Mon. May 6th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில், அனைத்து மாவட்டங்களிலும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதைப் போல, பெரும்பாலான மாவட்டங்களில் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போல, நேரடி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேடி தேடி பணியமர்த்தப்பட்டுள்ளது, நேர்மையான, தூய்மையான, விரைவான நிர்வாகத்தை எதிர்பார்க்கும் சமூக ஆர்வலர்களிடமும், அரசியல் ஆய்வாளர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதைவிட சிறப்பாக, மாவட்ட ஆட்சித்தலைவராக 11 பெண் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தை கடந்தும் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்ணியவாதிகள், பெண் அறிஞர்கள், கள ஆய்வாளர்கள் போன்றவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தனிப்பட்ட ரீதியலான மதிப்பையும், எதிர்பார்ப்பையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்று 50 நாட்களை கடப்பதற்கு முன்பாகவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்கொண்ட பாதையில் பயணிக்க தொடங்கியிருக்கிறார். தமிழக அரசியலில் இது புதியதொரு மாற்றம் என்றெல்லாம், அறிஞர்களிடமும், கல்வியாளர்களிடமும், சமூக பற்றாளர்களிடம் புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

என்னதான் பௌர்ணமியாக இருந்தாலும், கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கரும்புள்ளிகள் தோன்றி மறைவதைப் போல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றிரண்டு விமர்சனங்களும் அடிக்கடி எழுந்து கொண்டே இருக்கிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்சியாளர்களாக நியமித்த போதும், 11 மாவட்டங்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களாக பணிபுரிகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தாலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மீதான விமர்சனத்தில் நியாயம் இல்லை என்று புறம்தள்ளிவிட முடியாத அளவுக்குதான் உள்ளது.

நீலகிரி ஆட்சியராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 தேதி பதவியேற்றார், ஜெ. இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ். அவரின் பணி, வரும் 10 ஆம் தேதியோடு நான்காண்டுகள் நிறைவடைகின்றன. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தனி அதிகாரியாக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யா, செல்வி ஜெயலலிதா மறைந்து 7 மாதங்கள் கடந்த பிறகு, நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றவுடன் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்படுகிறார் அவர்.

செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் தலைமைச் செயலகத்தில் கொடி கட்டி பறந்தவர் இன்னசென்ட் திவ்யா. அப்போதைய தலைமைச் செயலாளர்கள், துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைத்து பெருமக்களின் ஜாதகமும் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.ஸுக்கு அத்துபடி. உச்சபட்ச அதிகார பீடத்தின் நம்பிக்கைக்குரியவராக கோலோச்சிய இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.ஸின் மீதான மரியாதையின் காரணமாகவே, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.ஸை பணியில் அமர்த்தினார் என்ற பேச்சு, அப்போதே பரவலாக எழுந்தது.

அதற்கு காரணம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 பிப்ரவரியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். அடுத்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை மறறும் கொலை சம்பவம் நடக்கிறது.

அந்த நிகழ்வு நடந்த சிறிது நாட்களுக்குள்ளாகவே, அந்த இரட்டை சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரின் மரணத்தோடு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு உள்ளதாக கனகராஜின் சகோதரர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

இப்படி, கோட நாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் நீலகிரி மாவட்டம் கொதி நிலையில் இருந்த நேரத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியில் அமர்த்தப்பட்டவர் இன்னசென்ட் திவ்யா. இப்படிபட்ட பின்னணியோடு, கடந்த நான்காண்டு கால ஆட்சியில், இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.ஸின் தனிப்பட்ட சாதனைகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் இருக்கிறது.

வனப்பிரதேசங்களில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட தனியார் விடுதிகளுக்கு சீல் வைத்தது, வன விலங்குகளை சித்ரவதை செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கியது உள்ளிட்டவற்றை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ்.ஸின் சாதனையாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தவிர, அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து போனது இல்லை என்பதையும் முக்கியமாக சுட்டிக்காட்டுகிறார்கள் உதகையில் உள்ள சமூக ஆர்வலர்கள். அதற்கு காரணம், மறைந்த செல்வி ஜெயலலிதாவிடம் தனி அதிகாரியாக பணியாற்றியதால், கடந்த அதிமுக ஆட்சியின் போது, உள்ளூரில் உள்ள அதிமுக பிரபலங்கள், அவரிடம் தங்கள் அரசியல் செல்வாக்கை காட்ட முடியாமல் போனதுதான் காரணம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எவ்வளவு திறமையான அதிகாரியாக இருந்தாலும் கூட, ஒரு மாவட்டத்தில் ஆட்சியராக அதிகபட்சமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டால், அந்த அதிகாரியை, பணியிடம் மாற்றுவதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இவரை விட திறமையான அதிகாரியாக, கோவை மாவட்டத்திற்கு நாகராஜன் ஐஏஎஸ்.ஸை தேர்தல் ஆணையம் நியமித்தது. செயலாளர் அந்தஸ்திலான அதிகாரியாக அவர் இருந்தாலும் கூட, கோவை மாவட்டத்தில் அப்போதைய அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகார திமிரை அடக்கி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டினார். சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாகவே நடைபெற்றது.

நாகராஜன் ஐஏஎஸ்….

அதன்பிறகு கொரோனோ காலத்திலும் கூட, இரவு பகல் பாராமல் உழைத்தார் நாகராஜன் ஐஏஎஸ். கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் அலட்சியமாக பணியாற்றுகிறார்கள் என்ற புகார் வந்ததையடுத்து, அவரே நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையின் நுழைவு வாயிலில் சேர் ஒன்றை போட்டு 3 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே அமர்ந்து, அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு கிலியை ஏற்படுத்தினார்.

கொரோனோ தொற்று அதிகமாக இருப்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல், நாகராஜ்ன் ஐஏஎஸ்.ஸை உடனடியாக பணிமாறுதல் செய்தனர். இவரைப் போல துணிச்சலாகவும், நேர்மையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த பல மாவட்ட ஆட்சியர்களை எல்லாம் பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், 4 ஆண்டுகாலம் பணியை முடிக்கவுள்ள நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மீது மட்டும் தனிப்பட்ட முறையில் என்ன கரிசனம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் உதகையில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

இதே காலக்கட்டத்தில் மற்ற மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட விட்டு வைக்காமல் பணியிட மாற்றம் செய்ததால்தான், இன்னசென்ட் திவ்யாவுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது? தலைமைச் செயலகத்தில் உள்ள உயரதிகாரிகளின் அதீத செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறாரா இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் என்று நீலகிரி மாவட்டத்தில் அவரின் கீழ் பணியாற்றும் மற்ற அதிகாரிகள் பயந்து போய் இருக்கிறார்கள் என்றும் பொங்குகிறார்கள் நீலகிரி மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

அவர்களின் கேள்வியில் நியாயம் இருப்பதாகதான் தெரிகிறது….