கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்…
கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெருமளவு குறைந்து விட்டாலும் கூட, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில்தான் இருந்து வருகிறது.
அதன் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்களும், வணிகர்களும் எச்சரிக்கையுணர்வுடனேயே கடைப்பிடித்து வர வேண்டும் என தமிழக அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ வாயிலாக பொதுமக்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முகக் கவசமும், தனி மனித இடைவெளியே கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முக்கியமான ஆயுதம் என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனோ தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் கவனத்துடன் கடைப்பிடித்து வர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
எவ்வளவுதான் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் திரும்ப திரும்ப வலியுறுத்தி வந்தாலும், பொதமக்களிடம் காணப்படும் அலட்சியம், 3 வது அலையை தானாக வரவழைத்து விடுமோ என்ற அச்சம், சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ஓராண்டுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான அலுவலர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இப்படிபட்ட தருணத்தில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில், ஜவுளிக்கடைகள், தங்க நகை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு தளர்வில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அன்றாட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கொரோனோ தடுப்பு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்று நிறைய புகார்கள், தமிழக அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிலையமான லெஜண்ட் சரவணா ஸ்டோரில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி பொதுமக்களை கடைக்குள் அனுமதித்த காரணத்திற்காக, அந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி அதிகரிகள், விதிமுறைகளை மீறிய அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.