Sun. Nov 24th, 2024

வி.கே. சசிகலாவின் ஆடியோ பேச்சைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து வருகிறார்களோ இல்லையோ, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அவரது விசுவாசக் கூட்டமும் அலறத் தொடங்கிவிட்டது என்பதை, விழுப்புரத்திலும் சேலத்திலும் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அதிமுக தீர்மானங்களே எடுத்துக் காட்டாய் அமைந்துவிட்டன.

அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டு வந்த அதே நேரத்தில், வி.கே.சசிகலா, ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்து அரசியலை செய்ய தொடங்கிவிட்டார். 1989 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக பிளவைச் சந்தித்த போது, முன்னணித் தலைவர்களான நாவலர் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோரை நீக்கினார் அப்போதைய பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா.

அவர்கள் அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்று தனி அணி கண்ட போது கூட ஜெயலலிதா, துளியும் அச்சமடையவில்லை. தன்னுடைய ஆளுமையை ஏற்று தொண்டர்கள் தன் பின்னால் அணிவகுப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தவர் செல்வி ஜெயலலிதா.

1991 ஆம் ஆண்டிற்குப் பிறகும் அதிமுக.வில் இருந்து முன்னணி தலைவர்கள் வேலூர் விஸ்வநாதன், அழகு திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் அதிமுக.வில் இருந்து அதிரடியாக நீக்கியவர் செல்வி ஜெயலலிதா. அப்போதும்கூட, அதிமுக தொண்டர்கள் முழுமையாக ஜெயலலிதாவை ஆதரித்தே நின்றார்கள். தன்னுடைய ஆளுமைத்திறனே தன்னையும், அதிமுக.வையும் காப்பாற்றும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை செல்வி ஜெயலலிதாவுக்கு இருந்தது.

ஆனால், கடந்த நான்காண்டுகளில் உட்கட்சி எதிர்ப்பு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடி உள்ளிட்டவற்றை எல்லாம் சமாளித்து அதிமுக ஆட்சியை நடத்தி காட்டிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாள்தோறும் ஆடியோ வெளியிட்டு வரும் வி.கே.சசிகலாவை கண்டு மிகவும் பயந்து போய் உள்ளார் என்பதை அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வி.கே.சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதோடு நிறுத்திக் கொள்ளாமல், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, வி.கே.சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நடவடிக்கைகளை தொடங்கி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சென்னை திரும்பியபோது எழுச்சிமிகுந்த கூட்டத்தை கூட்டியதைப் போல, தற்போதும் வி.கே.சசிகலா கூட்டத்தை கூட்டி, மாநிலம் முழுவம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக.வுக்குள் பிளவை ஏற்படுத்திவிடுவார் என்று அச்சப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அ.ம.மு.க நிர்வாகிகள்.

வி.கே.சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்களை தூண்டிவிட்டு, எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வைப்பதற்கு மற்றொரு காரணம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய நிலையை வெளிப்படையாக தெரிவிக்காமல், ஒருவிதமான மவுனத்தோடு இருப்பதைக் கண்டும் எடப்பாடி பழனிசாமி பதற்றமாகிவிட்டார் என்றும் இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்டால்தான், ஒட்டுமொத்த அதிமுக.வும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் அதிமுக முழுமையாக இருக்கிறது என்று அர்த்தமாகும். ஒரு சில மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றால், அந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் எல்லாம் வி.கே.சசிகலா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிவிடும்.

இப்படியொரு அரசியல் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து இருக்க கூடாது. பொதுவெளிக்கு சசிகலா வரும் போது அவருக்கு ஆதரவாக எத்தனை அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளப்போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள முனைந்திருந்தால், இ.பி.எஸ்.ஸின் சாணக்கியத்தனம் அதிமுக தொண்டர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறக் கூடும்.

தற்போதைய சூழலில், வி.கே.சசிகலா எந்தளவுக்கு களத்திற்கு வந்து, ஆதரவாளர்களை திரட்டி, அதிமுக.வுக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதுதான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இரட்டை தலைமைக்கு நல்லது. அதை தவிர்த்து, வி.கே.சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவுக்கு எதிராகவும் ரியாக்ஷன் காட்டிக் கொண்டிருந்தால், அரண்டவன் கண்ணுக்கு இருட்டை கண்டால் பயம் போல, இ.பி.எஸ். நிலை பரிதாபமாகிவிடும்.

தன்னை கண்டு எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டும். பதற வேண்டும் என்பதுதான் வி.கே.சசிகலாவின் நோக்கம். கிட்டதட்ட அதில் பாதி வெற்றியைப் பெற்றுவிட்டார் வி.கே.சசிகலா. மறைந்து நின்று சசிகலா போர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, காற்றோடு மல்லுக்கட்டுவதைப் போல, காற்றுக்கு எதிராக கத்தியை வீசிக் கொண்டிருக்கிறார்.

இப்படி கத்தி வீசி களைந்து போய் நிற்கிற போது, திடீரென்று பிப்ரவரி 8 ஆம் தேதி பெரும் திரளான கூட்டத்தை கூட்டியதைப் போல, பொதுவெளிக்கு வந்து தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை பெருமளவில் திரட்டி , எடப்பாடி பழனிசாமியை ஒரே அடியாக சசிகலா வீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஒரே மூச்சில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் தற்போதைய பயத்தை விரிவாக எடுத்துரைத்தார் தென்மாவட்ட அ.ம.மு.க முன்னணி நிர்வாகி.

வி.கே.சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கத்தியை வீசிக் கொண்டிருக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், ஓரமாக நின்று, இருவருக்கு இடையேயான மோதலை ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறார். இருவரில் யார் கை உயருகிறதோ, அந்த பக்கம் தாவிவிடுவார் ஓ.பிஎஸ். என்கிறார்கள் வடமாவட்ட அதிமுக நிர்வாகிகள்.