Thu. Apr 25th, 2024

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடன்பிறவாத சகோதரி வி.கே.சசிகலாவின் அண்மைக்கால ஆடியோ உரையாடல்கள், அதிமுக. நிர்வாகிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ, வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக நின்று பணம் பறிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன. டிடிவி தினகரனால் சாதிக்க முடியாததை, வி.கே.சசிகலா சாதித்து காட்டுவதற்காக களத்தில் குதித்துள்ளதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி, எந்த ஆயுதத்தை கையில் எடுத்து அதிமுக.வை கைப்பற்றினாரோ, அதே ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்க துணிந்துவிட்டார் வி.கே.சசிகலா என்கிறார்கள். நமது கேள்வியைக் கூட எதிர்பார்க்காமல் அவர்களே தொடர்ந்து பேசினார்கள்.

2017 ஆம் ஆண்டில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்வது உறுதியானவுடன், தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வத்தின் சதிராட்டத்தையும், மத்திய அரசின் கபளீகரத்தையும் முறியடித்து அதிமுக.வை மீட்கப் போகும் ரட்சகர் யார் என்று வி.கே.சசிகலா தேடியபோது, எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் முன்வரவில்லை. மத்திய பாஜக.வின் அசுரப் பலத்தோடு ஓ.பி.எஸ். விஸ்வரூபம் எடுத்து நின்ற போது அவரை எதிர்க்க, தாவூத் மாதிரி அசட்டு தைரியத்தோடு எடப்பாடி பழனிசாமி முன்வந்ததற்கு காரணம், அதிமுக ஆட்சியில் தான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை மட்டுமே நம்பி களம் இறங்கியதுதான்.

அன்றைய தினம், அந்த சவாலை டிடிவி தினகரன் ஏற்க தயாராக இல்லை. மூத்த அரசியல்வாதி கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கவில்லை. அன்றைக்கும் அமைச்சர்களாக இருந்த ஒருவர் கூட தயாராக இல்லை. அதிமுக.வின் தலைமைக்கு போட்டியே இல்லாத நேரத்தில், வி.கே.சசிகலாவின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்த எடப்பாடி பழனிசாமி, அன்றைக்கு இருந்த அதிமுக.எம்.எல்.ஏ., க்களுக்கு தலா ஒரு விலை வைத்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்துதான் முதல்வராக பதவியேற்றார்.

கிட்டதட்ட அதிமுக.வை விலை கொடுத்து வாங்கியதைப் போலதான் எடப்பாடி பழனிசாமி, துணிந்து பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, மத்திய பாஜக அரசை பகைத்துக் கொண்டு அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடந்து முடியுமா என்ற சவால்கள் அடுக்கடுக்காக வரிசைக்கட்டி நின்ற போதும், எதற்கும் அஞ்சாமல் 2017 பிப்ரவரியில் முதலமைச்சராக பதவியேற்றார். அன்றைய தினம் அவரது தலைமையை அனைவரும் ஏற்று, அவரை பின்தொடர்ந்தார்கள். துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் அன்றைய தினம் இருந்த போதும்கூட, ஒத்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கூட அவர் பணம் வழங்கவில்லை.

2017 ல் இருந்து இன்றைய தேதி வரை அதிமுக ஆட்சியை காப்பாற்றவும், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமல்ல. கடந்த நான்காண்டுகளில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் ஒருபக்கம் அவரை வைராக்கியம் படைத்தவரைக மாற்றிய போதும்கூட , தன்னிடம் ஒட்டிக்கொண்டு அனைத்து ஆதாயங்களையும் அனுபவித்துவிட்டு அவருக்கே துரோகம் செய்தவர்களையும் கூட பழிவாங்கவில்லை எடப்பாடி பழனிசாமி.

2019 ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் , அதே காலகட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல், 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் என மூன்று தேர்தலைகளை அதிமுக தலைமையில் சந்திக்க, அவர் கொடுத்த விலை, தமிழக அரசியலில் இதற்கு முன்பு நடந்ததில்லை. இனிவரும் காலங்களிலும் நடக்கப்போவதில்லை. பா.ம.க உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட சிரத்தை அளவுக்கு, வேறு எந்த முன்னணி தலைவர்களும் எடுத்துக் கொண்டதில்லை.

இப்படி கடந்த நான்காண்டு காலத்தில், ஆட்சியையும், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்ததன் மூலம் கிடைத்த அனுபவத்தில் புடம் போட்ட தங்கமாக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரிடமிருந்து கட்சியை கைப்பற்ற, வி.கே.சசிகலாவும்., ஓ.பி.எஸ்.ஸும் எந்தவிதமான வியூகங்களையும் வகுத்தாலும் அதையெல்லாம் தகர்த்து எறியும் வெறியோடுதான் இருக்கிறார் இ.பி.எஸ். அதிமுக.வை சிந்தாமல், சிதறாமல் காக்க எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கும் தயாராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அரசியல் சந்தையில் ஒருமுறை விலை கொடுத்து வாங்கிய பொருளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை கடந்த 4 ஆண்டு காலத்தில் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆயிரம் கோடிகளை செலவழித்து, பொதுக்குழு உறுப்பினர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்று கணக்குப் போட்டுக் கொண்டு புரோக்கர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் வி.கே.சசிகலா.

அவரிடம் அரசியல் பாடம் கற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், வி.கே.சசிகலா எந்த ரூட்டில் போவார் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி,., அதிமுக எனும் அமுதசுரபியை இரண்டாவது முறையாகவும் விற்பனைக்கு செல்வதை அவர் விரும்பவில்லை.
எதிரணியினர் எவ்வளவு விலை வைக்கிறார்களோ, அதற்கு மேலே விலை வைத்து, அதிமுக எனும் அட்சய பாத்திரத்தை பத்திரப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் இருந்து அதிமுக.வை கைப்பற்றுவது என்பது எளிதானது அல்ல..

வி.கே. சசிகலாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் அளவுக்கு தில்லு படைத்தவராக காட்சியளிக்கிறார் இ.பி.எஸ். இந்த நேரத்தில், ஓ.பி.எஸ்.ஸும் மல்லுக்கட்டுவதுதான் அதிமுக தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது, வடமாவட்டத்தில் இருக்கும் அதிமுக நிர்வாகிக்கு கூட அத்துபடி. இந்த நேரத்தில், தனது ஒரே ஆதரவாளரான மனோஜ் பாண்டியனை தூண்டிவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கே படம் காட்ட போஸ்டர் யுத்தத்தை தொடங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவரின் பாணியை இ.பி.எஸ்., கையில் எடுத்தால், அவரது சொந்த தொகுதியான போடிநாயக்கனூரிலேயே வீதி வீதியாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக இ.பி.எஸ். ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி அலப்பறை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதையெல்லாம் தாங்கும் சக்தி ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதிமுக தலைமைக் கழகத்திற்கு முன்பாக காசு கொடுத்து இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கோஷம் போட வைக்கும் ஓ.பி.எஸ்., அலுவலகத்திற்குள்ளே நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக குரல் கொடுக்க வைக்கிற துணிச்சல் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கிறதா? வரும் 14 ஆம் தேதி நடக்க இருக்கிற அதிமுக எம்.ல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒபிஎஸ் கெத்து காட்டுவாரா ?என்று ஒரே மூச்சில் ஆவேசமாக பேசி முடித்தார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.