Sat. Nov 23rd, 2024

ஆடி கார் மட்டுமே எங்களிடம் உள்ளது என்றும், சொகுசு கார் எங்களிடம் இல்லை என்றும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “யூடியூப் சேனலை தொடங்கிய மதன், அதில் பப்ஜி கேம் விளையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்தச் சொத்துக்களையும் வாங்கவில்லை. எங்களிடம் இரண்டு சொகுசு கார்கள் இருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது.

சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டில் கூட குடியிருக்கவில்லை. தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் வேலைப்பார்த்து வந்தார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் ஓய்வு எடுப்பார். பார்வையாளர்கள், சூப்பர் சார்ட்டிங் மூலம்தான் எங்களுக்கு வருமானம் கிடைத்தது.

தற்போது யூடியூப் சேனலை முடக்கம் செய்து விட்டார்கள். என்னுடைய டெபிட் கார்டு, வங்கி கணக்கு, வீட்டின் சாவி எல்லாம் போலீசாரிடம்தான் இருக்கிறது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய வங்கி கணக்கை மதன் பயன்படுத்தியதால்தான் இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். நான், 8 மாத கைக்குழந்தையுடன்தான் விசாரணைக்கு சென்றேன்.

நான் பப்ஜி கேம் விளையாடியதில்லை. மதனுடன் லைவ் சாட்டிங்களில் நான் பேசுவதாக தகவல் வெளியானது. அது, என்னுடைய வாய்ஸ் இல்லை. நான் லைவ்வில் அவருடன் பேசியதில்லை எங்கள் மீது 200-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்ததாக சொல்கிறார்கள். அதற்காகத்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தேன். இங்கு வந்தபோதுதான் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதனை போலீசார் கைது செய்த தகவல் கிடைத்தது. அவர் மீது எப்படி குண்டாஸ் போட்டார்கள் எனத் தெரியவில்லை. அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நாங்கள் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.