தமிழக அரசுக்கு சிந்தாமல் சிதறாமல் முழுமையாக வருவாய் வருகிறது என்றால், அது டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மூலம் மட்டும்தான். ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருவதால்தான், எண்ணற்ற இலவசங்களை மக்களுக்கு எந்தவொரு ஆளும்கட்சியாலும் வாரி வழங்க முடிகிறது. மதுபானங்கள் விற்பனை மூலம் நேரடியாக அரசுக்கு வருவாய் கிடைத்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், டாஸ்மாக் மதுபானக் கடைகளையொட்டி இயங்கும் பார்கள் மூலம் (மது அருந்தும் இடம்) அரசுக்கும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பணமழை கொட்டுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில், மதுபான பார்களை முறையாக ஏலம் விடாததால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தாலும், அதிமுக நிர்வாகிகளை சந்தோஷப்படுத்தும் வகையில் தெருவுக்கு தெரு, சந்துக்கடை திறந்து கொள்ள அனுமதித்ததும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு இரவு நேரங்களில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அனுமதித்ததும், முந்தைய அதிமுக ஆட்சிக்கு பொதுமக்களிடம் பெருமளவில் கெட்டப் பெயரை தேடித் தந்தது. மேலும், சந்துக் கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதங்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும் பெரியளவில் ஏற்பட்டது.
தற்போதைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான விற்பனையை சட்டத்திற்குட்பட்டு முறையாக அமல்படுத்த வேண்டும், சந்துக்கடை போன்ற எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் திமுக நிர்வாகிகள் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், டாஸ்மாக் துறையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக கால தில்லுமுல்லுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிவிட்டதாக, டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் நேர்மையான அலுவலர்கள் உற்சாகமாக தகவல் தெரிவிக்கின்றனர்.
விபரமாகச் சொல்லுங்கள் என கேட்டோம். அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள்தோறும் விற்பனையாகும் விவரங்களை அறிக்கையாக கேட்டிருக்கிறார், அமைச்சர் செந்தில்பாலாஜி. அதேபோல, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் பார்கள் எப்படி ஏலம் விடப்பட்டது, அதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு போன்ற விவரங்களையும் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சரின் அதிரடியான உத்தரவைக் கேட்டு, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் சிவக்குமார், ஜோதிசங்கர் ஆகிய இரண்டு அலுவலர்களும் ஆடிப் போய்விட்டார்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த இரண்டு அலுவலர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. இவர்கள் சொல்வதைத்தான் அமைச்சர்கள் கேட்டு கொண்டார்கள். அரசுக்கு வரும் வருவாயை அமைச்சர்களுக்கும் ஆளும்கட்சிக்கும் மடை மாற்றி விடும் வகையில் ஆலோசனைகளை கூறுவதுதான் இந்த இரண்டு அலுவலர்களின் முழுநேர பணியாகும். ஆட்சியாளர்களுக்கு சட்டவிரோமாக பணம் வரும் வழியை காட்டும் இந்த இரண்டு அலுவலர்களும், அமைச்சர், உயர் அதிகாரிகளின் நிழலில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல கோடியை ரூபாயை சுருட்டியிருக்கிறார்கள். இப்படி டாஸ்மாக் கடைகள் மூலம் கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை லஞ்சமாக மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சென்றிருக்கிறது என்ற தகவலை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிர்ச்சியாகிவிட்டார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பார்கள் ஏலம் விட்டதில் நடந்த முறைகளைக் கண்டு கொதித்துப் போன அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுபான பார்கள் ஏலம் விடுவதில் பழைய நடைமுறையை மாற்றிவிட்டு, சல்லிக்காசு கூட யாருக்கும் லஞ்சமாக போகாமல், ஒட்டுமொத்த பணமும், அரசு கஜானாவுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய அமைச்சர் பி.தங்கமணியின் உத்தரவைக் கேட்டு, டாஸ்மாக் பார்களுக்கு முழுமையான ஏலம் நடத்தப்படவில்லை.
ஒரு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தால், 50, 60 கடைகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏலம் நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள கடைகளில் எல்லாம், அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளே ஏலமே எடுக்காமல் சட்டவிரோதமாக பார்களை திறந்து நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாயாக கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய், அதிமுக.வினருக்கு சென்றுவிட்டது.
இப்படி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஏல முறையை கைவிட்டுவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒருதொகையை நிர்ணயித்து கட்டணமாக வசூலிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தீர்மானித்துவிட்டார்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், மாநகராட்சிப் பகுதியில் ஒரு கடையில் நாள்தோறும் 5 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படுகிறது என்றால், அந்த தொகையை அடிப்படையாக வைத்து, அதற்கு ஏற்ப ஏல உரிமைக்கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இதன் மூலம் அரசுக்கு நேரடியாக ஏலத்தொகை கிடைத்துவிடும் என்பது ஒரு நன்மை என்று சொன்னால், மற்றொருபுறம் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் திமுக நிர்வாகிகளுக்கு பார் மூலம் வருவாய் கிடைக்கும். ஓராண்டிற்கு 5 ஆயிரம் பேர் என்றால், ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் திமுக நிர்வாகிகள், பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றம் காண வழிவகுக்கும்.
அதற்கு மேலாக, குடிமகன்களுக்கும் பல நண்மைகள் கிடைக்கும். நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கும் போது பாரின் உரிமையாளர்கள், அங்கு விற்கப்படும் திண்பன்டங்களையும் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முன்வருவார்கள். இப்படி ஒரே கல்லில் பல நன்மைகளை செய்யும் வகையில் தீர்மானத்தோடு அமைச்சர் செந்தில் பாலாஜி பணியாற்றுவது, டாஸ்டாக் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் நேர்மையான அலுவலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று ஒரே மூச்சில் கூறினார்கள் டாஸ்மாக் அலுவலர்கள்.