Wed. May 8th, 2024

பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பிளஸ 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டுவிடும். மேலும், சி.பி.எஸ்.இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.

இதன் காரணமாக, ஜூலை 31ம் தேதிக்குப் பிறகுதான் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கிடையே சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முன்கூட்டியே தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.

சி.பி.எஸ்.இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வெளியான பின்னர் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும். ஆகஸ்டு 1ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவாகத் தெரிவித்துள்ளார்.

எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதியிலில் இருந்துதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசின் உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படுவார்கள்.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும். சி.பி.எஸ்.இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் பின்பற்றப்படும்.

3 ஆம் அலை வருவதாகச் சொல்கிறார்கள். அது வராமல் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பம். வழக்கமாக ஜூலையில் துவங்க வேண்டிய கல்லூரி, இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.