள்பட யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. அவர் தலைவராக பொறுப்பு வகித்து வந்த இந்த காலத்தில், கட்சி வளர்ச்சிப்பாதையிலேயே செல்லவில்லை. திமுக.வுடனான கூட்டணியால் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அபரிதமான வெற்றியைப் பெற்றது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களிலும் பல்வேறு மாவட்டங்களில் அவரின் பிரசாரம் பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. அவரின் கடுமையான உழைப்பை, பிரசாரத்தை ஒரு வரியில் சொல்லி தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.
ஆனால், கே.எஸ்.அழகிரியைப் பற்றி சொல்லும் போது, அவர் தலைவராக பதவியேற்ற நாள் முதலாக, நபர் சார்ந்த அரசியலிலிருந்து விலகி, கொள்கை சார்ந்த அரசியலை நோக்கி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பயணித்து வருகிறது. நீண்ட, நெடிய அரசியல் அனுபவமிக்கவராக கே.எஸ். அழகிரி விளங்கி வருகிறார் என்றெல்லாம் நீட்டி முழங்கப்பட்டிருக்கிறது. தன் புகழை பாடுவதையே குறிக்கோளாக கொண்டு கே.எஸ்.அழகிரி செயல்படுவதால், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முதல் மாவட்ட அளவிலான தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், கட்சியை கிராம அளவில் பலப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தப் பணிக்கு கே.எஸ்.அழகிரி ஒத்து வரமாட்டார் என்பதால்தான் அவரை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
புதிய தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக திருவள்ளூர் தொகுதி எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த லிஸ்டிலேயே இல்லாத முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும், நானும் ரவுடிதான் என்ற கதையாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பிடிக்க, தனது தந்தை மூலம் தீவிரமாக டெல்லியில் லாபி செய்து வருகிறார்.
இவர்களை எல்லாம் கடந்து ஆறாவது விரல் போல, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர், அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. யும், ஸ்பெஷல் கேட்டகிரியில் புதிய தலைவர் ரேஸில் இருப்பதாக பேச்சு பலமாக அடிபடுகிறது.
விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை டெல்லி மேலிடம் நியமனம் செய்யவுள்ளது. அந்த தகவல் வெளியானவுடனேயே அவருக்கு எதிரான கோஷ்டிகள், அவரை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிக் கொண்டு டெல்லிக்கு படையெடுக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனித்த செல்வாக்கை வளர்க்காமல், கூட்டணி அமைத்து, திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி, அரசியல் ஆதாயம் அடைவதற்கே, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
பாரதிய ஜனதாவைப் போல, வாழ்வோ, சாவோ, தனித்துப் போட்டியிட்டு சுயபலத்தை பரிசோதனை செய்து பார்ப்பதற்கு, தமிழக காங்கிரஸ் கட்சி என்றைக்கு தயார் ஆகிருதோ அன்றைக்குதான் உண்மையான தலைவர், காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பார் என்று மனம் நொந்து போய் சொன்னார், அந்த காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி.