Sun. Nov 24th, 2024

திமுக நிர்வாகிகள் உள்ளடி வேலைப் பார்த்து தன்னை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பாடுபட்ட நேரத்தில், கடவுள் அருளால் தேர்தலில் வெற்றிப் பெற்றதாக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய தி.மு.க., மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னையில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், நீர் வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியில் வரும் பொன்னை, காட்பாடி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பூத்துக்களில் தி.மு.க.,வுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதற்காக தி.மு.க., நிர்வாகிகளே உள்ளடி வேலை செய்ததது எல்லாம் எனக்கு நன்றாவே தெரியும்.

யார் யாரெல்லாம் திமுக.வுக்கு துரோகம் செய்தார்களோ, அவர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் கடவுள் அருளால், கடைசி நேரத்தில் அஞ்சல் வாக்குகளால்தான் நான் வெற்றி பெற்றேன். மறப்போம், மன்னிப்போம் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை போல வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறா விட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்.

இவ்வாறு துரைமுருகன் ஆவேசமாக பேசினார்