Sat. May 18th, 2024

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ்தாஸ். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். அப்போது டிஜிபி ராஜேஸ்தாஸ் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.

அதுமட்டுமின்றி விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டு தொடர்ந்து தமிழக அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி ராஜேஸ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. பொறுத்தவரையில் இந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், புகார் அளிக்க வந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய எஸ்.பி. மீதும் வழக்கானது பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த பாலியல் தொல்லை புகார் குறித்த விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. தயாரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள காரணத்தினால் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை என்பது தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தலைமை செயலாளர் அடங்கிய குழுவிற்கு இந்த அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளதால் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் இது தொடர்பான பரிந்துரை கடிதம் தமிழக அரசின் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் டிஜிபி, எஸ்.பி. மட்டுமின்றி மேலும் ஐ.ஜி., டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி. ஆகிய 3 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பாக அப்போது திருச்சியில் பணியாற்றிய 2 உயர் அதிகாரிகளின் பெயர் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் கொடுக்கும் அனுமதியை அடிப்படையாக வைத்து அடுத்தகட்டமாக சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றனர்.