தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வரன்முறை நடைபெறாததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டது. இந்த நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். செப்டம்பர் 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது.
குற்றச்சாட்டுகளை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படும் பணி விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.