நிர்ணயிக்கப்பட்ட கால அளவை மீறி தொழிலாளர்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அதுதொடர்பான புகார்கள் இருப்பின் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கொரோனோ முதல் அலையை விட தற்போதைய இரண்டாவது அலை கொடூரமாக இருக்கிறது. இன்றைய தேதியில் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே, அவர்களது உயிருக்கு உயிரான உறவுகளையோ, நட்புகளையோ இழந்து, தீராத சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கள யதார்த்தமாக உள்ளது.
இன்றைய நாளில் கொரோனோ தொற்று பரவல் குறைந்திருந்தாலும் கூட, இதே நிலை அடுத்தடுத்த நாட்களில் நிலவுமா என்பதும் கேள்விக்குறிதான். எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், மருத்துவத்துறையாலும் தர முடியவில்லை. அரசுகளாலும் உறுதிபட தெரிவிக்க முடியவில்லை.
கொரோனோ 2 வது அலையில் முன்களப் பணியாளர்கள் ஏராளமானோர் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், முதல் வளையத்தில் இருக்கும் மருத்துவர்கள்,செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் மரணம் என்பது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அதேபோல, உயிர் பறிப்போவதை தடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தாலும்கூட விட்டில் பூச்சிகளைப் போல, மரணத்தை தேடிச் சென்று பலியாவோர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதுதான், சமூக ஆர்வலர்களிடம் காணப்படும் குமறல்கள்.
கொரோனோ தடுப்பு விதிகளில் முக்கியமாக கூறுவது இரண்டு அம்சம்தான். ஒன்று முகக்கவசம், இரண்டாவது தனிமனித இடைவெளி. இந்த இரண்டு முக்கிய விஷயங்களையும் அலட்சியமாக புறக்கணித்துவிட்டு, கூட்டமாக சேர்ந்து செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், தாங்கள் நேசித்த, உயிருக்கு உயிராக பழகிய தோழர்கள், அடுத்தடுத்த நாட்களில் கொரோனோவுக்கு பலியாகி வருவதை கண்ணால் கண்ட பிறகும் கூட, கொரோனோ நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று மூத்த ஊடகவியலாளர்கள் மனம் வெதும்பி புலம்புகிறார்கள்.
அவர்களின் குரல்கள் அம்பலத்தில் ஏறாத அளவுக்கு, 24 மணிநேர செய்தி தொலைக்காட்சிகள், தங்களின் வணிக லாபத்தை அதிகரித்துக் கொள்ள, இயந்திரதனமாக இயங்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், இளம் தலைமுறையினரை பலி கொடுக்கவும் அவர்கள் துணிந்து விட்டார்கள் என்று பொதுதளங்களில் பெரிய அளவில் விமர்சனம் வைக்கப்பட்டு வருவதை கண்டு அளவுக்கு அதிகமாக துயரப்படுகிறார்கள் முன்னணி ஊடகவியலாளர்கள். அதைப் பற்றியெல்லாம், தொலைக்காட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு துளியும் கவலை இல்லை போல.
அவர்கள் வாங்கும் சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு மட்டுமே வாங்கும் ஊடகவியாளர்கள், 24 மணிநேரமும் செய்திகளை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் விட்டில் பூச்சிகளாக உயிரை பணையம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவருமே இளைஞர்கள். 30 முதல் 40 வயதிற்குள்ளாக உள்ள அந்த ஊடகவியலாளர்கள், திருமணம் ஆகி குழந்தைகளோடு வசித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். மாதச் சம்பளம் இல்லையென்றால், குடும்பமே பட்டினி கிடக்க வேண்டும் என்ற நெருக்கடியால், அந்தந்த தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களின் நிர்ப்பந்தத்திற்கு பயந்து கொண்டு, பணிக்கு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்லா தொலைக்காட்சி ஊடகங்களிலும் இதே நிலைமைதான் என்றாலும், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் சித்ரவதைக் கூடமாகதான் இன்றைக்கு மாறியிருக்கிறது என்கிறார்கள் அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊடகவியலாளர்கள்.
குறிப்பாக செய்திகளை தயாரித்து தருகிற, செய்திப்பிரிவில் பணியாற்றுபவர்கள், 12 மணிநேரத்திற்கு மேலாக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இயல்பாக செய்தி தயாரித்து வழங்கும் பிரிவு, காற்றே புகாத வண்ணம் மூடப்பட்ட அறையில், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். , மூன்று அடிக்கு ஒன்றாக இடைவெளிவிட்டு இருக்கைகளும், கணினிகளும் நிறுவப்பட்டு, அந்த குறுகலான இடங்களில்தான் ஊடகவியலாளர்கள் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
கொரோனோ தொற்று எளிதாக பற்றக் கூடிய அளவுக்குதான், இன்றைய தொலைக்காட்சிகளின் செய்தித் தயாரிப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறையில் பத்து, பதினைந்து ஊடகவியலாளர்கள் பணியாற்றும் அளவுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது, மாத ஊதியத்திற்காக அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கைகளிலேயே விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொள் என்று சொல்லாமல் சொல்வதற்கு இணையான மனிதநேய மற்ற மனப்பாங்குதான்.
விதிவிலக்காக ஒன்றிரண்டு செய்தி நிறுவனங்கள் இருப்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஒருநாள் பணியாற்றினால், மறுநாள் விடுமுறை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இருக்கின்றன.
பொதுப்படையாக எல்லோரும் கூறும் ஒரே கருத்து, ஊடகத்தின் முதலாளியைவிட, அந்த தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் அதிகமாக முதலாளித்துவ குணத்தோடு செயல்பட்டு தங்களைப் போன்ற ஊடகவியாளர்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது. பரவலாக இதை குற்றச்சாட்டாகவே கூறுவதையும் காண முடிகிறது.
ஒரே ஒரு நிம்மதி, இதுபோன்ற சித்ரவதைக் கூடங்களாக நாளிதழ், வார இதழ் நிறுவனங்களும் இல்லை என்பதுதான்.
புதிய விடியலைக் கொடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும், எல்லா அமைச்சர்களும், நாள்தோறும் கொடுத்துக் கொண்டிருக்கும் பேட்டிகளையும் குறைத்துக் கொள்ளலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் இடத்தைப் பிடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள், உரிய தயாரிப்பு இன்றி உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதாக, ஆற்று நீர் ஆவியாவதை தடுக்க தர்மகோலை பயன்படுத்திய முன்னாள் மாண்புமிகு கிண்டல் செய்யும் அளவிற்கு நிலைமை இன்றைக்கு மாறியிருக்கும் மோசமான நிலையைக் கூட, கட்டுப்பாடுகள் மூலம் தடுக்க முடியும்…
எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால், பல ஆண்டுகளாக பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர்கள் மரணம் அடைந்த போது, அவரது இறுதிச்சடங்கிற்காக ஒத்த பைசா செலவழிக்காத தொலைக்காட்சி நிறுவனம் எல்லாம் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்காது.
கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டு கல்லெறியக் கூடாது என்ற சொல்லாடலை எல்லாம் தகர்த்து எறிய தயங்காது நல்லரசு தமிழ் செய்திகள்…
பாவப்பட்ட ஊடகவியாளர்களை வாழ விடுங்கள் ஆபிசர்ஸ்….