Sat. Nov 23rd, 2024

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், அடக்கி வைத்திருந்த ஆதங்கத்திற்கு எல்லாம் விடியல் காணும் வகையில் வெற்றிக் கொண்டாட்டத்தை தூள் கிளப்ப வேண்டும் என திட்டம் போட்டிருந்த திமுக நிர்வாகிகளுக்கு, கொரோனோ எனும் நோய்த் தொற்று பேரிடியாக விழுந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்து விட்ட பிறகும், திமுக பெற்ற வெற்றியையும், பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த தளபதி மு.க.ஸ்டாலின், முதல்முறையாக அதுவும் முதல் அமைச்சராக பதவியேற்றதை உணர்ச்சிப் பொங்க கொண்டாட முடியாத அளவிற்கு தடை போட்டிருப்பதை நினைத்து நினைத்து நித்தம் நித்தம் புளுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்.

வெளிப்படுத்த முடியாத அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கில் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருக்கும் திமுக உடன்பிறப்புகள், தங்கள் மாவட்டத்தை, தங்கள் ஊரைத் தேடி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற வேளையிலும் ஆர்ப்பரித்து நின்று எழுச்சி மிகு வரவேற்பை வழங்குவதற்கும் திமுக தலைமையில் இருந்தே தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டு கொந்தளிக்கிறார்கள். திமுக வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை இதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறுகிறார்கள் திமுக முன்னணி தலைவர்கள்.

தி.மு.க. தலைவர் வருகிறார்…வரவேற்க வா அடலேறுகளே என்று கிளைக்கழகம் முதல் மாவட்ட கழகம் வரை செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு வழங்க அழைத்து வர வேண்டும் என சொன்னதை மட்டுமே கேட்டு வளர்ந்த திமுக நிர்வாகிகள், முதல்முறையாக தலைவர் தளபதி வருகிறார்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.. ஆர்வக் கோளறால் ஆர்வத்துடன் வரவேற்க வந்துவிடாதீர்கள் என்று அன்புக் கட்டளை போடும் சோதனையான காலகட்டம் திமுக.வுக்கு வந்துவிட்டதே என்று பொங்குகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

திருச்சி, திருவாரூரில் இன்று சுற்றுப் பயணம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டத்திற்குச் சென்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுகிறார். 10 ஆண்டுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், நடைபெறும் முதல் வரலாற்று நிகழ்வு இது. அதைவிட முக்கியமாக, முதல்முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடும் நிகழ்வும் இதுதான். இப்படி நிறைய தடவை முதல்முறை என சொல்லும் அளவுக்கு நடைபெறும் இந்த வரலாற்று நிகழ்வுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டாம் என்று சேலம் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டம் போட்டு சொல்லியிருக்கிறார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

சேலம் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த மாவட்டத்தின் கட்சி நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மூன்று மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திமுக எம்.பி பார்த்திபன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அன்புக் கட்டளையிட்டுள்ளார். ஆர்வக் கோளாறில் திமுக நிர்வாகிகள் யாரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்துவிடாதீர்கள். அதையே காரணமாக காட்டி எதிர்க்கட்சியினர் திமுக.மீதும் திமுக அரசும் மீதும் புழுதி வாரி தூற்றுவார்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.

அமைச்சரின் வேண்டுகோளைக் கேட்டு மனம் நொந்து போன திமுக ஒன்றியச் செயலாளர்கள், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் ஊருக்கு வருகிறார். கூட்டமாகதானே சேரக் கூடாது, சரி. ஆனால், முதல்வரின் கார் பவணி வரும் சாலையில், இருபுறமும் கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி வரிசையாக நின்று திமுக கொடியேந்தி வரவேற்பு கொடுப்பதற்கு கூட அனுமதியில்லையா..ஒரு மாதமாகவெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடாதீர்கள் என்று கட்டிப் போட்டு வைத்திருப்பதற்கே பெரும் சிரமமாக இருக்கிறது. தலைவர் தளபதி எங்கள் ஊர் வழியாக செல்லும் போது மாடியில் இருந்தா வேடிக்கைப் பார்க்க முடியும்.
தலைமை போடும் கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் நாங்கள் இந்தமுறை கட்டுப்பட மாட்டோம். கொரோனோ அச்சுறுத்தலால் எங்கள் உயிர் எப்படி முக்கியமோ, அதைவிட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுப்பதும் முக்கியம். தளபதியை வரவேற்பது என்பது எங்களின் குடும்ப விழா போல கொண்டாட்டமானதுதான். அதனால், கொரோனோ நெறிமுறைகளை கடைப்பிடித்து எப்படியும் எங்கள் ஊரில் வரவேற்பு கொடுப்போம் என வீறாப்புட்ன் கூறியிருக்கிறார்கள். தலைமையின் வேண்டுகோளை மீறி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க துடிக்கும் ஒன்றியச் செயலாளர்களை, நகரக் கழக நிர்வாகிகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் சேலம் மாவட்ட திமுக முன்னணி தலைவர்கள்..