Mon. May 20th, 2024

சுகாதாரத்துறையை கட்டி ஆள்வது என்பது மதயானையை அடக்கி தெரு, தெருவாக அழைத்து வருவதற்கு இணையான சவாலான வேலை. அப்படிபட்ட சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியம், மே 7 ஆம் பதவியேற்ற நாள் முதலாக, கொரோனோவை கட்டுப்படுத்துவதில் அசாத்திய திறமையுடன் பணியாற்றியதை, தமிழக மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பார்த்து வருகின்றனர். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மேயராக அவர் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், சுகாதாரத்துறையை நிர்வகிப்பது என்பது அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு பெரிய சவாலான அம்சமாக இல்லை.

அதிகாலையில் 5 மணிக்கு எழுந்தவுடனேயே, தனது துறை தொடர்பான பணிகளை அமைச்சர் துவக்கி விடுவார். நள்ளிரவில் படுக்கைக்கு செல்லும் முன்பாக நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 மணிநேரம் உழைப்பதற்கு அஞ்சாதவர். சென்னை மேயராக பணியாற்றிய காலத்தில், தனது நிர்வாகத்தில் ஊழல் தலைக்காட்டி விடக்கூடாது என்பதற்காக, மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்றினார். அப்படிபட்ட நேரத்தில் கூட, அவரது கவனத்திற்கே வராமல், அங்கொன்றும், இங்கொன்றும் ஊழல் தலைகாட்டியபோது, அதுதொடர்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வந்தபோது, மிகுந்த மனவலியோடு, அந்த ஊழல்களை, முறைகேடுகளை களைவதற்கு, அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக தொடர்பு கொண்டு, சென்னை மாநகராட்சியில் ஊழலின் காரணகர்த்தவர்களாக இருந்தவர்களை, தலையெடுத்தவர்களை தடுத்து நிறுத்தியவர் மா.சுப்பிரமணியம் என்பது, சென்னை மாநகராட்சி தொடர்பான செய்திகளை சேகரித்தவர்கள், இன்றைக்கும் சென்னையில் மூத்த ஊடகவியலாளர்களாக உள்ளனர் என்பது பலருக்கு தெரியும்.

மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக கையகப்படுத்தி, மாமூலில் குளித்துக் கொண்டிருந்த திருவல்லிக்கேணி பகுதி திமுக கவுன்சிலர் காமராஜின் அராஜகங்களை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று தடுத்துநிறுத்தியவர் அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியம் என்பதும் வரலாறாக மாறியிருக்கும் செய்தி.

ஆனால், சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று 100 நாட்களை எட்டுவதற்கு முன்பாக, மா.சுப்பிரமணியத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அவரது தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவுத்தலைவர்களும், வழக்கம் போல முறைகேடுகளில் துணிந்து செயல்பட்டு வருவதாக புகார்கள் றெக்கை கட்டி வருகின்றன.

குறிப்பாக மருந்து கொள்முதல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் போன்ற பல்வேறு விவகாரங்களில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே, 30, 40 சதவீதம் கமிஷனை கமுக்கமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கொள்ளையடித்து வருவதாக பகீர் புகார் கிளப்புகிறார்கள் சுகாதாரத்துறையில் இன்றைக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கும் நேர்மையான அதிகாரிகள் பலர்.

உடல் உறுப்பு தான அறுவைச் சிகிச்சைக்கான அனுமதி வழங்குவதில், பழைய முறைப்படியே ஊழல் நடைபெறுவதாக குற்றம் சுமத்தும் அந்த அதிகாரிகள், சுகாதாரத்துறையின் பயன்பாட்டிற்காக மாநிலம் முழுவதற்கும் தேவையான பதிவேடுகள், மருத்துவச் சிகிச்சை விளக்க கையேடுகள் உள்ளிட்டவை, ராயப்பேட்டையில் உள்ள செல்ல பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிரிண்ட் விஷன் என்று தனியாருக்கு சொந்தமான அச்சகத்தில்தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்துகிறார்கள்.

மாவட்டந்தோறும் கூட்டுறவு அச்சகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மருத்துவக் குறிப்பேடுகள், சென்னையில் உள்ள தனியார் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி கூடுதல் செலவினங்களை ஏற்படுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள், திமுக ஆட்சியிலும் திருந்தவில்லை என்கிறார்கள். இதுபோன்று சுகாதாரத்துறையில் நிர்வாக ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள், மருந்து மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கவனத்திற்கே வருவதில்லை என்கிறார்கள் அந்த நேர்மையான அதிகாரிகள்.

இதுபோன்ற நிர்வாக பிரிவுகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை செய்து கொண்டிருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இடையேயான பணிமாறுதல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெறுவதற்கு, எந்தவொரு அதிகாரியிடம் இருந்தும் லஞ்சம் பெறக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்பதுதான் இன்றைய ஆச்சரியமான தகவல்…

கொரோனோ காலத்தில் உயிரைப் பணையம் வைத்து போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கான பணிமாறுதல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் கறார் காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியைப் போல, பணியிட மாறுதலுக்கு சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கோ, அந்த துறையைச் சேர்ந்த அமைச்சருக்கோ லஞ்சம் கொடுத்ததைப் போல திமுக ஆட்சியில் நடக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் முதல்வர் அலுவலக அதிகாரிகள்.

முதல்வரின் உத்தரவை அறிந்து, சுகாதாரத்துறையில் உள்ள துணை இயக்குனர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கான பணி மாறுதல் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது குறித்து சென்னை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். 2 ஆம் நாளாக இன்றும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.


சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கான பணிமாறுதல்களை, கலந்தாய்வு மூலம் நடத்த திமுக அரசு எடுத்துள்ள முயற்சியை வரவேற்கும் துணை இயக்குனர்கள், பணி மாறுதலுக்காக உருவாக்கப்பட்டுள்ள சில நிபந்தனைககள், நேர்மையான அதிகாரிகளுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள்.


பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கடுமையாக எதிர்க்கும் துணை இயக்குனர்கள் பலர், கடந்த அதிமுக ஆட்சியில் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட ரூபாயை லஞ்சமாக வழங்கி, மாமூல் அதிகமாக கிடைக்கும் மாவட்டங்களில்தான் பல ஆண்டுகளாக பணியாற்றினார்கள்.

அப்படியிருக்கையில், சீனியார்ட்டி அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கே பணிமாறுதல் வழங்கப்படும் என்றால், துணை இயக்குனர்களாக புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அவர்களின் பிரதான குற்றச்சாட்டு.


அதற்கடுத்து, துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகி தண்டனைப் பெற்றிருப்பவர்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கி, ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் விசாரணையை எதிர்கொண்டிருப்பவர்களும், இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு காணும் நேர்மையான நிர்வாகத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்கிறார்கள்.

ஊழல் தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளை, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதும் நேர்மையான அதிகாரிகளின் வேண்டுகோளாக உள்ளது. தங்கள் மீதான முறைகேடு புகாரில் இருந்து விடுதலைப் பெற்ற பிறகே, அந்த அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பதுதான் நேர்மையான அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது

இதற்கு மேலாக, சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் பணியிடம் மாறுதலுக்காக பெரும்பான்மையான துணை இயக்குனர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சருக்கு குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாயும் லஞ்சமாக கொடுத்துதான், உரிய பணியிட மாறுதல்களை பெற்றுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி நடைமுறைப் போலவே இப்போதும், லட்சக்கணக்கில் லஞ்சம் பணம் கொடுக்க தயாராக இருக்கும் போதும், அதுபோன்ற கோரிக்கைகளோடு தன்னை வந்து சந்திக்க கூடாது என்று சிவந்த கண்களோடு கூறியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம். வீடு தேடி வரும் மஹாலட்சுமியை வேண்டாம் என்று சொல்கிற மனதைரியம் கொண்ட அமைச்சர் ஒருவரை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம் என்று பெருமிதமாக கூறுகிறார்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் சிலர்.

சுகாதாரத்துறையில் இன்றைக்கு நடைபெறும் எல்லா குழப்பங்களுக்கும் காரணமாக இருப்பவர் என்று ஒரே ஒரு அதிகாரியைத்தான் சுட்டி காட்டுகிறார்கள். முந்தைய திமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் செல்வவினாயகம். முந்தைய அதிமுக ஆட்சியில்தான் அவர் மீண்டும் பணியில் சேருகிறார். இன்றைக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குனராக உள்ள அவர், அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு தவறான ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்பதுதான் பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு.

தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், துறை ரீதியான பெரும்பாலான நடவடிக்கைகளில் ஒதுக்கி இருப்பதாகவும், கவுன்சிலிங் மூலம் பணிமாறுதல் செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையிலும் அவரின் பங்கு இல்லை என்று கூறுபவர்கள், ஒரு வருடத்திற்குள்ளாக பணிமாறுதல் பெற்று, அந்தந்த மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் துணை இயக்குனர்களை தேவையின்றி தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். ஆனால், அவரின் ஆலோசனைகள் அம்பலத்தில் ஏறவில்லை என்றும் வருத்தத்தோடு பதிவு செய்கிறார்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள்.