Fri. Apr 26th, 2024

நீர்ப்பாசனத்துறைக்கு வனத்துறைக்கு இணையான தன்னாட்சி அதிகாரம் வழங்கி,தனி சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்திட வேண்டும்.
சட்டவிரோத இறவை பாசன திட்டத்தை எதிர்த்து வலியுறுத்தி ஆகஸ்ட் 6 திருச்சி நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என பிஆர் பாண்டியன் அறிவிப்பு அறிவித்துள்ளார்..

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி பகுதிகளில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக வணிக நோக்கோடு கிணறுகள் அமைத்து இலவச மின்சாரத்தை பயன்படுத்தி இறவை பாசன திட்டம் என்கிற பெயரில் சட்டவிரோத அனுமதி பெற்று நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்… அதன் விவரம்:

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பாசன விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகிறது.அரசியல் தலையீட்டால் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஒற்றுமை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரியில் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் கரூர் வரையிலும் கிணறுகள் அமைத்து காவிரி நீரை சட்டவிரோதமாக இரவை பாசனம் திட்டம் என்கிற பெயரில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வணிக நோக்கோடு அதிகார வர்க்கங்களின் துணையோடு இறவை பாசன திட்டத்திற்கு தொடர்ந்து தமிழக அரசு அனுமதி அளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த 2020- 21 ஆம் ஆண்டு திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி பகுதியில் 42 இரவை பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். 25,000 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் காவிரி ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்தும், பூமிக்கடியில் குழாய்கள் அமைத்தும் தண்ணீரை சட்டவிரோதமாக எடுத்து வணிக நோக்கோடு பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 15 லட்சம் கட்டணம் பெற்றுக்கொண்டு தனி நபர்கள் வியாபார நோக்கோடு அனுமதி பெற்றுள்ளனர்.இதனை ரத்து செய்ய வேண்டும்.

தற்போது இத் திட்டத்தைநிறைவேற்றினால் சேலம் முதல் நாகப்பட்டினம் வரை கீழ் பாசன விவசாயிகள் உடைய பாசன உரிமை பறிபோகும்.நாமக்கல் மாவட்டம் ராஜ வாய்க்கால் பாசனம் அடியோடு அழிந்து போகும்.இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி திருச்சி நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் துறை வனத்துறை போல் தன்னாட்சி அதிகாரம் வழங்கி பாசன விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் நீர் தாவா பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் உயர்நீதிமன்றத்துக்கு இணையான தனி சிறப்பு நீதிமன்றம் உடன் ஏற்படுத்திட முன்வரவேண்டும் .இதன் மூலம் தமிழகத்தில் ஒற்றுமையை பாதுகாப்பதற்கு தமிழக அரசு பொது நல நோக்கோடு தீர்வு கண்டு விவசாயிகள் நலன் காத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

ராஜ வாய்க்கால் பாசன விவசாய சங்கத் தலைவர் குப்புராஜ் செயலாளர் பெரியசாமி, மோகனூர் செந்தில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.