அரசு பணியாளர் இட மாற்றத்தில் தமிழ்நாடு அரசு நேர்மையாக செயல்பட முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக, பொதுப்பணி உள்ளிட்ட ஒன்றிரண்டு துறைகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பணிமாறுதல்களே சாட்சியாக நிற்கின்றன. முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி அரசு துறைகளில் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வுகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் கண்காணித்து வருகிறார்.
.அந்த வரிசையில், சுகாதாரத்துறையிலும் முதற்கட்டமாக இணை இயக்குனர், சுகாதார அலுவலர்கள், துணை இயக்குனர் என மொத்தம் 72 அலுவலர்களுக்கான பணி மாறுதல், கலந்தாய்வு மூலம் நிரப்ப கடந்த 13 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனர் செல்வ விநாயகம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற துறை ரீதியலான ஆய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இணை இயக்குனர், சுகாதார அலுவலர்கள், துணை இயக்குனர் ஆகியோர், தங்களுக்குரிய பணியிடங்களை தேர்வு செய்தனர். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றி வருபவர்கள் முதல், கடந்த ஓராண்டிற்குள்ளாக பணி மாறுதல் பெற்றவர்கள் என ஒட்டுமொத்தமாக அனைத்து அலுவலர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த பணி மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்ற பணிமாறுதல் ஒருமுறை கூட நடந்ததில்லை. அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர், செவிலியர் முதல் சுகாதாரத்துறை உயர் அலுவலர் வரை ஒவ்வொரு பதவிக்கும் ரேட் பிக்ஸ் செய்து, கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக பெற்றார். செவிலியருக்கு 3 லட்சம் ரூபாயும், மருத்துவர்களுக்கு 4 முதல் 8 லட்சம் ரூபாயும், இணை இயக்குனர் முதல் துணை இயக்குனர் வரையிலான பணிமாறுதலுக்கு குறைந்த பட்சம் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்ற பிறகே பணி மாறுதல் உத்தரவுகளை வழங்கினார் முன்னாள் அதிமுக அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர்.
இதைவிட கொடுமையாக, அரசு மருத்துவமனைகளில் டீன் பதவியில் நியமிக்க குறைந்த பட்ச தொகையே 25 லட்சம் ரூபாயாக நியமித்திருந்ததுதான். மருத்துவர் விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ஒட்டுமொத்த காலமும், பகல் கொள்ளைக்காரனாகவே வாழ்ந்தார். சுகாதாரத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளின் இயக்குனர் பதவியை பெறுவதற்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் கேட்ட பெரிய மனிதர்கள் எல்லாம் இன்றைக்கும் உயிரோடுதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒட்டுமொத்த சுகதாரத்துறையுமே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல்களால் புழுத்துப் போயிருந்த நிலையில், அதை சீரமைக்க, முதலமைச்சரின் செயலாளர்கள் அலுவலகத்தில் உயரதிகாரி ஐஏஎஸ் உதயசந்திரன் தலைமையிலான செயலாளர்களில் ஒருவரான தாரேஸ் அகமது ஐஏஎஸ் முழு முயற்சியுடன் களம் இறங்கியிருக்கிறார்.
அவரின் சிந்தனையில் உதித்ததுதான் சுகாதாரத்துறையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் என்ற நடவடிக்கையாகும். அவரின் நல்ல முயற்சியை, சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மனதார பாராட்டினாலும், இப்போது ஒத்த பைசா கொடுக்காமல் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளவர்களில் பெரும்பான்மையானர்கள் ஊழல் பெருச்சாளிகள் என்று பொங்குகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கருக்கே முறைகேடு மூலம் எப்படி கோடி, கோடியாக அரசுப் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவர்களும், மருத்துவப் பணியில் அலட்சியத்துடனும், பொதுமக்களிடம் அதிகார திமிருடன் கலந்து கொள்பவர்களையும் திருத்திவிட முடியும் என்று திமுக அரசோ, முதல்வர் மு.க.ஸ்டாலினோ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமோ நினைத்தால், அது பகல் கனவாகவே மாறிவிடும் என்கிறார்கள் அந்த நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தற்போது இணை இயக்குனர்களாக இருப்பவர்களில் சம்பத், கிருஷ்ணராஜ், சவுண்டம்மாள், நிர்மல்சன், துணை இயக்குனர்களான சோமசுந்தரம், மீரா, சாந்தி, பிரியாராஜ், சுகாதார அலுவலர் அஜித்குமார் போன்றவர்களின் கடந்த 5 ஆண்டு கால செயல்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தினால், உதாரணத்திற்காக சுட்டிக்காட்டிய இந்த அலுவலர்களைப் போல மேலும் பல ஊழல் மற்றும் முறைகேடுகளில் திளைத்த பெருச்சாளிகள் வசமாக மாட்டுவார்கள் என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக, சுகாதாரத்துறையை சீர்ப்படுத்தாமல், மென்மையான போக்குடன் திமுக அரசு நடந்து கொண்டால், கடிவாளம் இல்லாமல் திமிறிக் கொண்டிருக்கும் சுகதாரத்துறையை, இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக அரசால் கட்டுப்படுத்தவே முடியாது என்கிறார்கள் சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள். அவர்கள் கிண்டலாக கூறிய ஒரு அம்சம் கூட, சுகாதாரத்துறை எந்தளவுக்கு சீழ்பிடித்துக் கிடக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.
கடந்த 13 ஆம் தேதி மட்டும் கலந்தாய்வு நடக்காமல் இருந்திருந்தால், இந்த 72 அலுவலர்களில் 60 பேர் எப்படியும் பணிமாறுதல் பெறுவதற்காக, அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை அணுகியிருப்பார்கள். குறைந்தது 5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒவ்வொரு பணியிட மாற்றத்திற்கும் லஞ்சமாக லட்சங்களில் பணம் கிடைத்திருக்கும். எப்படி கூட்டி கழித்துப் பார்த்தாலும் 3 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அந்த பணத்தை அமைச்சர் விரும்பாவிட்டாலும் கூட, தனது தொகுதிக்குட்பட்ட அல்லது திமுக.வில் அவர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் சென்னை தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட 300 நிர்வாகிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கியிருக்கலாம். பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமர்ந்த சந்தோஷத்தையாவது திமுக நிர்வாகிகள் கொண்டாடி இருப்பார்கள். பணியிட மாறுதல் நேர்மையான வழியில் கிடைத்துவிட்டது என்பதற்காக, புதிய இடங்களுக்குச் செல்லும் சுகாதார அலுவலர்கள், நேர்மையாக பணியாற்றி மக்களுக்கும், திமுக அரசுக்கும் நன்றியாகவாக இருக்க போகிறார்கள் என்று அவர்கள் கூறியதை கேட்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
சென்னை மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் புதிய பணியிடங்களுக்கு செல்ல விருப்பம் காட்டாததால், கலந்தாய்வுபடி பணியிட மாறுதல் உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. 5, 10 அலுவலர்களின் சுயநலத்திற்காக, எஞ்சிய 60 பேரின் பணியிட மாறுதலுக்கு உத்தரவு பிறப்பிக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் என்கிறார்கள் பணியிட மாறுதலுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விட, சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணனை விட, முதலமைச்சர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரி தாரேஷ் அகமதைவிடவாக, செல்வ வினாயகம் செல்வாக்கு, சுகாதாரத்துறையில் கொடி கட்டி பறக்கிறது?
[…] […]