Sat. Nov 23rd, 2024

“ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34ஊழல் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்…

முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையை சீரழித்து, சின்னாபின்னமாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆசியோடு ஆவின் நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக தகுந்த ஆதாரங்களோடு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்க கோரி புதிய அரசிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த நந்தகோபால் அவர்கள் கடந்த மாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை தமிழக அரசு நியமனம் செய்தது.

புதிய நிர்வாக இயக்குனராக திரு கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து அதில் முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 18கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி வந்த C/F ஏஜென்ட் முறையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆவினில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு காரணமாக இருந்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்ட விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஊழல் அதிகாரிகளான பொதுமேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்றும் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு வந்த அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஐஏஎஸ்.ஸிடம், தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை முன் வைத்தோம்.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து நேற்று (17.07.2021) உத்தரவிட்டுள்ள நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஐஏஎஸ்.ஸுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரம் ஆவினில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட முறைகேடுகளில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொன்னுசாமி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்…