Sun. May 5th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆடசி, இன்னும் 20 நாட்களில் 100 வது நாள் வெற்றி விழாவை கொண்டாடப்போகிறது. ஆட்சிக் கட்டிலை ஸ்திரப்படுத்தி, நேர்மையான வழியில் வீறு நடைபோடும் வகையில் தலைமைச் செயலகத்தை சீரமைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற பேச்சு கடைக்கோடி கிராமத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகத்தில் மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்க, அரசு அதிகாரிகளை தயார்படுத்தும் பணி, கிட்டதட்ட வெற்றியடைந்துவிட்டது எள்று செல்லலாம் என்பதுதான் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களிள் கருத்தான உள்ளது.

நேர்மைக்கு பெயர் பெற்ற தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் எனும் உச்சகட்ட அரசுப் பதவியில் உள்ள முன் ஏர் நேர்வழியில் செல்லும் போது, அவரை பின்தொடரும் அரசு அதிகாரிகளும் நேர்வழியில்தான் சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இப்படி முதல் அமைச்சராக பதவியேற்ற மூன்ற மாதங்களுக்கு உள்ளாகவே ஆட்சி நிர்வாகத்தை சீரமைத்துவிட்டோம் என்று நிம்மதியுடன், திமுக எனும் ஆலமரத்தை சீரமைக்கும் பணியில் மும்முரமாகியுள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எனும் தகவல் கசியவே அண்ணா அறிவாலயம் பக்கம் ஒரு சுற்று வந்தோம்.

காதில் விழுந்த அத்தனை தகவல்களும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் வைக்காததவை.

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைந்தவுடன் அதுவரை செயல் தலைவராக இருந்து வந்த மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கலைஞர்,  திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்ட நேரத்தில், அவரைச் சுற்றி ஆளுமைமிக்க, மக்கள் மனங்களை வென்ற திமுக முன்னணி தளகர்த்தர்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை. ஆட்சி அதிகாரத்தை சுவைத்த ஆளுமைமிக்க தலைவர்கள் நிறையவே இருந்தாலும் கூட, திமுக.வை கடந்து மக்கள் மனங்களை வென்ற தலைவர்கள் என்ற வரிசையில் ஒன்றிரண்டு பேர்தான் தேறுவார்கள்.

இப்படிபட்ட புறச்சூழலில்தான்,  திமுக.வை தலை முதல் கால் வரை சீரமைக்கும் பணியை வேகமாக முடித்ததால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாரானபோது, கொரோனோ எனும் பேரிடர் மிரட்டியது. அதையும் துணிச்சலுடன் கையாண்ட தளபதி மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா எனும் நிகழ்ச்சி மூலம் மாநிலமெங்கும் மக்கள் குறைகளை களைய ஓயாது உழைத்தார். அடுத்து, சட்டமன்றத் தேர்தல் நெருங்கியவுடன், கிராம மக்கள் சபை கூட்டத்தை நடத்தி, மாநிலம் முழுவதும் பொதுமக்களை தனது ஆளுமைக்குணத்தால் அரவணைத்தார்.

தளபதி மு.க.ஸ்டாலினின் எளிமையான செயல்பாடுகளால், குறிப்பாக பெண்கள், திமுக பக்கம் அலையென திரண்டனர். சட்டமன்றத்  தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த கூட்டணியும், அவரின் பிரசார வியூகமும், பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. ஒற்றை மனிதராக திமுக எனும் வெற்றித் தேரை போராடி இழுத்து வந்த மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக முன்னணி நிர்வாகிகள், தேர்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், களப் பணியில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

திமுக முன்னணி நிர்வாகிகள் பலர், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைத்து, திமுக வேட்பாளரே தோற்கும் அளவுக்கு உள்ளடி வேலைகளை பார்த்தனர்.

இந்த விவகாரம் எல்லாம் தேர்தல் நேரத்திலே அதிகமாக வெடித்தது.அப்போதே புகாருக்கு உள்ளாக்கப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனாலும், அவர்கள் திருந்தியபாடில்லை. தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதால், கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களை கிடப்பில் போட்டார். ஆட்சி நிர்வாகத்தை சீரமைக்கும் பணியிலும் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளிலும் முனைப்புக் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனிடையே இளைப்பாறும் வகையில், கடந்த மாதத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்று எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக.வுக்கே துரோகம் இழைத்தவர்கள் பற்றியெல்லாம் எனக்கு தெரியும். திருத்திக் கொள்ள அவகாசம் வழங்குகிறேன். திருந்திக் கொள்ளுங்கள் என்றும் நேருக்கு நேராக கண்டிப்புடன் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன் பிறகும் கூட, மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வரத்தொடங்கின. அதுவும் கொங்கு மண்டலத்தில் இருந்தே அதிகமான புகார்கள் தலைமைக் கழகத்திற்கு வந்தன. ஆட்சிப் பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார். அதனால் கட்சிப் பணிகளை கவனிக்க மாட்டார் என்ற அலட்சிய மனப்பான்மையில் மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டிருந்தார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

அப்படிபட்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்தான், திருப்பூர் மாவட்டத்தில் தனது அதிரடியைக் காட்டினார். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை மாற்றிவிட்டு, அப்பொறுப்பில் டாக்டர் கி. வரதராஜன் நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் மேலும் பல மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் கொங்கு மண்டலத்தில் பரவலாக பேசப்பட்டது.

இருப்பினும், திமுக.வுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருபவர்களைப் பற்றிய புகார்கள், அண்ணா அறிவாலயத்தில் குவிந்தன. இதுவரை ஆட்சிப் பணியில் கவனம் செலுத்தி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கவை, அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகி பூச்சி முருகன் ஆகியோரை அழைத்து, திமுக முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக வந்த புகார்களை எல்லாம் நன்றாக ஆய்வு செய்து, அதன் பட்டியலை தனது பார்வைக்கு கொண்டு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்.

தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று கட்சி விவகாரத்தில் கவனத்தை செலுத்தி விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து, அண்ணா அறிவாலய முன்னணி நிர்வாகிகளே ஆடிப் போயிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து வரும் நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் சாட்டை சத்தம் அதிகமாக கேட்கும். திமுக.வுக்கு துரோகம் இழைத்த நிர்வாகிகளை அழைத்து சாட்டையை சுழற்றப் போகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த முறை நிச்சயம், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று உணர்ச்சிப்பூர்வமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடியை விவரித்தார், அண்ணா அறிவாலய முன்னணி நிர்வாகி….

சுத்தப்படுத்துங்கள் தலைவா.. மேற்கு மண்டலத்தில் திமுக செல்வாக்கு உயரட்டும் என்று சந்தோஷமாக முழங்குகிறார்கள் தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சுற்றியுள்ள திமுக முன்னணி தலைவர்கள்.  

f