Sun. Nov 24th, 2024

தீவிர நோய் தாக்குதல் தன்மை கொண்ட டெல்டா பிளஸ் வைரஸ் தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 48 பேர் புதிய வகையான டெல்டா பிளஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையொட்டி, டெல்டா பிளஸ் தொற்று மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட 11 மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரம், ஒடிஸா, ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிங்களிலும் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அறிவுரை வழங்கி உள்ளது.

‘டெல்டா பிளஸ்’ வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை காஞ்சிபுரம், மதுரை பகுதிகளில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு முன்பாக, தமிழக சுகாதாரத்துறை டெல்டா பிளஸ் கொரோனோ தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால், புதிய வகையான டெல்டா பிளஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.