தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40 சதவிகித கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் 40 சதவிகித கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2 மாதத்திற்குள் 35 சதவிகித கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எஞ்சிய 25 சதவிகித கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 சதவிகித கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி, சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்தச் சொல்லி அழுத்தம் தருவதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் கட்டண வசூலை முறைப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.